புறங் கூறும் புன்மை
ஒருவரைப் பார்க்கும் பொழுது புகழ்ந்து பாராட்டி, அவரைக் காணாத பொழுது இழித்தும் பழித்தும்


ஒருவரைப் பார்க்கும் பொழுது புகழ்ந்து பாராட்டி, அவரைக் காணாத பொழுது இழித்தும் பழித்தும் பேசும் புறங்கூறும் புன்மை பாவங்களில் பெரும் பாவம். புறங் கூறுவோர் உறவைப் பிரிப்பார்கள்; ஊரையும் பிரிப்பார்கள்; ஒற்றுமையை குலைப்பார்கள்; வேற்றுமை விஷ வித்தை விதைப்பார்கள்.
குத்தல் பேசுதல், குறை கூறல், மறைவில் மனம் புண்பட பேசுதல், ஆளில்லாத பொழுது அவமரியாதையாக பேசுதல், கோள் சொல்லல், இல்லாத பொழுது பொல்லாதன சொல்லி இருவருக்கிடையில் சண்டையை மூட்டுதல், ஒருவர் கூறியதை மற்றவரிடத்தில் மாற்றி கூறல், ஆளில்லாத பொழுது அவரைப் போல் அபிநயம் செய்தல், நகைத்து நடித்து பகையை வளர்த்தல் முதலியவை புறங் கூறலில் அடங்கும்.
""இரட்டை நாக்கு இழிந்த மக்களின் இயல்பு. புறம் பேசுவது புரையோடிய புண்ணாய் உறவைக் கெடுக்கும். புறம் பேசுவது இறந்துவிட்ட தன் சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பது போன்றது'' என்று எழில் மறை குர்ஆனின் 49 -12 ஆவது வசனம், இழித்துரைக்க, 104}1ஆவது வசனம், ""குறை கூறி புறம் பேசி திரிபவர்களுக்குக் கேடு தான்'' என்று எச்சரிக்கிறது.
""எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்யும் அற்பமானவன் தொடர்ந்து புறம் பேசி, குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டவன் நன்மையான செயல்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி; கடின சுபாவமுடையவன்; கேவலமும் இழிவும் மிக்கவன்'' என்று குர்ஆனின் 68 -10 முதல் 13 வரை உள்ள வசனங்கள் வசைபாட 51-10 ஆவது வசனம் ""பொய்யுரைப்பவர்கள் அழிந்தே போவர்'' என்று சாடுகிறது.
""ஒருவரின் குறையை அவரில்லாத பொழுது பிறரிடம் கூறுவது புறம். ஒருவரிடம் இல்லாத குறையை அவரிடம் இருப்பதாக இயம்புவது அவதூறு'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை உறுதிபடுத்தும் அபூஹீரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை அபூதாவூத், திர்மிதீ நூற்களில் காணலாம். ""அவதூறுகளில் மிக பெரியது தன்னிரு கண்களால் காணாததைத் கண்டதாக விண்டுரைப்பது என்ற நந்நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்பவர் -அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). நூல் -புகாரி.
""எவர் கள்ளங்கபடமில்லா இறை நம்பிக்கையுள்ள கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் சாபத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்குக் கடும் வேதனையுண்டு'' என்றுரைக்கிறது குர்ஆனின் 24 -23 ஆவது வசனம். இவ்வசனத்தின் அடிப்படையில் அமைந்ததே "பெண் பாவம் பொல்லாதது' என்னும் சொல் வழக்கு.
""ஒரு குற்றத்தை அல்லது பாவத்தைச் செய்த ஒருவன் அதனை மறைத்து அதனைச் செய்யாத பிறரைச் செய்ததாக கூறுபவன் நிச்சயமாக அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையும் சுமக்கிறான்'' என்று எச்சரிக்கிறது குர்ஆனின் 4- 112 ஆவது வசனம். குற்றவாளிகள் தப்பித்து நிரபராதிகள் குற்றவாளியாக்கப்படும் கொடுஞ் செயலைக் கடுமையாய்ச் சாடுகிறது இவ் வசனம்.
கோள் சொல்வதும் புறம் பேசுவது தான். ""கோள் சொல்பவன் சொர்க்கம் செல்ல மாட்டான்'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் செபிப்பதைச் செவிமடுத்து சொன்னவர் ஹூதைபா (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவையில் இல்லாத தோழர்களை இடித்துரைப்பதைத் தடுத்தார்கள் என்று இப்னு மஸ்வூத் (ரலி) இயம்புவதை அபூதாவூத், திர்மிதீ நூற்களில் காணலாம்.
ஒவ்வொரு பருவம் எய்தியவரும் நன்மை பயக்கும் பேச்சைத் தவிர பிற பேச்சுகளை விட்டு நாவைப் பேண வேண்டும் என்பதை ""அல்லாஹ்வைக் கொண்டும் மறுமையை நம்பியும் ஈமான் கொண்டவர்கள் நன்மையை பேசட்டும் அல்லது வாய்மூடி மௌனம் காக்க வேண்டும்'' என்ற காருண்ய நபி (ஸல்) அவர்களின் நல்மொழியை நவில்பவர் அபூஹீரைரா (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம்.
ஹழ்ரத் உக்பாபின் ஆமிர் (ரலி) அவர்களின் நாவைத் தீங்கை விட்டு தவிர்த்து கொள்ளுமாறு கோமான் நபி (ஸல்) அவர்கள் கோரியதைத் திர்மிதீ கூறுகிறது.
ஒருவர் மற்றவர்களைப் பற்றி, மற்றவர்களின் குறைகளைக் குறித்து அவர்கள் இல்லாத பொழுது நபி(ஸல்) அவர்களிடம் நவிலுவதைத் தடுத்ததை எடுத்தியம்புகிறார் ஹழ்ரத் மசூத் (ரலி) நூல்- அபூதாவூத், திர்மிதீ.
""ஒருவர் கேட்பதைத் தெளிவாக உறுதிபடுத்தாது பிறரிடம் அப்படியே ஒப்புவிப்பதும் புறங் கூறலே'' என்று பூமான் நபி(ஸல்) அவர்கள் புகன்றதை அறிவிப்பவர் - அபூஹீரைரா (ரலி). நூல் -முஸ்லிம்.
பதினைந்து ஆண்டுகள் ஊர் ஊராக நாடு நாடாக அலைந்து மூன்று இலட்சம் நபிகளாரின் நன்மொழிகளைச் சேகரித்து அவற்றில் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு இலட்சம் பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்து அவைகளிலும் அதிக ஆதாரமுள்ள 7275 அரிய அருளுரைகளைத் தொகுத்து ""ஜாமியுஸ் ஸஹீஹ் புகாரி'' என்ற நூலை வெளியிட்ட இமாம் முஹம்மது இப்னு இஸ்மாயில் (ரஹ்) அவர்களின் வாழ்நாளில் எவரைப் பற்றியும் எங்கும் புறம் பேசியதில்லை.
அறநெறி பிறழ்ந்து பிறன்பழியைப் பெரிதுபடுத்தி புறங் கூறி பொய்த்துயிர் வாழும் பேதமையை தவிர்த்து ஓதும் குர்ஆனின் போதனைகளை ஏற்று நீதர் நபி (ஸல்) அவர்களின் வழியில் பழியின்றி வாழ்வோம். வல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...