/

செழிப்பான வாழ்வு தரும் சின்னமனூர் சிவன்

சிவபெருமானுக்கு எதிராக தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றதால், கற்பக விருட்சமும், காமதேனுவும் சாபம் பெற்றன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:25 pm

பனையபுரம் அதியமான்

சிவபெருமானுக்கு எதிராக தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றதால், கற்பக விருட்சமும், காமதேனுவும் சாபம் பெற்றன. முட்பூலா மரமாகவும், நாட்டுப் பசுவாகவும் மாறி, பூமியில் தோன்றின. தங்கள் தவறை நினைந்து சாப விமோசனம் கேட்டபோது, இடையன் மூலம் கற்பகத் தருவிற்கும், புலி மூலம் காமதேனுவுக்கும் வழி பிறக்கும் என்ற வாக்கு கிடைத்தது.

காசியில் தவமிருந்த அந்தணனிடம் புலியாக மாறி அவன் தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் சாபம் பெற்றுப் புலியானான். சாப விமோசனம் வேண்ட, சிவ நாமம் ஒலிக்கும் போது இயல்பு நிலை திரும்பும் என்ற பதில் கிடைத்தது.

சதுரகிரிக்கும் வராக மலைக்கும் அருகே அமைந்துள்ள திருமலையில், காமதேனு பசுவாகப் பிறந்து வாழ்ந்து வந்தது. இதே போல, வராக மலைக்குத் தெற்கே, சுரபி நதிக்குக் கிழக்கே, சிவபெருமான் தோன்றியிருந்தார்.

இந்த லிங்கத்தின் இடதுபுறம் முட்பூலா மரமாக கற்பக விருட்சம் தோன்றி லிங்கத்திற்கு நிழல் தந்து வந்தது. திருமலையில் மேய்ந்துகொண்டிருந்த பசு மீது பாய புலி முயன்றது. அதைக் கண்ட பசு, ""என் கன்று பசியோடு காத்திருக்கிறது. நான் பால் தந்துவிட்டு உன்னிடம் சரணடைகிறேன். அதன்பின் நீ என்னைப் புசிக்கலாம், இது சத்தியம்'' என்றது. இதைக் கேட்ட புலி அதிர்ச்சியடைந்து, பிறகு சம்மதித்தது.

பசு சொன்னபடியே தன் கன்றுக்குப் பால் கொடுத்து பசியாற்றி, மீண்டும் புலியின் முன் வந்து நின்றது. ஆனால் அதைக் கொல்ல விரும்பாத புலி தயங்கி நிற்க, பசு தன் வாக்குப்படி பாறையில் மோதி இறந்தது. புலியும் தன் தவறை உணர்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டது.

அப்போது அங்கே காளை வாகனத்தில் சிவபெருமான் பார்வதியோடு காட்சி தந்து அவர்களை உயிர்ப்பித்தான். பசு காமதேனுவாகவும், புலி கந்தர்வனாகவும் மீண்டும் மாறினர். இதன்பின், காமதேனுவின் வேண்டுதல்படி, திருமலை, சுரபிமலை என அழைக்கப் பட்டது. சிவனின் தலையில் உள்ள கங்கையின் நீர்த்துளி அம்மலையில் சிதறியது. அதுமுதல் சுரபி நதியாகத் தோன்றி பாவம் தீர்க்கும் நதியாக விளங்குகிறது.

திருமால் வழிபட்டார்: துவாபர யுகத்தில் திருமால், நாரதரின் வழிகாட்டுதல்படி பூலாவனம் வந்து சிவனை வணங்கிய போது தில்லை நடனத்தின் காட்சியைக் கண்டு களித்தார். உடனே திருமாலின் வேண்டுதல்படி சிவகங்கைத் தடாகம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இதுபோல இந்திரன், இந்திராணியோடு வந்து தரிசித்து சென்றார். அது முதல் இப்பகுதி அரிகேசரி நல்லூர் என்றும், இறைவன் பெயர் அரிகேசரி நாதன் என்றும் வழங்கலானது. அரி-திருமால், க- பிரம்மா, ஈசர் - உருத்திரர், அரி - இந்திரன் என்பது இதன் பொருளாகும். அரிகேசரி நல்லூரே தற்போது சின்னமனூர் என்று அழைக்கப்படுகிறது.

கற்பக விருட்சம்: பூலாவனப் பகுதியில் சுவை மிகுந்த பால் கிடைக்கும் எனக் கேள்விப்பட்ட மன்னன், ஒரு இடையன் மூலம் தினமும் பால் கொண்டு வருமாறு ஆணையிட்டான். ஒருமுறை பால் கொண்டு வரும் போது பூலாமர வேர் இடறி பால் கீழே கொட்டியது. மூன்றாம் நாளும் இவ்வாறே நடக்க, இடையன் அந்த வேரை வெட்டி அப்புறப்படுத்தினான். உடனே அங்கு ரத்த வெள்ளம் ஓடியது. பூலா மரமாக நின்ற கற்பக விருட்சத்தின் சாபம் இடையன் மூலம் நீங்கியது. காமதேனு மீண்டும் தேவலோகம் சென்றது.

இதற்கிடையில் இச்சம்பவத்தை அறிந்த இராஜசிங்க பாண்டியன், இடையன் காட்டிய இடம் வந்த போது, அங்கே இரத்த வெள்ளம் மறைந்தது. ஜோதி வடிவ மலையாக இறைவன் உருவம் தோன்றியது.

உடனே மன்னன் ""எங்களுக்குத் தெரியும் வகையில் எளிய உருவில் காட்சி தரவேண்டும் என வேண்டினர். அதன்படியே சிறிய வடிவில் இறைவன் காட்சி தந்தார். இறைவன் பூலா வனத்தில்

தோன்றியதால், பூலாவனேசர் என்றும், பால் உண்டதால் பாலுண்ட நாதர் என்றும், அளவு குறைந்து காட்சி தந்ததால், தழுவக் குழைந்தார் அளவுக்களவானவர் என்றும் போற்றப்படலானார். மன்னன் தழுவியபோது அவனது ஆபரணங்களால் ஏற்பட்ட அழுத்தங்கள் இன்றளவும் லிங்கத் திருமேனியில் அடையாளங்களாகக் காணப்படுகின்றன. அதன்பின் இராஜசிங்க பாண்டியன் அவருக்குப் பெரிய ஆலயம் எழுப்பி, வழிபாட்டுக்கு வகை செய்தான் என தலவரலாறு கூறுகிறது. அன்னையின் திருநாமம் சிவகாமி.

தலமரம், தீர்த்தம்: தலமரமாக பூலா மரம் திகழ்கிறது. தீர்த்தமாக சுரபி நதி, அம்மையின் வடபாகம் உள்ள சிவகாமி கூபம், இறைவன் நிறுவிய சிவகங்கைத் தீர்த்தம் என மூவகைத் தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

விழாக்கள்: சித்திரைத் தீர்த்தவாரிப் பெருவிழா 15 நாட்கள் நடைபெறும். வைகாசி விசாகம், முருகன் பால்குட விழா, ஆனித் திருமஞ்சனம், ஆடி முளைக்கட்டு திருநாள், ஆவணி புட்டுத் திருவிழா, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி சஷ்டி, கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா, ஐப்பசியில் தெப்பத் திருவிழா, மாசி மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், அறுபத்துமூவர் திருநட்சத்திர நன்னாள் சிறப்பு வழிபாடுகள் போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

அமைவிடம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ளது

சின்னமனூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.