/

இந்துமத அற்புதங்கள் 52 - நோய் நீக்கிய வாய்மை

காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் தலத்தை அடைந்தார்

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:44 am

டாக்டா் சுதா சேஷய்யன்

காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் தலத்தை அடைந்தார் திருஞானசம்பந்தர். அப்பகுதி அக்காலத்தே மழநாடு என்னும் பெயர் கொண்டு விளங்கியது. அப்பகுதியை ஆண்ட மன்னன் மழவன் என்றே அழைக்கப்பட்டான். திருஞானசம்பந்தர் அங்கு சென்றபோது இருந்த மன்னன் கொல்லி மழவன் என்பான்.

கொல்லி மழவனின் மகள் முயலக நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாள். இந்நோயில் வலிப்பு வரும். எப்போதும் வலிப்பினால் வருத்தமுற்று வாடிய தன் மகளுக்கு எவ்வித சிகிச்சையும் பலன் கொடுக்காதது கண்டு கொல்லி மழவன் மிகவும் நலிந்து போனான். இறையருளே தன் மகளைக் காக்க வேண்டும் என்று எண்ணி பேச்சு மூச்சின்றிக் கிடந்த தன் மகளைக் கொண்டு போய் திருக்கோயில் வாசலில் இட்டு வைத்தான்.

அந்தச் சமயம் திருப்பாச்சிலாச்சிரமத்துக்கு வருகை புரிந்தார் திருஞானசம்பந்தப் பெருமான், அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்துத் திருக்கோயிலழைத்து வந்தான். ஆலயத்தை வலம் வந்து சந்நிதியுள் புகப் போனார் ஞானசம்பந்தர். வாடிக் கிடந்த மழவன் மகளைக் கண்டார்.

"ஏனிப்படிக் கிடக்கிறாள்?'' என வினவினார். மழவன் முயலக நோய் மிகைப்பட்டதையும், மகள் பேச்சு மூச்சிழந்ததையும் கூறியழுதான்.

செய்தி கேட்டு வருந்திய சம்பந்தப் பெருமான் உடனே திருப்பதிகம் பாடினார். சிவப்பரம்பொருளை வேண்டினார். பதிகம் முடிவுறும் வேளையில் மழவன் மகள் தூக்கத்தினின்று எழுவதுபோல் எழுந்து தந்தையின் அருகே நாணமுடன் நின்றாள்.

திருப்பாச்சிலாச்சிரமத்தில் மழவன் மகள் நோய் தீர்க்க இறைவனை இறைஞ்சிய ஞானசம்பந்தரின் நற்பதிகம்"துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்

சுடர்ச்சடை சுற்றி முடித்துப்

பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ

ஆரிடமும் பலி தேர்வர்

அணிவளர் கோலம் எலாம்செய்து பாச்சில்

ஆச்சிரா மத்துஉறை கின்ற

மணிவளர் கண்டரோ மங்கையை வாட

மயல் செய்வ தோஇவர் மாண்பே.''

திருப்பாச்சிலாச்சிரமம் தலத்தினைச் சென்றடையும் வழி:

திருச்சி - சேலம் பேருந்து சாலையில் உள்ளது. (12 கி.மீ. தொலைவு) ""பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம்'' ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்று பெயர் பெற்றது.

இறைவன் - மாற்றறிவரதர், சமீவனேஸ்வரர், பிரமபுரீசுவரர். இறைவி - பாலாம்பிகை, பாலசௌந்தரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.