நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தொழுகையில் தொய்வில்லா ஈடுபாடு

தொழுகை இஸ்லாமியர்களின் இரண்டாவது கடமை. அத்தொழுகையை குறித்த நேரத்தில் குறித்தவாறு நிறைவேற்றும் நிபந்தனையுடன் கடமையாக்கப் பட்டுள்ளதைத் திடமாக தெரிவிக்கிறது

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:12 pm

மு. அ. அபுல் அமீன்

தொழுகை இஸ்லாமியர்களின் இரண்டாவது கடமை. அத்தொழுகையை குறித்த நேரத்தில் குறித்தவாறு நிறைவேற்றும் நிபந்தனையுடன் கடமையாக்கப் பட்டுள்ளதைத் திடமாக தெரிவிக்கிறது தெளிவான குர்ஆனின் 4-103 ஆவது வசனம். இவ்வாறு இறையச்சத்தோடு ஈடுபாட்டோடு ஐங்கால தொழுகையை தவறாது தொழுவதே தொய்வில்லாத தொழுகை. இது குறித்த இறைமறை குர்ஆனின் வசனங்கள், அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள் (2-3) தொழுகையை கடைபிடித்து கொள்ளுங்கள் (2-110) அனைத்து தொழுகைகளையும் நடு தொழுகையையும் நேரம் பேணி, தவறாமல் அல்லாஹ்விற்குப் பணிந்து தொழுங்கள் (2-238) தொழுகையின் நேரம் நெருங்கி எதிரிகளின் எதிர்ப்பால் பிற காரணங்களால் ஓரிடத்தில் நின்று தொழ இயலாவிடில் வாகனத்தில் இருந்தபடி தொழுங்கள் (2-239) எதிரிகளின் ஆபத்து உள்ள காலங்களில் தொழுகையை விட்டு விடாது (சுருக்கமாக ) தொழுங்கள் (4-101) போர் காலங்களில் இரு பிரிவாக பிரிந்து ஒரு குழு தொழ, மற்றொரு குழு காவல் காத்திடுங்கள். அடுத்து காவல் காத்தவர்கள் தொழுங்கள். தொழுதவர்கள் காவல் காத்திடுங்கள். (4-102) வெள்ளிக்கிழமை ஜும்ஆ (வார தொழுகை) பாங்கு சொல்லி தொழுகைக்கு அழைக்கப்பட்டால் வியாபாரங்களை விட்டு நீங்கள் தொழுகைக்கு விரைந்து செல்லுங்கள் (62- 9)
பகலில் இரு முனைகளாக காலை மாலையிலும் இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தவறாது தொழுங்கள். அதன் நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும் என்ற 11-114 ஆவது வசனம் தொய்வில்லா தொழுகையால் கிடைக்கும் நன்மைகள் தீமைகளைப் போக்கி விடுவதைப் புகல்கிறது. தொய்வில்லா தொழுகை தீமை நம்மைத் தொடாமலும் அணுகாமலும் காப்பதை அனுபவத்தில் அறியலாம். சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் லுஹர், அசர், மஃரிப், இஷா ஆகிய நேர தொழுகைகளைத் தொழுங்கள். பஜ்ர் தொழுகையையும் தொழுங்கள் என்ற 17-78 ஆவது வசனம் ஐங்கால தொழுகைகளைத் தொய்வில்லாது தொழ உரைக்கிறது.
தொய்வில்லாது ஈடுபாட்டோடு தொழுபவர்கள் பெரும் நன்மைகளை நவிலும் நற்குர்ஆனின் பொற்புடை வசனங்கள். உள்ளச்சத்தோடு தொழும் நம்பிக்கை உடையோர் வெற்றி பெற்றவர்கள் (23-1,2) தொழுகைகளை நேரம் தவறாது நியமமாக தொழுபவர்கள் சொர்க்கத்தின் உண்மையான வாரிசுகள். உயர்ந்த பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தில் நிலையாக தங்குவார்கள். (23-9 முதல் 11) மனிதனின் இலக்கு மறுமையில் சொர்க்கத்தில் சுகமாக வாழ்வது. அவ்விலக்கை அடைய தொய்வில்லா தொழுகையே துணை. "" தொழுகையை கடைபிடியுங்கள். நிச்சயமாக தொழுகை மானக்கேடான செயல்களிலிருந்தும் பாவத்தில் இருந்தும் மனிதனை விலக்கிவிடும்''. (29-45) "" நீங்கள் உங்கள் குடும்பத்தினரை, தொழ கூறுங்கள்.தொழுகையில் உறுதியாக இருங்கள். நீங்கள் தொழுவது உங்களின் நன்மைக்கும் உங்களைத் தூய்மைப் படுத்தவும்'' என்று கூறுகிறது தூய குர்ஆனின் 2-132 ஆவது வசனம்.
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு அதாவது தொடர்ந்து தொடர்புடன் இருப்பதற்குத் தொழுகையை விட சிறந்த மேலான தொடர்பு சாதனம் வேறு இல்லை. உவப்புடனும் உள்ள அச்சத்துடனும் எள்ளளவும் எப்பிழையும் ஏற்படாது தப்பாது தொய்வில்லா ஈடுபாட்டோடு தொழும் தொழுகையே இறைவனால் ஏற்கப்படும். இமாம் புகாரி (ரஹ்) தொழுது முடித்ததும் பூச்சி ஒன்று கொட்டிய வலியை உணர்வதாக கூறினார். சட்டையை கழற்றி பார்த்ததும் அவரின் உடலில் ஒரு குழவி பதினேழு முறை கொட்டிய அடையாளம் இருந்தது.
மலை உச்சியில் ஆடுகளை மேய்க்கும் இடையன் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் பொழுது தொழுகை நேரம் நெருங்கியதும் பாங்கு கூறி தொழுவதைப் பற்றி இறைவன் மகிழ்ச்சியுற்று என் இந்த அடியானை நோக்குங்கள்; இறை அச்சத்தோடு பாங்கு சொல்லி தொழுகிறார். நிச்சயமாக நான் அந்த அடியானின் பாவத்தை மன்னித்து விட்டேன். அந்த அடியானைச் சொர்க்கத்தில் சேர்ப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதைச் செவியுற்றதாக உரைக்கிறார் உக்பதுப்னு ஆமிர் (ரலி) நூல்- அபூதாவூத், நஸஈ.
பெரியார் முஜத்தித் அல்பதானி (ரஹ்) அவர்களிடம் அவர்களின் சீடர்களில் ஒருவரான மௌலானா அப்துல் வாஹித் லாகூரி (ரஹ்) சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா? என்று கேட்டார். உலகில் தொழுத தொழுகைகள் பிற அற செயல்களின் நற்பரிசே சொர்க்கம். அங்கே தொழ வேண்டியதில்லை என்ற பதிலைக் கேட்டதும் தொழாமல் நான் எப்படி வாழ்வேன் என்று ஏங்கி அழ ஆரம்பித்தார்கள் மௌலானா அப்துல் வாஹித் லாகூரி (ரஹ்).
இறைவனைப் பார்ப்பது போல் தொழ வேண்டும். அல்லது இறைவன் என்னைப் பார்க்கிறான் என்ற எண்ணத்துடன் தொழ வேண்டும். இவ்வாறு இல்லாமல் கவனம் இன்றி தொழுபவர்களுக்குக் கேடு விளையும் என்று விளம்புகிறது. விழுமிய குர்ஆனின் 107- 4 ஆவது வசனம். உலக இன்பத்தில் மூழ்கி தொழுகையை தொழாது விட்டவர்கள் இழப்பிற்கு உள்ளாவார்கள் என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 19- 59 ஆவது வசனம். தொழுகையில் ஈடுபாடு இன்றி பிறர் தொழுபவர் என்று புகல்வதற்காக- புகழப்படுவதற்காக தொழுபவர்களைச் சாடுகிறது ஈடு இணையற்ற இறைமறை குர்ஆனின் 4-142 ஆவது வசனம், "" நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கிறார்கள். அவனோ அவர்களை வஞ்சித்து விடுகிறவன். மேலும் அவ்வஞ்சகர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்கிறார்கள்''. சிரத்தையின்றி தொழுபவர்கள் குறைவாகவே தொழுகின்றனர். காலத்தில் நேரத்தில் நிறைவேற்றாது தவறிய தொழுகையை மீண்டும் தொழமாட்டார்கள். உலக இன்பங்களில் இடையறாது ஈடுபடுவர். பிறர் பார்க்கும் காணும் காலத்தில் தொழுது மற்றவர் காணாத பொழுது தொழுவதைத் தவிர்த்து விடுவர். இவர்கள் இரு மந்தைகளுக்கு இடையில் இந்த மந்தையிலும் அந்த மந்தையிலும் தாவி தாவி எந்த மந்தையிலும் தங்காது தவிக்கும் ஆடு போன்றவர்கள் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடுத்து சொல்கிறார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
அஜ்மீரில் அடக்கமாகி உள்ள காஜா முயினுத்தீன் சிஷ்தீ பாக்தாதிலிருந்து சிரியாவிற்குச் செல்கையில் ஒரு குகையில் உஹத் மஹ்மூது அல்லாஹிதி என்ற பெரியாரைச் சந்தித்தார். முப்பது ஆண்டுகளாக இக்குகையில் தொய்வில்லாது தொழுது கொண்டிருக்கும் நான், என் தொழுகையை இறைவன் ஏற்பானா? மறுப்பானா? என்று ஏங்கி அழுகிறேன் என்றார்.
உள்ள உறுதியுடன் ஈடுபாட்டோடு தொய்வில்லாது தொழுது மெய்யாகவே மேலோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.