வாரிசு கோரா குடியரசு!
நம் நாட்டின் 69 ஆவது குடியரசு நாள் 26.1.2018 இல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும்


நம் நாட்டின் 69 ஆவது குடியரசு நாள் 26.1.2018 இல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் மன்னர்கள் ஆளும் முடியாட்சியும் சர்வாதிகாரிகளின் யதேச்சாதிகார ஆட்சியும் நடந்த காலத்தில் குடியாட்சிக்குக் கோலுôன்றிய கோமான் நபி (ஸல்) அரேபியாவில் அமைத்த ஆட்சியை ஆய்வோம்.
குருட்டு கோட்பாட்டில் உருட்டும் விழிகளுடன் மிரட்டி வாழ்ந்த முரட்டு அராபியர்களை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, திருந்தாதவர்கள் திருந்தும் வரை மக்காவை விட்டு யக்ரிப் சென்றார்கள். கொள்ளை நோயும் கொடுங்காய்ச்சலும் வாந்தி பேதியும் வாகை சூடி வலம் வந்த யத்ரிப் நகரை தூய்மை நகர் திட்டம் தீட்டி நேயமுடன் வாழும் நந்நகராக்கினார்கள். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமின்றி மக்காவை வென்றார்கள் மாநபி (ஸல்) அவர்கள். மதீனா மாநகரையே தலைநகராக்கி குடியரசை நிறுவினார்கள் நீதர் நபி (ஸல்) அவர்கள். அக்குடியரசின் ஆட்சி பொறுப்பை வகித்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள் கூட கோபுரங்களோடு ஓங்கி உயர்ந்த மாட மாளிகையில் வாழவில்லை. மணி மகுடம் தரிக்கவில்லை. மயிலாசனத்தில் அமரவில்லை. பளபளக்கும் பட்டாடைகள் அணியவில்லை. பேரீச்சை ஓலைகளால் வேய்ந்த குடிசையில் தங்கினார்கள்.பேரீச்சை குச்சிகளை இணைத்த பாயில் படுத்து உறங்கினார்கள். விழித்து எழும்பொழுது அவர்களின் உடல் முழுவதும் பேரீச்சை குச்சிகள் கிழித்த கோடுகள் காணப்படும். அரசு பணத்தில் ஆயுதம் தரித்த காவலர்கள் சூழ உலா வரவில்லை, ஏக இறை கொள்கையை ஏற்காத எதிரிகள் இருந்தனர். எனினும் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் நிராயுதபாணியாக தனியே நடந்து சென்றார்கள். சில சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து செல்லும் தோழர்களும் நிராயுதபாணியாகவே சென்றனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறந்த
பொழுது அவர்களின் மனைவி, மகள், மருமகன், வாலிப வயதை எட்டி பிடித்த பெயரன்கள் ஆளும் திறனும் ஆற்றலும் மாட்சியுடையவர்களாக மாண்பு உடையவர்களாக இருந்தனர். அவர்களில் எவரையும் ஆட்சிக்கு வாரிசுகளாக நியமிக்கவில்லை நீதர் (நபி) அவர்கள்: வாரிசுகளும் ஆட்சி உரிமையை தீரா ஆசையுடன் கோரவில்லை. வழி வழி வாரிசுகளை ஆட்சியில் அமர்த்தினால் முடியாட்சிக்கும் குடியாட்சிக்கும் வேறுபாடு என்ன? அது மக்களாட்சியின் மாறுபாடு
ஆயிடுமே.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறுதி நாள்களில் அணுக்கத் தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை இமாமாக தலைமை ஏற்று தொழுகை நடத்த பணித்தார்கள். அந்த இமாமின் பின்னால் நிற்கும் அணியில் நின்று அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். அந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் இந்த நிகழ்ச்சியை சுட்டி காட்டி அடையாளம் காட்டப்பட்ட அரசியல் வாரிசு நான்தான் என்று ஆட்சி உரிமையை கோரவில்லை.
மக்கத்திலிருந்து வந்த முஹாஜிரீன்
களும் மதீனாவில் வாழ்ந்த அன்சாரிகளும் ஒன்று கூடி ஆலோசித்தனர். அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அபூ உபைதா (ரலி) ஆகிய இருவரில் ஒருவரைக் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்க முன் மொழிந்தார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் தகுதிகளைத் தக்கபடி எடுத்து கூறியதை ஏற்று கூடியிருந்தோர் ஏக மனதாக அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைத் தேர்ந்து எடுத்தார்கள்.
காருண்ய நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் அரசின் குறைகளைக் குடிமக்கள் வயது வித்தியாசமின்றி வேறு எந்த கட்டுபாடும் தடையும் இன்றி தயங்காது கூற அந்த குடியரசில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசை எதிர்த்து பேசினால் தடா, பொடா, தடால் சட்டங்கள் பாயும் என்ற பயம் இல்லாமல் மனதில் பட்டதைத் தொட்டு காட்டினர் மக்கள். இரண்டே கால் ஆண்டு ஆட்சி செய்த பொழுது அபூபக்கர் (ரலி) பெற்ற ஊதியம் ஆறாயிரம் திர்ஹங்களை அவர்களின் தோட்டத்தை விற்று அரசு கஜானாவில் செலுத்தி அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் மரண சாசனம் செய்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகளைப் போலவே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் வாரிசு வழியில் ஆட்சி உரிமையை கோரவில்லை. மக்கள் ஏக மனதாக உமர் (ரலி) அவர்களை அடுத்த ஆட்சி பொறுப்புக்குத் தேர்ந்து எடுத்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் நந்நபி (ஸல்) அவர்களின் வழியில் நல்லாட்சி நடத்தினார்கள். ஒரு நாளைக்கு இரு திர்ஹங்கள் ஊதியமாக பெற்றார்கள். திருமணத்தில் மணமகன் மணமகளுக்குத் தரும் மஹர் - திருமண நன்கொடைக்கு வரையறை வகுத்தபொழுது வயதான மூதாட்டி எழுப்பிய எதிர்ப்பால் கலீபா உமர் (ரலி) அவர்கள் வரையறைப் படுத்தவில்லை. குடியரசில் குடிமக்களின் கருத்துக்கு மதிப்பளித்து நடைமுறை படுத்திய உமரின் உன்னத ஆட்சியை இன்றும் உலகம் உவந்து பாராட்டுகிறது. தேசதந்தை காந்தியடிகள் இந்திய ஆட்சியாளர்கள் உமரின் ஆட்சியைப் பின்பற்ற வேண்டும் என்று மாட்சியுடன் கூறினார். உமர் (ரலி) அவர்கள் இறக்கும் நிலையில் அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அடுத்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூறலாம். ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க கூடாது என்று எச்சரித்தார்கள்.
இந்திய குடியரசு முன்னேற்றத்திற்கு முயன்றுழைத்து உலகின் உன்னத நாடாக இந்தியா திகழ உறுதி பூணுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...