ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உயரிய வாழ்விற்கு உரியவர்கள்

ஆணாயினும் பெண்ணாயினும் பாலின பாகுபாடு இன்றி இறைவன் மீது நம்பிக்கை கொண்டு நல்லன செய்பவர்கள் இம்மை மறுமை இரண்டிலும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:36 pm

மு. அ. அபுல் அமீன்

ஆணாயினும் பெண்ணாயினும் பாலின பாகுபாடு இன்றி இறைவன் மீது நம்பிக்கை கொண்டு நல்லன செய்பவர்கள் இம்மை மறுமை இரண்டிலும் உயரிய வாழ்விற்கு உரியவர்கள் என்பதை எழில்மறை குர்ஆனின் 16-97 ஆவது வசனம், "" ஆணாயினும் பெண்ணாயினும் நம்பிக்கையுடன் நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை நல்வாழ்வு வாழ செய்வோம். அன்றி மறுமையில் அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்'' என்ற வசனம் ஏக இறைவனை ஏற்று தொடர்ந்து நற்செயல்களைச் செய்யும் ஆணும் பெண்ணும் உயரிய வாழ்விற்கு உரியவர்கள் என்று உறுதிப்படுத்துகிறது.
மனிதன் உயரிய வாழ்வையே இலக்காக கொண்டு இவ்வுலகில் இல்லத்திலும் அலுவலகங்களிலும் வணிகத்திலும் தொழிலிலும் உழைக்கிறான். குடும்பத்தினர் இடமும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் ஊராரிடமும் உயர்ந்த மதிப்பைப் பெற முயல்கிறான். அம்மதிப்பால் அவனின் சமூகத்தில் சங்கைப் படுத்தப் படுகிறான். அச்சங்கையானது அவனை உயரிய வாழ்வு வாழ வைக்கிறது. அவ்வாழ்வு அவனுக்கு பரந்த மனப்பாங்கை உண்டாக்குகிறது. அப்பரந்த பண்பு அவனுக்கு நிலையான நிம்மதியைத் தருகிறது. ஆரோக்கியம் புத்துணர்வுடன் புன்னகை முகத்தினனாய் பூரிப்புடன் வாழ செய்கிறது. இதனால் அவ்வுயரிய வாழ்வில் திடுக்கிட்டு தடுக்கி விழும் ஆபத்துகள் அணுகாது. தேவையற்ற விவகாரங்களில் தலையிட்டோ ஈடுபட்டோ சிக்கல்களில் சிக்கி தவிக்க விடாது. இப்பண்பாடும் பயனும் உயரிய வாழ்வின் உன்னதங்களாகவும் அடையாளப்படுத்துகிறது 
தப்ஸீர் இப்னு கதீர்.
இத்தகு இனிய வாழ்வை அடையும் வழியைக் காட்டுகிறது வான்மறை குர்ஆனின் 64-11 ஆவது வசனம், "" எவர் அல்லாஹ்வை நம்புகிறாரோ அவரின் உள்ளத்தை அல்லாஹ் நேரான வழியில் நடத்துகிறான்''. இறைநம்பிக்கை உள்ளத்தை விரிவாக்குகிறது. விரிவான உள்ளம் விரிசல் இல்லாத நேரான வழியைக் காட்டி உயரிய வாழ்க்கைக்கு உரியவர்களாக்குகிறது. ""எவர் நம்பிக்கையோடு நற்காரியங்கள் செய்கிறாரோ அவருக்கு நற்பாக்கியமும் நல்ல இருப்பிடமும் உண்டு'' என்ற 13-29 ஆவது வசனம் உயரிய வாழ்விற்கு உரியவர்களின் வாழ்வைக் குறிப்பிடுகிறது. அவர்கள் நல்லதை அன்றி வேறு எதையும் நாடார். வாழ்நாள் முழுமையும் அல்லாஹ்வை நம்பி நற்செயல்களை மட்டுமே செய்து வாழ்நாள் முழுமையும் வாய்மையை பேணுவர். எச்செயலையும் உரிய காலத்தில் உரிய முறையில் நிறைவேற்றுவர். "" என்னை நினைக்க தொழுகையை நிறைவேற்றுங்கள் என்று 20-14 ஆவது வசனம் உரைப்பதை உத்தம நபி (ஸல்) அவர்கள் "" அல்லாஹ்விற்கு உகந்தது உரிய நேரத்தில் தொழுவது'' என்று உறுதிபடுத்தியதை இயம்புகிறார் இப்னு மஸ்வூது (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். தொழுகையும் இறைதுதியும் உள்ளத்தில் உற்சாகத்தை உண்டாக்கும். 
பொருள் உணர்ந்து குர்ஆனை முறையோடு ஓதுபவர்கள் உயரிய வாழ்விற்கு உரியவர்கள் "" உங்களில் மிகச் சிறந்தவர் குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் கற்பிப்பவர்'' என்ற பொற்புடைய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைப் புகல்கிறார் உத்மான் (ரலி) நூல்- புகாரி. 
உயரிய வாழ்விற்கு உரிய வருமானம் ஹலாலான வழியில் ஈட்ட வேண்டும் என்று 5-88 ஆவது வசனம் இயம்புகிறது. ஹலாலான என்பது அல்லாஹ் அனுமதித்த வகையில் அதாவது அறவழியில் என்று பொருள். புற வழியில் தகாத முறையில் பொருளீட்டுவோர் உயரிய வாழ்விற்கு உரியவர்கள் அல்லர். போதும் என்ற மனம் உயரிய வாழ்விற்கு உன்னத அடிப்படை.
""கற்புடைய பெண்களுக்குக் கற்புடைய ஆண்கள் கிடைக்கப் பெறுவர். அவர்கள் தீயவர்களின் கூற்றுகளில்இருந்து தூய்மை ஆக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு'' என்ற 24-26 ஆவது வசனம் உயர் பண்பும் நற்குணமும் உடைய ஆணும் பெண்ணும் இணைந்த குடும்பம் உயரிய வாழ்வு கிடைக்கப்பெற்ற கிடைத்தற்கரிய பேறு பெற்ற குடும்பம் என்பதை எடுத்துரைக்கிறது. 
இத்தகைய குடும்பத்தில் அன்போடு அக்கறை செலுத்தும் தக்கமுறை நிலவும். இச்சூழலில் குழந்தைகளும் ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் கண்ணியமாய் வளரும். உயரிய வாழ்வின் உற்ற பயனே நற்குணமுடைய நற்செயலாற்றும் நல்ல பிள்ளைகள். இத்தகைய குழந்தை வேண்டி ஜக்காரிய நபி இறைவனிடம் இறைஞ்சியதை 3-38 ஆவது 
வசனம் இயம்புகிறது. இத்தகைய குழந்தைகளால் குடும்பத்தில் குதூகலம் நிலவும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாசமாய் பழகுவர். ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்வர். தக்க நேரத்தில் மிக்க உதவி புரிவர். 
சமூகத்தில் மற்றவர்களிடம் உற்ற நட்பு உடையோரும் உயரிய வாழ்விற்கு உரியவர்களே. அக்கறையோடு அடுத்தவரை அணுகுவது இணக்கத்தை இசைவை ஏற்படுத்தும். வாக்கை நிறைவேற்றுவது வாகான வாழ்விற்கு வழி வகுக்கும். நல்ல சொற்கள் சொல்வதை அல்லாஹ் அங்கீகரிப்பதை அறிவிக்கிறது 35-10 ஆவது வசனம். கண்ணியமான அல்லாஹ் கண்ணியமான சொற்களால் மற்றவர் மனதில் அன்பை விதைத்து பாசத்துடன் பழகுவோருக்குப் பன்மடங்கு கூலி தருவதைக் கூறுகின்றன 14-24, 25 ஆவது வசனங்கள். 
மக்களோடு உற்ற நேசர்களாக உறவாடி நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்து தீயன தடுத்து நேயமுடன் உயரிய வாழ்விற்கு உரியவர்களாக உன்னதம் பெறுவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.