நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோள் சொல்லும் கோணல்

"நம்ம' என்னும் அரபி சொல்லில் இருந்து "நமீமத்' என்னும் அரபி சொல் உருவானது. நமீமத் என்பது மிகவும் இழிவான பாவமான கண்டனத்திற்கும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:50 pm

மு. அ. அபுல் அமீன்

"நம்ம' என்னும் அரபி சொல்லில் இருந்து "நமீமத்' என்னும் அரபி சொல் உருவானது. நமீமத் என்பது மிகவும் இழிவான பாவமான கண்டனத்திற்கும் கடுமையான இறை தண்டனைக்கும் உரிய தீய செயல். அத்தீய செயல்களில் தீயினும் தீய கொடிய செயல் கோள் சொல்லும் கோணல் புத்தி.
""கோள் சொல்வதைத் தொழிலாகக் கொண்டு திரிபவன் நல்ல செயல்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும் பாவி; கடின சுபாவமும் கேவலமும் இழிவும் மிக்குற்றவன்'' என்று எழில்மறை குர்ஆனின் 68-11 முதல் 13 வரையுள்ள வசனங்கள் இழித்துரைக்க 5-2 ஆவது வசனம் கோள் சொல்லி பிறருக்குத் துன்பம் இழைப்பதற்கும் பாவத்திற்கும் பகையை உண்டு பண்ணுவதற்கும் உதவாதீர்கள்'' என்று எச்சரிக்கிறது.
உமைய்யா அரசர் சுலைமான் அவரைப் பற்றி அவதூறு பேசியதாக ஒருவரை விசாரித்தார். விசாரிக்கப்பட்டவர் அரசரைப் பற்றி அவதூறு பேசவில்லை என்று உறுதியுடன் உரைத்தார். அரசரின் நம்பிக்கைக்கு உரிய நீதமானவர் சொன்னது பொய்யாகுமா? என்று அரசர் தொடர்ந்து கேட்டார், அப்பொழுது அரசவையிலிருந்த அறிஞர் ஸூஹ்ரி ""கோள் சொல்பவன் எப்படி கோணாத நீதவானாக இருக்க முடியும்?'' என்று கேட்டார். அரசர் அவரின் அரிய அறிவுரையை ஏற்றார்.
அரசு உளவு பிரிவு அதிகாரிகள் அரசுக்கு எதிராய் செயல்படுவோரைக் கண்காணித்து அவர்களின் உரையாடல்களை, நடமாட்டத்தை, நட்பு வட்டத்தை ஒற்றறிந்து அரசுக்குத் தெரியப்படுத்துவது கோள் அல்ல. அதுபோன்ற அரசுக்கு எதிரான செய்திகளை முழுமையாகவோ அல்லது அரை குறையாகவோ அறிவோர் அரசுக்குத் தெரிவித்து ஆபத்தை அகற்ற உதவுவதும் கோள் அல்ல. இன்றைய வலைதள, முகநூல் வசதிகளைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்புவது கோளினும் கொடியது.
தோழமைக்குத் தோள் கொடுத்த ஆளுமை ஆற்றலுடைய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கோள் சொல்வதைக் கண்டித்து உரைத்தவை ""என் தோழர்களில் எவரையும் பற்றி என்னிடம் குறை கூற வேண்டாம், நான் உங்களிடையே தெளிந்த உள்ளத்துடன் உறவாட விரும்புகிறேன்'' அறிவிப்பவர் இப்னு மஸ்வூத் (ரலி). நூல் -அபூதாவூத், திர்மிதீ. இந் நந்நபி நன்மொழி மூலம் நாம் அறிவது கோள் நல்ல உள்ளத்தில் நஞ்சைப் பாய்ச்சும் வஞ்சகம் என்பது.
""அவதூறு என்பது மக்களுக்கு மத்தியில் கோள் சொல்வது'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடுத்து சொல்கிறார் அப்துல்லாஹ்பின் மஸ்வூத் (ரலி) நூல்- முஸ்லிம். கோள் சொல்வது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்; உறவைத் துண்டிக்கும்; நட்பை நசுக்கி நாசமாக்கும். உங்களில் கெட்டவர்கள் கோள் சொல்லி திரிபவர்கள்'' என்ற திருநபி (ஸல்) அவர்களின் பொருளுரை அஹ்மத் என்னும் நூலில் பதியப்பட்டுள்ளது.
""எவன் பிறரின் பேச்சை உன்னிடம் உரைக்கிறானோ அவன் உன் பேச்சைப் பிறரிடம் பேசுவான். அத்தகைய மனிதனிடம் எச்சரிக்கையாக இருங்கள்'' என்று அறிஞர் ஹஸன் பஸ்ரி (ரஹ்) பகர்ந்தார்கள்.
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கோளைப் பற்றி கூறும் விளக்கம் (1) கோள் சொல்பவன் கலகமும் குழப்பமும் விளைவிப்பவன். அவன் கூற்றை ஏற்கக் கூடாது. (2) கோள் சொல்பவன் தொடர்ந்து கோள் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். (3) கோள் சொல்பவனைத் திருத்த முயற்சிக்க வேண்டும். (4) திருந்தாவிடில் கோள் சொல்பவனைப் புறக்கணித்து அவன் கூறும் கோளையும் புறந்தள்ள வேண்டும். அப்பொய்யனுக்குப் புகலிடம் கொடுக்கக் கூடாது. ""கப்ரு -புதைகுழி வேதனைகளில் மூன்றில் ஒரு பங்கு கோள் சொல்வதால் ஏற்படும் வேதனையே'' என்று இமாம் கஜ்ஜாலி அவர்களின் கூற்றை இஹ்யாவு உலூமித்தீன் நூலில் காணலாம். ""கோள் சொல்பவன் சொர்க்கம் புகமாட்டான்'' என்று பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை அறிவிப்பவர் -ஹுதைப்பா (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ.
ஈ க்கு நஞ்சு அதன் இறகிலும் பாம்பிற்கு நஞ்சு அதன் பற்களிலும் தேளுக்கு நஞ்சு அதன் கொடுக்கிலும் உள்ளன. கோள் சொல்பவனுக்கு உச்சி தொடுத்து உள்ளங்கால் வரை நஞ்சு. நச்சுப் பூச்சிகள் தீண்டினால் மருந்து உண்டு. கோளின் கொடு நஞ்சுக்கு மீளும் மருந்து நீளுலகில் இல்லை என்று ஓர் அரபி கவிதை
கூறுகிறது.
பேணாததைப் பேண நாணுவது போல் கோணும் கொடிய கோளைச் சொல்லாது கேளாது புறந்தள்ளி அறம் பேணி நெறியோடு நேரிய வாழ்வு வாழ்வோம். ஈருலகிலும் இறையருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.