ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

உதவல் உவகையுறும் உயர்பெருநாள்

உண்டு கொழுத்து ஊதாரியாய் திரிந்து திண்டுகளில் தூங்கியவர்களுக்கு இல்லை ஈத் பெருநாள்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

மு. அ. அபுல் அமீன்

உண்டு கொழுத்து ஊதாரியாய் திரிந்து திண்டுகளில் தூங்கியவர்களுக்கு இல்லை ஈத் பெருநாள். அல்லாஹ்விற்காக உணவைத் துறந்து தூய அல்லாஹ்வின் நேய நினைவு நெஞ்சில் நிறைந்து உள்ளத்தை உறையாது கரையும் இரக்கத்தில் உருகி உற்றார் உறவினருக்கும் உதவி கோருபவர்களுக்கும் உதவி கோராது தீராத வேதனையை வெளிப்படுத்தாது துளியும் துயரைக் காட்டாது வாழும் வறியோரைத் தேடி சென்று தேவைக்கு உரியதைக் கொடுத்து நற்செயல் புரிந்தோருக்கே பொற்புடைய ஈதுல்பித்ர் பெருநாள்.
இந்த ஈத் பெறுநாளில் இனிய வாழ்த்துகளைத் தினமணி வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் பாங்கான மகிழ்ச்சி. ஓங்கு புகழ் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்க உறுதி பூணுவோம் இப்பெருநாளில் பேணும் தாய்நாட்டு பற்றோடு. 
ஈகை திருநாளில் குளித்து புத்தாடை அணிந்து நறுமணம் பூசி ஒருவழியில் தொழ செல்வோர் தொழுதுவிட்டு பிறிதொரு வழியில் வீடு திரும்ப வழிகாட்டிய வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வகுத்த முறையில் இரு வழிகளில் செல்வதும் திரும்புவதும் இரு வழிகளிலும் உள்ள ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் வாரி வழங்குவதற்காகவே. இதனை உறுதிபடுத்திய இரு நிகழ்வுகள். 
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகரில் அடக்கமாகியுள்ள மகான் காஜா முயினுத்தீன் சிஷ்தீ சின்னஞ்சிறு வயதில் புத்தாடை உடுத்தி புதுமணம் பூசி ஈத்கா மைதானத்திற்குத் தொழ சென்றார்கள். வழியில் பார்வையற்ற சிறுவன் ஒருவன் கிழிந்த சட்டையுடன்நிற்பதைக் கண்டு கலங்கினார்கள். அவர்கள் அணிந்த ஆடைகளில் சட்டைக்கு மேல் உள்ள கோட் போன்ற உடைகளைக் கழற்றி அப்பார்வையற்ற சிறுவனுக்கு அணிவித்து அச்சிறுவனை அவர்களுடன் ஈத்கா மைதானத்திற்கு அழைத்து சென்றார்கள்.
ஒரு பெருநாள் அன்று பெரியார் மஅரூப் கார்க்கி தெருவில் கிடந்த பேரீச்சை கொட்டைகளைப் பொறுக்கி எடுத்து கொண்டிருந்தார்கள். அதனைக் கண்ட இன்னொரு பெரியார் ஹழ்ரத் ஸிர்ரி ஸகதீ ஒரு திருநாளில் கார்க்கி தெருவில் பேரீச்சை கொட்டைகளைப் பொறுக்குவதின் காரணத்தைக் கேட்டார்கள். பெருநாளில் பெருமகிழ்வோடு புத்தாடை அணியாது அழும் இந்த அனாதைச் சிறுவனுக்குப் புத்தாடை வாங்கி கொடுப்பேன் என்று விடையளித்தார்கள். இதைக்கேட்ட ஹழ்ரத் ஸிர்ரி ஸகதீ அந்த அனாதை சிறுவனை அழைத்து சென்று அவனுக்குப் புதிய ஆடைகளும் விளையாட்டு பொருள்களும் வாங்கி கொடுத்தார்கள்.
பெருநாள் மாத சவ்வால் பிறை கண்டதிலிருந்து பொழுது புலர்ந்து வைகறை தொழுகைக்குப் பின் வானில் ஞாயிறு தோன்றி கால் மணி நேரம் கழித்து பெருநாள் தொழுகைக்குப் புறப்படுமுன் ஒவ்வொரு இஸ்லாமியரும் ஆணோ பெண்ணோ சிறியவரோ பெரியவரோ குழந்தையோ ஒவ்வொருவருக்கும் உலகின் எப்பகுதியில் வாழ்கிறாரோ அப்பகுதியில் அவர்கள் உண்ணும் உணவு தானியத்தை உண்பதுபோல் அதே தரத்தில் உள்ள உயர்தர உணவு தானியத்தை இல்லாதோருக்கும் இல்லாமையை சொல்லாது வெளிக்காட்டாது மறைத்து வாழும் வறியோருக்கும் வழங்கி அவர்களும் ஈதுல்பித்ர் பெருநாளைப் பெரு மகிழ்வோடு கொண்டாட கொடுத்து உதவ வேண்டும். உதாசீனம் கூடாது. எடுத்துக்காட்டாக நாம் சன்ன அரிசி சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டு பழுத்த புழுத்த புழு நெளியும் ரேஷன் அரிசியைப் பித்ரா தர்மமாக கொடுக்க கூடாது. நம்மைப்போல் மற்றவர்களை மதித்து மரியாதை செய்ய செப்பும் ஒப்புக் கொள்ளப்பட்ட நோன்பில் ஏற்படும் தப்புகளிலிருந்து தப்பி பிழைத்து முழு பயனையும் அடைய முழு மனதுடன் வழுவற வழங்குவதே பித்ரா தர்மம். உதவுவதில் உவகை கொள்ளும் உயரிய திருநாளே ஈதுல் பித்ர் பெருநாள். இந்நாளில் நல்குவது போல் எந்நாளும் ஏழைகளுக்கு ஏற்றதைக் கொடுத்து ஏற்றமாய் வாழ ஏற்புடையன செய்வோம். போற்றற்குரிய அல்லாஹ்வின் பொன்னான அருளைப் பெறுவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.