நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நட்பில் நல்கும் நன்கொடை

நட்பில் நல்கும் நன்கொடை நட்பை வளர்ப்பதோடு உறவுக்கும் உரமாகும்; நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமைக்கு வித்திடும்; நாட்டிற்கும் நலம் பயக்கும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:27 pm

மு. அ. அபுல் அமீன்

நட்பில் நல்கும் நன்கொடை நட்பை வளர்ப்பதோடு உறவுக்கும் உரமாகும்; நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமூக ஒற்றுமைக்கு வித்திடும்; நாட்டிற்கும் நலம் பயக்கும்.

ஆட்டின் எலும்பில் சமைக்கப்பட்ட குழம்பாயினும் அண்டை அயலகத்தார் ஒருவருக்கொருவர் நன்கொடை கொடுக்குமாறு கோமான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி) நூல்- புகாரி. அற்பமான பொருளாயினும் அண்டை அயலாருக்கு நன்கொடை கொடுப்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எடுத்துரைக்கிறது ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் இந்நன்மொழி.

நந்நபி (ஸல்) அவர்கள் நன்கொடையாக தரப்படும் நறுமண பொருள்களை மறுக்காது ஏற்பதை எடுத்துரைக்கிறார் அனஸ் (ரலி) நூல்- புகாரி. நந்நபி (ஸல்) அவர்கள் நன்கொடையை பெற்று அதற்குப் பிரதி நன்கொடை நல்குவார்கள் என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நவின்றது புகாரியில் பதிவாகியுள்ளது. பரஸ்பர நன்கொடையே நட்பைப் பெட்புடையதாக்கி உறவைப் பலப்படுத்தும். 

பஷீர் (ரலி) அவர்களின் மனைவி அம்றந்து பின்துறவாஹா (ரலி) ஆலோசனைப்படி அண்ணல் நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக வைத்து மகன் நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்களுக்கு நன்கொடை அளிக்க முனைந்தபொழுது முத்து நபி (ஸல்) அவர்கள் பஷீர் (ரலி) அவர்களின் அத்தனை பிள்ளைகளுக்கும் அதே நன்கொடையை அளிப்பதாக இருந்தால் அளிக்கலாம் என்றும் பிற குழந்தைகளைப் புறக்கணித்து ஒரு குழந்தைக்கு மட்டும் அன்பளிப்பு அளிப்பது கூடாது என்றும் கூறியதை அறிவிப்பவர் - நுஃமான் இப்னு பஷீர் (ரலி) நூல்- புகாரி. இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் பெற்ற குழந்தைகளுக்கிடையில் நன்கொடை கொடுப்பதில் வேறுபாடு கூடாது என்று கூறுகின்றனர் சட்டம் வகுத்த இமாம்கள் அபூஹனிபா, மாலிக், ஷாபீஈ, அஹ்மதுப்னு ஹன்பல், நவவீ, தௌரீ, இஸ்ஹாக் (ரஹ்) முதலியோர்.

""கொடுத்த நன்கொடையை திரும்ப பெறுபவர் நாயைப் போன்றவர். நாய் கக்கியதை அந்நாயே தின்னும்'' என்ற நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி. ஆண்கள் பட்டாடை அணிவது கூடாது என்பதால் அலி (ரலி) அவர்களுக்கு நன்கொடையாக வந்த பட்டாடையை துண்டுகளாக கிழித்து உறவு பெண்களுக்குக் கொடுத்தது புகாரியில் பதிவாகியுள்ளது.

ஒரு சொத்தை ஒருவருக்கு இறப்புவரை துய்க்க நன்கொடை கொடுத்தால் பெற்றவர் இறக்கும்வரை அச்சொத்தை அனுபவிக்க உரிமை உடையவர். அவர் இறந்தபின் அச்சொத்து சொத்துக்குரியவருக்கோ சொத்துக்குரியவர் இறந்துவிடின் சொத்துக்குரியவரின் வாரிசுகளுக்கோ திரும்ப கிடைக்கும். அனுபவ நன்கொடை பெற்றவரின் வாரிசுகளுக்கு அச்சொத்தில் உரிமை கிடையாது என்ற அனுபவ நன்கொடை பற்றிய நபி (ஸல்) அவர்களின் விதியை விளம்புபவர் ஜாபிர் (ரலி) நூல்- புகாரி.

மக்காவிலிருந்து அபயம் தேடிவந்த முஹாஜிரீன்களுக்கு மதீனாவில் அன்சாரிகள் நிலங்களை நன்கொடை கொடுத்தபொழுது மக்கத்து முஹாஜிரின்கள் விவசாயம் தெரியாது என்று விளம்பினர். நன்கொடை நல்கிய அன்சாரிகள் நன்கொடை கொடுத்த நிலங்களிலும் அவர்களே விவசாயம் செய்து விளைச்சலில் முஹாஜிரீன்களுக்குரிய பங்கைக் கொடுத்ததை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிப்பது புகாரியில் உள்ளது.

நன்மையை நாடி பால் ஆட்டை நன்கொடை கொடுப்பது மிக சிறந்த நன்கொடை என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றதை அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) நூல் -புகாரி.

உத்தம நபி (ஸல்) அவர்கள் அளித்த நன்கொடையை உமர் (ரலி) அவர்கள் தேவை உடையவர்களுக்குக் கொடுக்க கூறியபொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நன்கொடையை மறுக்காது ஏற்று ஏற்றவர் தேவையுடையோருக்கு நன்கொடையாக அளிக்கலாம் என்றும் எச்சரித்ததை உமர் (ரலி) அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார்கள் என்பதைப் புகாரி, முஸ்லிம் நூற்கள் கூறுகிறது.

அதிகாரிகளுக்கும் ஆள்வோருக்கும் நன்கொடை என்ற பெயரில் கையூட்டு கொடுத்து காரியம் சாதிப்பது சாப கேடான பாவம். அந்நன்கொடைகள் அநியாயமானவை. ஒழுக்க கேடான அத்தகு நன்கொடைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

வேற்றுமையின்றி ஒற்றுமையோடு ஒருவருக்கொருவர் நட்புடன் நன்கொடைகளைப் பரிமாறிக் கொள்வதோடு பொதுபணிகளுக்கும் பொற்புடன் நன்கொடை வழங்கி நாட்டில் நல்லிணக்கத்தோடு மக்கள் நல்வாழ்வு வாழவும் நம்நாடு உலகில் வளர்ந்த நாடாக உயர்ந்து சிறக்க உதவுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.