

ஒரு நாளின் ஐங்கால தொழுகைகளில் மூன்றாவது தொழுகை மாலையில் தொழும் அசர். அசர் தொழுகையின் நேரம், பயன், வரலாறு குறித்த வான்மறை குர்ஆனின் வசனங்களையும் விசனத்தில் மூழ்கி மூட நம்பிக்கைகளில் நாட்டம் கொண்டு நன்றல்லாததே நன்றென்று எண்ணி எண்ணவொண்ணா கொடுமைகளை நிகழ்த்தி நிலை கெட்டு வாழ்ந்த அரபியரைத் திருத்தி அறநெறியில் வாழ வைத்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளையும் ஆய்வோம்:
சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையுள்ள தொழுகையை நிலைநாட்ட நினைவுறுத்தும் நிறை குர்
ஆனின் 17-78 ஆவது வசனம் வரையறுக்கும் சூரியன் மறையும் வரை உள்ள நேரத்தில் தொழப்படுவது அசர் தொழுகை. நடுபகலுக்குப்பின் சாயும் சூரியன் மேற்கு நோக்கி மேலும் சாய்ந்து நிழல் அதிகம் ஆகும் பொழுது அசர் தொழப்
படுவதைச் சூரியன் சாய்ந்ததிலிருந்து என்ற
சொற்றொடர் குறிப்பிடப்படுகிறது.
தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் நீங்கள் பேணிக் கொள்ளுங்கள் என்ற 2-238 ஆவது வசனத்தில் நடுத்தொழுகை என்பது மாலை தொழுகையான அசர் தொழுகை என்று அறிஞர்கள் நிர்ணயிக்கின்றனர். வைகறை பஜ்ர் நடுபகல் லுகர் தொழுகைகள் இரவின் தொழுகைகளான அந்தி மஃரிப் முன்னிரவு இஷா தொழுகைகளுக்கு மத்தியில் மாலையில் தொழும் அசர் தொழுகையை நடுத்தொழுகை என்ற கருத்து ஏற்புடையதாக ஏற்கப்படுகிறது. நடுத் தொழுகை அசர் தொழுகையே என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை சகோதரர்களில் இப்னு உமர், இப்னு அப்பாஸ், அபூஹு ரைரா (ரலி) முதலியவர்களும் கூறினர். இக்கருத்தைச் சட்ட மேதைகளான இமாம்களும் ஆதரிக்கின்றனர்.
அகழ் போரின் பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அசர் தொழுகையை தொழ விடாது எதிரிகள் தடுத்து விட்டனர். சூரியன் மறையும் நிலையில் மஞ்சளாக சிவப்பாக மாறிவிட்டதைக் கண்ட மாநபி (ஸல்) அவர்கள் அசர் தொழுகையை தொழ விடாமல் தடுத்தவர்களுக்குத் தக்க தண்டனையை தக்கோன் அல்லாஹ் தருவானாக என்று மொழிந்ததை இயம்புகிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- முஸ்லிம். நடுத்தொழுகை என்பது அசர் தொழுகை என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கல் எடுத்து இயம்பியதைத் தொடுத்து சொல்கிறார் ஸமுரா (ரலி) நூல்- திர்மிதீ.
மாலை நேரம் தொழில், வணிகம், அலுவல்களில் மூழ்கும் நேரம். அந்நிலை அசர் தொழுகையை மறக்கடிக்கும். எனவேதான் அசர் தொழுகையை மறக்காது பேணி தொழுமாறு 2-238 ஆவது வசனம் இயம்புகிறது. புரைதா (ரலி) தலைமையில் போருக்குச் சென்ற பொழுது ஒரு நாள் மேகம் மூடியிருந்தது. அப்பொழுது புரைதா (ரலி) அசர் தொழுகையை முன்னரே தொழுதிட ஏவினார்கள். அசர் தொழுகையை பாழ்படுத்துவரின் செயல்கள் பாழ்பட்டு விடும் என்று பாச நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததை நினைவூட்டினார்கள். அறிவிப்பவர் - அபுல் மலீஹ் (ரலி) நூல் - புகாரி.
சூரிய உதயத்திற்கு முன்னும் சூரியன் மறையும் முன்னும் உங்கள் இறைவனின் புகழைக் கொண்டு தொழுவீராக! என்று ஏவும் 20- 130 ஆவது வசனத்தில் உள்ள கப்ல உரூபிஹா என்ற அரபி சொற்ரொடர் குறிப்பிடும் சூரியன் மறைவதற்கு முன்என்பது அசர் தொழுகையே. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சுவரின் மேல் நிழல் செல்வதற்குள் அசர் தொழுததை அறிவிக்கிறார்கள் அன்னை ஆயிஷா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், ஆபூதாவூத், திர்மிதீ, நஸஈ.
சூரியன் மறைவதற்கு முன் இறைவனைத் துதிக்க ஏவும் குர்ஆனின் 50 -39 ஆவது வசனம் குறிப்பிடுவது அந்தி மயங்கும் வரை தொழும் அசர் தொழுகையையே. நீங்கள் மாலையிலும் அல்லாஹ்வின் தூய்மையை தொடருங்கள் என்ற 30-17 ஆவது வசனம் அசர் தொழுகையை தொழுது தூயவன் அல்லாஹ்வின் தூய வழியைத் தொடர தூண்டுகிறது. 30-18 ஆவது வசனத்தில் வரும் அஸிய்யன் என்னும் அரபி சொல் அசர் தொழுகையை குறிப்பிடுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அசர் தொழுகையில் முதல் இரு ரக் அத்துகளில் நிற்பதில் பாதி நேரமே பின் இரு ரக் அத்துகளில் நின்றதை நினைவூட்டுகிறார் அபூஸஈத் (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத், நஸஈ. அசர் தொழுகையை முதலில் சுலைமான் நபி தொழுதார்கள். தொட்டு அறிதலில் மென்மை, வன்மை, சூடு, குளிர்ச்சி என்னும் நான்கு தன்மைகளை நன்கு உணரும் நன்றிக்காக அசர் தொழுகையில் நான்கு ரக் அத்துகள் தொழப்படுகின்றன.
அசர் தொழுகையை தவற விட்டவர் அவரின் குடும்பத்தையும் பொருளையும் பறிகொடுத்தவர் போன்றவர் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் ஆன்ற வாக்கை அறிவிப்பவர் - இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். எவர் இரு குளிர் நேர தொழுகைகளைத் தொழுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்ற நந்நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை அபூமூஸா (ரலி) அறிவிக்கிறார். நூல்- புகாரி, முஸ்லிம்.
இரண்டாவது குளிர்நேர தொழுகை அசர். சூரியன் உதயம் ஆவதற்கு முன் மறைவதற்கு முன் உள்ள தொழுகைகளைத் தொழுபவர் நரகம் புகமாட்டார் என்று இகம் புகழும் இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் ஆபூஜுஹைர் அமாரத் பின் ருவையா (ரலி) நூல் - முஸ்லிம். அசர் தொழுதவருக்கு மறுமையில் முன்கர் நக்கீர் என்ற வானவர்களின் தோற்றம் ஏற்றமாய் தெரியும். அவர்களின் கேள்வியும் எளிதில் பதிலிறுப்பதாக அமையும் என்பதை அறிந்து அசரை விடாது தொழுது இம்மை மறுமை இரண்டிலும் இறைவனின் நிறைவான நற்பேற்றினைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

