பொருநை போற்றுதும்!
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் என்று வழங்கப்பெறுகிற மாத்வ மடத்ரயங்களில் ஒன்றான ராயரு மடத்தின் ஆசார்யரான ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர் (1435-1490), நெடுநாட்கள் தாமிரவருணிக் கரையில் வசித்தார்


ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் என்று வழங்கப்பெறுகிற மாத்வ மடத்ரயங்களில் ஒன்றான ராயரு மடத்தின் ஆசார்யரான ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர் (1435-1490), நெடுநாட்கள் தாமிரவருணிக் கரையில் வசித்தார் (ராகவேந்திர சுவாமிக்கு முன்னதாக, இந்தப் பீடம், விபுதேந்திர பீடம் என்றே அழைக்கப்பட்டது). அதற்கு முன்னதாக, பல காலம் அஹோபிலத்தில் தவமியற்றிய இவருக்கு, பவநாசினி நதிக்கரையில் "ஷோடச பாஹு நரசிம்ஹ' விக்ரகம் (பதினாறு கர நரசிம்மர்) கிட்டியது. 14 கரங்களில் பல்வேறு விதமான ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு, அவற்றைப் பயன்படுத்தாமல், மீதமிரண்டு கரங்களால் இரணியனைக் கிழிக்கும் கோலத்தில் அமர்ந்த நரசிம்மர். தாமிரவருணிக் கரையில், தம்முடைய சீடரான ஸ்ரீ ஜிதமித்ர தீர்த்தரிடம் நரசிம்மத் திருச்சிலையை ஒப்படைத்துவிட்டு பிருந்தாவனம் புகுந்தார் விபுதேந்திரர். ராயரு மடப் பரம்பரையினரால் இன்றளவும் இந்த நரசிம்மர் ஆராதிக்கப்படுகிறார். ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தரின் மூல பிருந்தாவனம், தாமிரவருணித் தீர்த்தக்கரை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு முன்பாக அமைந்துள்ளது.
தாமிரவருணியின் கரைக்கு தியானச் சிறப்பு சேர்த்தவர்களில் தலையாயவராக நீலகண்ட தீக்ஷிதரைச் சுட்டலாம். அப்பைய தீக்ஷிதரின் தம்பி மகனான (தம்பி பேரன் என்றும் சொல்லப்படுகிறது) இவர், 1613 - ஆம் ஆண்டு அவதரித்ததாகத் தெரிகிறது. பாலாற்றங்கரை விரிஞ்சிபுரம்' அடையபலம் பகுதியைச் சேர்ந்த இவர், மதுரைவாசியானது விதியின் விளையாட்டு.
இவருடைய தந்தை இறந்தபோது உருவான சொத்துப் பிரச்னையில், உடைமைகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். சிறுவனாக இருந்த நீலகண்டன், தமக்குப் பொருட் சொத்து வேண்டாமென்று கூறி, அப்பைய தீக்ஷிதரின் ஞான உபதேசத்தையும், ஞான ஆன்மச் சொத்தையும் பெற்றுக் கொள்கிறார். தென் திசை நோக்கிப் பயணிக்க, மதுரை மன்னர் திருமலை நாயக்கர், இவருடைய ஞானத்தால் ஈர்க்கப்பட்டுத் தமது மந்திரியாகப் பொறுப்பேற்கும்படி வேண்டுகிறார். வேண்டுகோளுக்கு இணங்கி, மதுரை அரசாங்கத்தின் மந்திரியாகிறார்.
ராஜரீகக் கடமைகளில் நீலகண்ட தீக்ஷிதரின் திறமையும் செம்மையும் அரசுக்குப் பெருமை கூட்டுகின்றன. இருப்பினும், விதியின் விளையாட்டு மீண்டும் தொடங்குகிறது.
தமது புதிய அரண்மனையைக் கோலாகலமாகக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிற நாயக்க மன்னர், அங்கு தமது மற்றும் தம்முடைய தேவியின் சிலாரூபங்களை நிறுவத் தீர்மானிக்கிறார். சிலை அமைப்புப் பணிகள், பெரும்புகழ் பெற்ற சிற்பியின் தலைமையில் நடைபெறுகின்றன.
மந்திரியான தீக்ஷிதர், கட்டுமான மற்றும் சிலை அமைப்புப் பணிகளை அவ்வப்போது மேற்பார்வையிடுவது வழக்கம். என்ன காரணத்தாலோ சிலைப் பணிகள் தாமதப்பட, மேற்பார்வையிடச் செல்லும் மந்திரி, சிற்பியை அழைத்து விசாரிக்கிறார். தயக்கத்தோடு தவிக்கிறார் சிற்பி. மன்னரின் சிலையை அமைப்பதில் சிக்கல் ஏதுமில்லை. ஆயின், ராணியின் சிலை... ராணி சிலையில், தொடைப் பகுதியைச் செதுக்கும்போதெல்லாம், கல் தெறித்துத் தெறித்துப் போகிறது. ஒவ்வொரு முறையும் தாய்க்கல்லை மாற்றி... எந்த தெய்வக் குற்றமோ... இப்படியாகிறதே!
சிற்பியின் சங்கடத்தைச் செவி மடுக்கும் தீக்ஷிதர், சில கணங்கள் கண்மூடிச் சிந்திக்கிறார். பின்னர், கண்களைத் திறந்து, சிற்பியைத் தீர்க்கமாகப் பார்க்கிறார். "அப்படியே செதுக்குங்கள்; மகாராணிக்குத் தொடையில் மச்சமுண்டு. அதுவே கல் தெறிக்கிறது' என்று கூறிவிட்டுச் செல்கிறார்.
சில நாட்களுக்குப் பின்னர் சிலைப் பணிகளைப் பார்வையிட மன்னரே வர....ராணி சிலையின் அமைப்பு கருத்தில் நெருடுகிறது. ராணியின் தொடையில் மச்சம் இருப்பது மந்திரிக்கு எப்படித் தெரிந்தது? மன்னரின் ரத்தம் கொதிக்கிறது. தம்முடைய மந்திரிப் பதவியைப் பயன்படுத்தி, ராணி ஸ்நானம் செய்கையில் யாருக்கும் தெரியாமல் அந்தரமாகப் பார்த்துவிட்டார் என்று எண்ணுகிறார்.
மந்திரிக்குத் தக்க தண்டனை கொடுக்க எண்ணிய மன்னர், அதையும் செயல்படுத்துகிறார். அடுத்த நாள் காலை, வழக்கமாக தீக்ஷிதரை அழைத்துப் போவதற்கு வருகிற அரசவைத் தேர் அன்றும் வருகிறது. தேரில் வீரர்கள் இருவர் வருகின்றனர். அவர்களின் கைகளில்....பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கூர்தடி. ஆமாம், தவறான எண்ணத்தோடு தம் மனைவியை நோக்கிய மந்திரியின் (அதுதான் மன்னரின் கருத்து) பார்வையைப் பறித்துவிடுவதுதான் மன்னரின் எண்ணம்.
தேர் வருவதை மட்டும் கண்ட தீக்ஷிதர் மகள், அதில் காய்ச்சிய இரும்புடன் வீரர்கள் இருப்பதைக் காணாமல், தாழ்வாரத்திலிருந்தே குரல் கொடுத்தாளாம்: "அப்பா, உங்களை அழைத்துப் போக ரதம் வந்துவிட்டது.'
அம்பாள் பராசக்தியைப் பூஜித்துக் கொண்டிருந்த தீக்ஷிதர், உள்ளிருந்தபடியே ஞானதிருஷ்டியில் தேரைக் கண்டார்; தேர் வீரர்களைக் கண்டார்; காய்ச்சிய இரும்பையும் கண்டார். மன்னரின் உள்ளம் உணர்ந்தார்; அரச நெஞ்சத்தின் தவிப்பும் அதன் நியாயமும் புரிந்தது. தன்னுடைய ஞானக்கண், அநாவசியமான குழப்பங்களை ஏற்படுத்திவிட்டதை அறிந்தார். தமக்குத் தாமே தண்டனையிட்டுக்கொள்ள முடிவெடுத்தார். அம்பாளுக்கு தீபாராதனை காட்டிவிட்டு, அதே கற்பூரத் தீயால் தம்முடைய கண்களைச் சுட்டுக்கொண்டார். பார்வை பறிபோனது.
நடந்ததை அறிந்த அரசர், தீக்ஷிதரைத் தாம் சந்தேகித்ததை எண்ணி மனம் கலங்கினார். இத்தகைய ஞான திருஷ்டியால் எதைத்தான் காண முடியாது என்பதைப் புரிந்துகொண்டார். ஓடிவந்து காலில் பணிந்து மன்னிப்பும் கோரினார்.
அரச பணிகளைத் துறக்க முடிவெடுத்த தீக்ஷிதர், யாருடைய தொந்தரவும் இல்லாமல், ஒதுக்குப்புறமாகத் தவமிருக்க விழைந்தார். அரசாங்க இடைஞ்சல்களும் குடிபடைகளின் கேளிக்கைகளும் இல்லாமல், ஒதுங்கியிருந்து தவம் செய்வதற்காக, தீக்ஷிதருக்குத் திருமலை நாயக்க மன்னர் வழங்கிய கிராமமே, தாமிரவருணிக் கரையின் (தாழையூத்துக்கு அருகில்) பாலாமடை! சிவலீலார்ணவம், கங்காவதரணம் ஆகிய காவியங்களையும், நளசரித்ரம் என்னும் நாடகத்தையும், கலிவிடம்பனம், வைராக்ய சதகம், சாந்தி விலாஸம், சிவோத்கர்ஷ மஞ்சரி, சிவதத்வ ரஹஸ்யம், குரு தத்வ மாலிகா, ரகுவீரஸ்தவம், சண்டீரஹஸ்யம், முகுந்தவிலாஸம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
மீனாட்சியம்மையை எண்ணி ஆனந்தஸôகரஸ்தவம் என்னும் ஸ்துதியைப் பாடினார். அதில் உருகிப் போன அம்பிகை, இவருடைய கண் பார்வையை மீண்டும் கொடுத்ததாகத் தெரிகிறது.
கலி விடம்பனத்தில் கூறுகிறார்:
ந பேதவ்யம் ந போதவ்யம் ந ஸ்ராவ்யம் வாதினோ வச:
ஜடிதி ப்ரதி வக்தவ்யம் ஸபாஸý விஜிகீஷுபி:
(அச்சப்படவேண்டியதில்லை, புரிந்துகொள்ள வேண்டியதில்லை; எதிர்வாதி கூறுவதைச் செவிமடுக்கக்கூட வேண்டியதில்லை. வாதத்தில் வெற்றிபெற எண்ணுபவர் (எதுவும் தெரியாமல்) உடனடியாக எதிர்க் கூக்குரல் கொடுத்தால் போதும்).
நீலகண்ட தீக்ஷிதரின் தியானத்தைக் கலைக்கக்கூடாது என்பதற்காகப் பாலாமடையில் சேவல்கூடக் கூவாது என்பார்கள். இந்த கிராமத்திலேயே தீக்ஷிதர் சித்தியடைந்தார்.
- தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...