நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நலம் நாடும் நல் விசாரிப்பு

முற்காலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வில் நோய் அருகியே இருந்தது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:22 am

மு. அ. அபுல் அமீன்

முற்காலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வில் நோய் அருகியே இருந்தது. இக்கால செயற்கை வாழ்வில், புலப்படாத கலப்படங்கள், துரித உணவு, காற்று மாசு, ஊற்று நீரை உறிஞ்சி அடிமட்ட நீர் சுரண்டல், மரம் வெட்டல், மழையின்மை, இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள் முதலிய காரணிகளால் பெருகிவிட்டது நோய்கள்! சிகிச்சை பெற, நோய் தீர பெருத்த செலவுக்கும் உள்ளாகி அல்லலுறும் நோயாளிகளை விசாரித்து ஆறுதல் கூறி நலம்பெற நல்லிறையை வேண்டுவது உறவினர்கள், நண்பர்கள், பழகியோருக்குப் பண்பட்ட வழக்கம். விசாரிப்பதோடு தேவையான உதவிகளைச் செய்வதும் உயர்ந்த பண்பு.

நபிதோழர் ஜைதுப்னு அர்கம் (ரலி) அவர்களுக்குக் கண்ணில் வலி ஏற்பட்ட பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நேரில் சென்று விசாரித்ததை விளம்புகிறது அபூதாவூத் நூல்.

நோயாளியை நலம் விசாரிப்பது இஸ்லாமியரின் கடமை; நபிவழி, "பசித்தவருக்குப் புசிக்க கொடுப்பது போல, நோயாளியை விசாரித்து அவரின் நலம் நாடி இறைவனிடம் வேண்டுவது நன்மையை நல்கும்'' அறிவிப்பவர் -பரா இப்னு ஆஸிப் (ரலி). நூல் - புகாரி, முஸ்லிம்.

ஸஃது (ரலி) அவர்களுக்கு அகழ்ப்போரில் உயிர் நாடியில் அம்புபட்டு காயம் ஏற்பட்டது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாயிலின் அருகில் கூடாரம் அமைத்து ஸஃது (ரலி) அவர்களைத் தங்க வைத்து அருகிலிருந்து ஸஃது (ரலி) அவர்களை கவனித்தார்கள். அறிவிப்பவர் - அன்னை ஆயிஷா (ரலி) நூல் அபூதாவூத், நஸஈ. ""இறைவா! ஸஃதுக்குக் குணமளிப்பாயாக!'' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மும்முறை வேண்டியதை விளம்புகிறது முஸ்லிம் நூல்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் பணிவிடை செய்த யூத சிறுவன் நோயுற்ற பொழுது, நபி (ஸல்) அவர்கள் அவனின் வீட்டிற்குச் சென்று விசாரித்ததை விளம்புபவர் அனஸ் (ரலி) நூல்- புகாரி. நபி (ஸல்) அவர்கள் வலக்கையால் நோயாளியைத் தடவி நோயாளி நலம் பெற இறைவனிடம் இறைஞ்சுவார்கள்.

மரணத்தின் அறிகுறி தென்படாத ஒரு நோயாளியை விசாரிக்கும் பொழுது, "பேராளன் அதிபதி அல்லாஹ்விடம் உங்களைக் குணப்படுத்த வேண்டுகிறேன்'' என்று ஏழு முறை ஓத ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பணித்ததைப் பகர்கிறார் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி). நூல் -அபூதாவூத், திர்மிதீ.

""நீங்கள் எந்த நோயாளியை விசாரிக்க சென்றாலும் அந்நோயாளிக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தரும்படி இறைஞ்சுங்கள். இந்த இறைஞ்சல் நோயாளிக்கு மன ஆறுதலை அளிக்கும். அறிவிப்பவர் -அபூஸஈது (ரலி). நூல் -திர்மிதீ.

"நோயாளியை விசாரிக்க செல்லும் பொழுது அதிக நேரம் அங்கு தங்கி இருக்க கூடாது; உரத்த குரலில் பேச கூடாது'' என்று பெருமானார் நபி (ஸல்) கூறியதைக் கூறுபவர் இப்னு அப்பாஸ் (ரலி). நூல் - ரஜீன்.

நோயாளியை விசாரிப்பதால் நோயாளிக்கு ஆறுதலும் ஆனந்தமும் கிடைப்பது போல விசாரிப்பவருக்கும் விசாலமான நன்மைகள் கிடைப்பதை நவிலும் நபிகளாரின் நன்மொழிகள்.

"எவர் ஒரு நோயாளியை மாலையில் விசாரிக்க செல்கிறாரோ அவருக்காக எழுபதினாயிரம் வானவர்கள் விடியும் வரை அவரின் பாவங்களுக்கு மன்னிப்பு கோருகின்றனர்; காலையில் செல்வோருக்கு அதே அளவு வானவர்கள் மாலைவரை மன்னிப்பு கோருகின்றனர்'' அறிவிப்பவர் - அலி (ரலி). நூல் -அபூதாவூத், திர்மிதீ.

நோயாளியை எவர் விசாரிக்கிறாரோ அவர் விசாரித்துவிட்டு திரும்பும் வரை சுவனத்தின் கனிகளைக் கொய்து கொண்டிருப்பவராவார்'' அறிவிப்பவர் - ஸவ்பான் (ரலி) நூல் - முஸ்லிம், திர்மிதீ.

"எவர் முறையாக உளு (உடல் சுத்தம்) செய்து நோயாளியின் நன்மையை நாடி விசாரித்தால் அவருக்கும் நரக நெருப்புக்குமிடையில் 70 ஆண்டு தொலைவு தூரமாக்கப்படும்''

அறிவிப்பவர் - அனஸ் (ரலி) நூல் -அபூதாவூத்.

ஒரு ஊரில் கொள்ளை நோய் பரவி இருந்தால் அவ்வூரிலுள்ளோர் பயந்து ஊரை விட்டு ஓடக்கூடாது என்றும் வெளியூரில் உள்ளோர் அவ்வூருக்குச் செல்ல கூடாது என்றும் தடுத்ததை எடுத்தியம்புகிறார் அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி). நூல் -புகாரி.

நோயாளியை விசாரிப்பதில் மனித நேயம் மலர்கிறது. மனித நேயம் கற்பித்த புனித நபி(ஸல்) அவர்கள் நடந்து காட்டி நல்லுரை பகர்ந்ததை அகத்தில் பதிப்போம்; இக வாழ்வில் இனிதே பின்பற்றுவோம். இறைவன் அருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.