நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கலந்தாலோசித்த காரியம்

கலந்தாலோசித்த காரியம் நேரிய வழியில் கோரிய பலனைத் தரும். தேறாது செய்யும் செயல் மீறி ஊறு விளைவிக்கும்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 3:59 am

மு. அ. அபுல் அமீன்

கலந்தாலோசித்த காரியம் நேரிய வழியில் கோரிய பலனைத் தரும். தேறாது செய்யும் செயல் மீறி ஊறு விளைவிக்கும்.

"அவர்கள் ஒவ்வொரு செயலிலும் தங்களுக்குள் ஆலோசனை செய்வார்கள்'' என்று செப்பும் செம்மறை குர்ஆனின் 42-38 ஆவது வசனப்படி, பூமியில் இறக்கப்பட்ட ஆதிநபி ஆதம் அவர்களின் கவலையும் கலக்கமும் நீங்கி துலக்கம்பெற இறைவனை இறைஞ்சி வணங்கும் வழியை வானவர் ஜிப்ரயீலிடம் ஆலோசனை கலந்து அறிந்தார்கள்.

"போர் சமாதானம் முதலிய காலங்களில் அவர்களுடன் கலந்து ஆலோசித்திருங்கள். செயல்படுமுன் அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனெனில் அல்லாஹ் பொறுப்பு ஒப்படைத்தவர்களை நேசிக்கிறான்.'' என்று யோசித்து செயலாற்ற செப்புகிறது ஒப்புயர்வற்ற குர்ஆனின் 3-159 ஆவது வசனம்.

இவ் வசனத்திற்கேற்ப அண்ணல் நபி (ஸல்)அவர்கள் தோழர்களிடம் தொடர்ந்து போரிட்டு தொல்லை கொடுக்கும் குறைஷியரை எல்லையிலேயே தடுத்து நிறுத்த என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தார்கள். அப்பொழுது எகிப்திலிருந்து வந்த ஸல்மான் பார்ஸி (ரலி) அவர்கள் மதீனா எல்லையில் அகழ் வெட்டுமாறு கூறிய ஆலேசனையை அனைவரும் ஏற்று அகழ் வெட்டினர்.

மதீனத்து அன்சாரிகள் எச்செயலையும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தே செய்வர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏகத்துவ கொள்கையை ஏற்பது குறித்து அபூ அய்யூப் அன்சாரி (ரலி) அவர்கள்

மதீனத்து மக்களைக் கூட்டி கலந்தாலோசித்து ஏகத்துவத்தை ஏற்க ஏகமனதாக முடிவு செய்தனர் என்ற செய்தியை ஜனுல் மஆனி என்ற நூல் தெரிவிக்கிறது.

"தன் விருப்பத்திற்கு நடப்பது தீய வழியில் செலுத்தி விடும். கலந்து ஆலோசித்து செயல்படுவது நந்நிலை அடைய உதவும்'' என்று உரைக்கிறார் அலி (ரலி) அவர்கள்.

""விவாகரத்து செய்யப்பட்ட மனைவி விவாகரத்து செய்த கணவனுக்குப் பிறந்த குழந்தையின் பால் குடிப்பை இரண்டு ஆண்டுகளுக்கு மறக்கடிக்கவோ அல்லது தாயை விட்டு குழந்தையைப் பிரித்து விட நாடினால் இருவரும் கலந்து ஆலோசித்து செய்ய வேண்டும்'' என்று உரைக்கிறது உன்னத குர்ஆனின் 2-233 ஆவது வசனம்.

பிரிந்த பின்னும் பிறந்த குழந்தையின் நலம் பேணி பிரிந்தவர்கள் ஆலோசித்தே அரிய, உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது எழில் மறை குர்ஆன்.

ஆலோசனையின் அருமையை தெரிவிக்கிறார் அறிஞர் இஸ்கந்தர்; ""உன் ரகசியத்தை ஒருவரிடம் சொல். ஆயிரம்பேரிடம் கலந்தாலோசித்து காரியத்தில் ஈடுபடு. அற்பமான மனிதின் ஆலோசனையை அற்பமாய் மதிக்காதே. அவ்வாலோசனை பொற்புடையதாகவும் இருக்கலாம்.''

ஆலோசனை சொல்பவர் அறியாததை அறிந்தது போல் சொல்ல கூடாது; தெரியாததைத் தெரிந்தது போல் சொல்லக் கூடாது.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானித பொருளைப் பாதுகாத்து உரியவரிடம் உரிய முறையில் ஒப்படைப்பதைப் போல ஆலோசனை சொல்பவர் தக்கவற்றைத் தக்க முறையில் மிக்க கவனமாக சொல்லவேண்டும் என்பது குறித்து ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள் ""ஆலோசனை தேடப்படுபவர் அமானிதம் உடையவர்'' அறிவிப்பவர்கள் உம்மு சல்மா (ரலி) நூல் - அபூதாவூத். அபூஹீரைரா  (ரலி) நூல் -திர்மிதீ.

"ஒருவர் தான் செய்யாததைப் பிறரைச் செய்யுமாறு ஆலோசனை கூறுவது மோசடி'' அறிவிப்பவர் - அபூஹீரைரா (ரலி) நூல் -அபூதாவூத். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்தபின், தோழர்கள் அடுத்து ஆட்சி பொறுப்பேற்க யாரைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தனர்.

மக்காவிலிருந்து வந்த முஹாஜிரீன்கள், அவர்களை ஆதரித்த மதீனா வாழ் அன்சாரிகள், கோமான் நபி (ஸல்) அவர்களின் கோத்திரத்தினரான குறைஷிகள் இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.

அப்பொழுது உமர் (ரலி) அவர்களின் இனிய நபி (ஸல்) அவர்களின் இறுதி நாள்களில் இமாமாக இருந்து தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களே கலீபா பொறுப்பேற்க பொருத்தமானவர்கள் என்ற ஆலோசனையை அனைவரும் ஏற்றனர்.

கலந்தாலோசித்து ஆற்றும் காரியம் உலர்ந்து உருவிழந்து போகாது; மலர்ந்து மணம் வீசி வெற்றியுறும்; விரும்பும் பலனைத் திரும்ப தரும் என்பது உணர்ந்து அனுபவசாலிகளிடம் ஆலோசனை கேட்டு எண்ணி துணிந்து, எண்ணிய எண்ணியாங்கு எய்தி ஏற்றம் பெறுவோம். போற்றி புகழும் உயர்வை அடைவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.