பொருநை போற்றுதும்!
கிருஷ்ணாபுரம் வரலாற்றுப் பெருமையும் கலைச் சிறப்பும் ஆன்மீகப் பெருமிதமும் அரசியல் ஆதங்கமும் நிறைந்த ஊர். திருநெல்வேலி திருச்செந்தூர் பாதையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கும்


கிருஷ்ணாபுரம் வரலாற்றுப் பெருமையும் கலைச் சிறப்பும் ஆன்மீகப் பெருமிதமும் அரசியல் ஆதங்கமும் நிறைந்த ஊர். திருநெல்வேலி திருச்செந்தூர் பாதையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறிய ஊர். இவ்வூருக்கு நேர்கிழக்கில், சுமார் நான்கைந்து கி.மீ. தொலைவில் பொருநையாள் பாய்கிறாள்.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில், மதுரைக்கும் தென்பாண்டிப் பகுதிகளுக்கும் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் விச்வநாத நாயக்கர். தொடர்ந்து வந்த சில ஆண்டுகளில், விஜயநகரப் பேரரசு சரிந்துவிட, இவரே 1529-இல் மதுரைக்கு அரசரானார்.
மதுரையின் நாயக்க வம்சமும் ஆட்சியும் தொடங்கின. விச்வநாத நாயக்கரின் மகன் குமார கிருஷ்ணப்ப நாயக்கர். திருச்சிராப்பள்ளியைத் தலைநகராக ஆக்கிக் கொண்டாலும், தம்முடைய தந்தைக்கு உறுதுணையாக இருந்த அரியநாத முதலியாரோடு இணைந்து, மதுரை-நெல்லைப் பகுதிகளின் அரசை விரிவுபடுத்திப் பற்பல நற்செயல்களையும் செய்தவர்.
கிருஷ்ணப்ப நாயக்கரால் ஊர் பெரிதாக்கப்பெற்று, திருக்கோயில் திருப்பணிகளும் நடத்தப்பெற்றன. இதனாலேயே இந்த ஊருக்குக் கிருஷ்ணாபுரம் என்னும் பெயர் ஏற்பட்டது.
அரசரா, அமைச்சரா இந்த வரலாற்றைப் பற்றிச் சிற்சில கருத்து வேறுபாடுகள் உண்டு. கோயிலில் காணப்பட்ட செப்புப் பட்டயம், கிருஷ்ணப்ப நாயக்கரால் எடுப்பிக்கப்பட்ட ஊர் மற்றும் கோயில் என்றே கூறுகிறது. கிருஷ்ணப்ப நாயக்கருக்கு அமைச்சராகத் திகழ்ந்தவர் தெய்வச்சிலையார் என்றழைக்கப்பட்ட மயிலேறும் பெருமாள். இவர், அரியநாத முதலியாரின் மைத்துனரும் மருமகனும் ஆவார்.
குமாரசாமி அவதானி என்பவர், தெய்வச்சிலையாரின் கொடைத் தன்மையையும் பெருமைகளையும் வெளிக்கொணரும் நோக்கில், "தெய்வச்சிலையார் விறலி விடு தூது' என்றொரு நூல் இயற்றியுள்ளார். இந்த நூலின் கதைநாயகர் தெய்வச்சிலையார் இல்லை; நடலிங்கபட்டன் என்பவன். மாமனாரோடு பிணக்கு கொண்டு, மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு ஊரூராகத் திரிகிறான். சங்கரன்கோயிலில் விலைமகள் வசமாகிறான். ஏமாற்றப்படுகிறான். கைப்பொருளையெல்லாம் தொலைத்துவிட்டு, தன்னைப் போலவே ஏமாற்றப்பட்ட கோதண்டம் என்பவனுடன் சேர்ந்து, கிருஷ்ணாபுரத்தில் தெய்வச்சிலையாரைச் சந்திக்கிறான். பொன்னும் பொருளும் ஆதரவும் பெற்று, மனைவியை நாடிச் சென்று இணைகிறான். இந்த நூலில், தெய்வச்சிலையாரைப் பற்றிப் பாடும்பொழுது, கிருஷ்ணாபுரம் ஊரை நிர்மாணித்துத் தம்முடைய அரசர் பெயரை தெய்வச்சிலையார் சூட்டினார் என்றும், திருக்கோயிலைக் கட்டினார் என்றும் அவதானி குறிப்பிடுகிறார். விறலி விடு தூது வகையில், மிகத் தொன்மையானதாக தெய்வச்சிலையார் விறலி விடு தூது கருதப்படுகிறது.
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...