அபாயம் வராமல் இருக்க உபாயம்!
றையும்விட, தன்னிகரில்லாத - மிக உயர்ந்த குறிக்கோளுக்குரிய பேரின்பப் பெருஞ் சொல்லை ஆர்வமுடன் இடைவிடாது சொல்லிக்கொண்டே...


உலகில் எல்லாவற்றையும்விட, தன்னிகரில்லாத - மிக உயர்ந்த குறிக்கோளுக்குரிய பேரின்பப் பெருஞ் சொல்லை ஆர்வமுடன் இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தால், அச்சொல்லின் பொருளை நாம் அடைந்துவிடலாம்.
சொல் சிவபெருமான் என்றால், அச்சொல்லின் பொருளாக விளங்குபவர் பார்வதி தேவி. அதாவது சொல்லும் பொருளுமாகப் பிரிக்க இயலாதபடி அவர்கள் அர்த்தநாரியாக - அம்மையப்பராக விளங்குகிறார்கள். அப்படி அடையக்கூடிய பொருள் உள்ளத்தில் என்றும் நிலைத்து மகிழ்வூட்டுவதாக, பேரின்பம் தருவதாக இருக்க வேண்டும். அந்தப் பேரின்பத்திற்குரிய சொல் ஆன்றோராலும் சான்றோராலும் அருளாளர்களாலும் முறையே வழிவழியாக ஓதி உணர்ந்ததாக இருக்க வேண்டும்.
அத்தகைய தெய்வச் சொல்லை மாணிக்கவாசகர் ""நமச்சிவாய வாழ்க'' என்றும், திருஞானசம்பந்தர், ""நாதன் நாமம் நமச்சிவாயவே'' என்றும், திருநாவுக்கரசர், ""அஞ்செழுத்தின் நாமத்தான் காண்'', ""நற்றுணையாவது நமச்சிவாயவே'' என்றும், சுந்தரர், ""நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே'' என்றும் அருளிச் செய்துள்ளனர்.
சமயக் குரவர் நால்வரும் ஓதி உணர்ந்து பேரின்பம் அடைந்த அப்பேரின்பப் பெருஞ்சொல் - அச்சொல்லும் பொருளும் இத் திருவைந்தெழுத்தே ஆகும். அவர்களுக்குப் பின்வந்த அருளாளர்களும் அடியவர்களும் இத் திருவைந்தெழுத்தையே தெப்பமாகக் கொண்டு பிறவிக் கடலைக் கடந்து பேரின்பம் அடைந்துள்ளனர்.
மறை - மந்திரம்: திருவைந்தெழுத்து என்பது சித்தாந்த சைவ செந்நெறிச் செல்வர் மேற்கொண்டு நாளும் கணித்து வரும் பொருள் மறையாகும். கணித்தல் என்பது செபித்தல் எனப் பொருள்படும். மறை - மந்திரம் எனப்படும். இம்மறை அருள் மறை, புகழ்மறை என இருவகைப்படும். பொருள்மறை, மெய்ப்பொருள் உண்மையை விளக்குவது. அதாவது, இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) என்னும் முப்பொருள் உண்மைகளைக் கூறுவது. புகழ் மறையாவது, கருதியது கைகூட ஜெபிக்கும் கடவுளது புகழ். கடவுள் புகழாவது, வழிபடும் கடவுளை முன்னிலைப்படுத்தி அவன் திருவடியினை, நாமத்தைப் போற்றிப் புகழ்வது.
""அந்தியும் பகலும் அஞ்சு பதம் சொல்லி'' என்பார் திருஞானசம்பந்தர். எனவே, ஐந்தெழுத்தென்பது ஐந்து சொற்களின் தனித்தனி முதல் எழுத்துகளாகும். ஐந்து சொற்களால் பெறப்படும் ஐந்து பொருள்களையும், திருமுறையும் மெய்கண்ட சாத்திர நூல்களும் மிக விரிவாக விரித்துரைக்கின்றன. வேதத்தை அறம் என்றும், ஆகமத்தை நூல் என்றும் வழங்குதல் அருள் நூல் மரபாகும்.
மூவர் கூறியதைப் போல மாணிகக்கவாசகரும் "நமச்சிவாய வாழ்க' என்று ஸ்தூல பஞ்சாக்கரத்தில் தொடங்கி (சிவபுராணம்) தொடங்கி, ""நானேயோ தவம் செய்தேன்; "சிவாய நம' எனப் பெற்றேன்''என்று சூக்கும பஞ்சாக்கரத்தைக் (தோணோக்கம்) குறிப்பிட்டுள்ளார்.
சூக்கும பஞ்சாக்கரம் ஞானாசிரியர் மூலம் சீடன் பெறுவது - பெறப்படுவது. இது குருவின் மூலமாகப் பெறவேண்டிய மகாமந்திரம். அதனால்தான் அதைப் "பெற்றேன்' என்றார் மணிவாசகப் பெருமான். இதை குரு மூலம்தான் பெறமுடியும். அவ்வாறு பெற்ற அவ்வுயர்ந்த சொல்லுக்குரிய பொருள் எவை எவை?
"சிவய நம' (சிவாய நம) இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள்: சிவன், அருள், ஆன்மா, திரோதம், மலம், மாயை என்பன. இவற்றைத் திருமூலர், ""சிவன் அருள் ஆய சிவன் திருநாமம்'' என்ற பாடல் வழியும், அருணந்திசிவம், உண்மை விளக்கத்தில்,
""சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அடைவாம் - இவன்நின்று
நம்முதலா ஓதில், அருள் நாடாது; நாடும் அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று'
என்றும் கூறியுள்ளனர். அதாவது ஸ்தூல பஞ்சாக்கரமான "நம சிவாய' என்று "நகர'த்தை முதலாகக்கொண்டு ஓதினால், இம்மைப் பயன் மட்டும்தான் கிட்டும், ஆனால், "சிவாய நம' என்று "சிகர'த்தை முதலாகக்கொண்டு ஓதினால் இம்மை-மறுமை இரண்டு பயன்களும் கிட்டும். அதனால், சிவாய நம என்றே ஓது நீ என்றார். "சிவாய நம' என்னும் சொல்லுக்கு முறையே உய்த்துணர்தல், சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு எனப் பொருள்படும். இதை சைவ சித்தாந்தம் விரிவாக விரித்துரைக்கும்.
÷இத்தகைய சைவ சிந்தாந்த செம்பொருளை உள்ளடக்கிய தெய்வச் சொல்லாகிய திருவைந்தெழுத்தை ஆர்வமுடனும், அன்புடனும் ஓதி உய்வீர் என்று உலக மக்களுக்கு உணர்த்திச் சென்றுள்ளனர் நம் அருளாளர்கள். அவர்களுள் சிறந்த சிவஞானியான ஒüவையாரைக் குறிப்பிடலாம். அவர்தான், அபாயம் வராமல் இருக்க உபாயம் ஒன்றை நமக்கு அருளிச் செய்துள்ளார். அது என்ன உபாயம்?
""சிவாய நம' என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்''
என்கிறார். இங்கே ஒüவையார் குறித்தது சூக்கும பஞ்சாக்கரத்தை} விதி பெரிதா? மதி பெரிதா? என்னும் கேள்வி அனைவருக்குள்ளும் உண்டு. "விதி வலியது' என்பர் பெரியோர். நமது மதியைக் கொண்டு நாம் செய்யும் நல்வினை தீவினைகளால் உண்டாகும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கடவுள் அதற்கு இன்னின்ன துன்பம், இன்னின்ன இன்பம் அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானித்து தீர்ப்பளிப்பதே விதியாகும்.
கடவுள் நமக்கு அனுபவ அறிவு உண்டாகும்படி வகுக்கும் இன்ப-துன்பத்தின் வகைகளே விதியாகும். அதனாலேயே, ""வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி, தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது'' என்றார் வள்ளுவர்.
ஒருவன் எவ்வளவுதான் முயற்சி செய்து கோடி கோடியாக தேடிக்கொண்டாலும், இறைவன் விதித்த விதிப்படிதான் இன்பம் அனுபவிக்க முடியும் என்று விதியின் வலிமையையும், அதை விதிக்கின்ற இறைவனின் வலிமையையும் வள்ளுவர் உணர்த்தியுள்ளார்.
÷மதியுடைய ஒருவன் தனது மதியினால் செய்த செயல்களை அறிந்து அதற்குரிய பலனை விதிக்கின்ற கடவுள், அவராகவே அவர் விதித்த விதியை மாற்ற நினைத்தால் மாற்றலாமே ஒழிய வேறு எவராலும் அதை மாற்றவோ, குறைக்கவோ முடியாது. ஆனால் அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் நாம் நம் மதியைக் கொண்டு இறைவனிடம் வேண்டுகோள் - விண்ணப்பம் செய்யலாம்.
ஒருவேளை விதியையே மாற்ற முடியாமல் போனாலும், இறைவனது நாம ஜெபத்தினால் அவன் விதித்த விதியின் பலன் நம்மைக் கடுமையாகத் தாக்காதவாறு நம்மைக் காத்துக்கொள்ள முடியும். விதியால் ஏற்படக்கூடிய அபாயம் வராமல் இருக்க, செய்யக்கூடிய உபாயம்தான் ஐந்தெழுத்து மந்திரமான "சிவாய நம'! என்று கூறுகிறார் ஒüவையார். ஒüவை கூறிய இந்த உபாயத்தைத் தெரிந்து கொண்டுவிட்டபின், அதை அந்தியும் பகலும் கூறத் தொடங்கிவிட்டால், இனி நமக்கு ஏது அபாயம்...?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...