/

இந்துமத அற்புதங்கள் 52: ஆற்றிலிட்டால் குளத்தில் வரும்!

திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் வழிபட்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். பழமலைநாத ஈசனை வழிபட்டுப் புறப்படும்போது

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:35 am

டாக்டா் சுதா சேஷய்யன்

திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் வழிபட்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். பழமலைநாத ஈசனை வழிபட்டுப் புறப்படும்போது பொன்தரச் சொல்லிக் கேட்டார். சுந்தரர் கேட்க ஆலவாய் அண்ணலும் பனிரண்டாயிரம் பொற்காசுகளைத் தந்தார். சுந்தரருக்கு மகிழ்ச்சி. ஆனால் எப்படி விருத்தாசலத்திலிருந்து திருவாரூர் வரை அதனைத் தூக்கி வருவது?

சிவபெருமான் ஒரு எளிய வழி சொன்னார். பக்கத்தில் ஓடும் மணிமுத்தா நதியில் பொன்னைப் போட்டுவிட்டால், திருவாரூர் கமலாயக் குளத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

சரி என்று ஒப்புக்கொண்டு மணிமுத்தா நதியில் பனிரண்டாயிரம் பொன்னையும் போட்டுவிட்டுப் புறப்பட்டார் சுந்தரர்.

திருவாரூருக்குச் சென்றார்; திருவாரூர் திருக்கோயில் கமலாலயத் திருக்குளத்திற்குச் சென்றார்; மனைவி பரவையோடு சென்று திருக்குளத்தில் நின்று பதிகம் பாடினார்.

ஒவ்வொன்றாகப் பொற்காசுகள் குளத்தின் நீரில் மிதந்து வந்தன. மெல்ல மெல்ல அவை வர, வர, ஒவ்வொன்றாய் எடுத்துத் தொகுத்து எண்ணிப் பார்த்தார் - பனிரண்டாயிரம் காசுகளும் வந்துவிட்டன.

திருமுதுகுன்றில் இறைவனை வணங்கி சுந்தரர் பாடிய பதிகம்

"நஞ்சியிடைஇன்று நாளைஎன்று

உம்மை நச்சுவார்

துஞ்சியிட்டாற் பின்னைச்

செய்வதென் அடிகேள் சொலீர்

பஞ்சியிடப் புட்டில்

கீறுமோபணி யீர்அருள்

முஞ்சியிடை சங்கம்ஆர்க்கும்

சீர்முது குன்றரே.''

திருமுதுகுன்றில் ஆற்றிலிட்ட பொன்னைத்

திருவாரூர்க் குளத்தில் தேடிப் பாடிய பதிகம்

""பொன்செய்த மேனியினீர்

புலித்தோலை அரைக்கசைத்தீர்

முன்செய்த மூவெயிலும்

எரித்தீர்முது குன்றமர்ந்தீர்

மின்செய்த நுண்ணிடையாள்

பரவையிவள் தன்முகப்பே

என்செய்த வாறடிகேள்

அடியேன்இட் டளங்கெடவே.''

திருமுதுகுன்றம்தலத்தினைச் சென்றடையும் வழி:

சென்னை - திருச்சி ரயில் மார்க்கத்தில் விழுப்புரத்தை அடுத்துள்ள ரயில் சந்திப்பு நிலையம். திருச்சியிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.

இறைவன் - விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,

இறைவி - விருத்தாம்பிகை, பெரிய நாயகி, பாலாம்பிகை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.