வழிகாட்டும் போதனை
"கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்'' என்று சொல்வதில் எத்துணை உண்மைகள் உள்ளன என்பதை உணர்த்தும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.


"கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்'' என்று சொல்வதில் எத்துணை உண்மைகள் உள்ளன என்பதை உணர்த்தும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.
உண்மையை அறியும் விசாரணை விழுமியதாய் இருக்க வேண்டும்; நழுவல், தழுவல், வழுவல் இருக்கக் கூடாது என்பதை ""நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதனை மறைத்து பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம்'' என்று கூறுவதன் மூலம் எச்சரிக்கிறது திருக்குர் ஆனின் 2-42வது வசனம். ""எச்சரிக்கையை மீறி பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்'' என்றும் அறிவிக்கிறது அல்குர்ஆனின் 51-10வது வசனம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றதை நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் நவில்வது நபிமொழி நன்னூலாம் புகாரியில் காணப்படுகிறது.
"மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் ஒரு மனிதன் திருடுவதைக் கண்டு அவனிடம் "நீ திருடினாயா?‘ என்று கேட்டார்கள். "எவனைத் தவிர வணக்குத்திற்குரியவன் வேறெவனுமில்லையோ அவன் மீது ஆணையாக நான் திருடவில்லை' என்று பதிலுரைத்தான். உடனே ஈசா (அலை) அவர்கள் "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு என் கண்களை நம்ப மறுத்துவிட்டேன்' என்றார்கள்.
தன் கண்களினும், அக்கண்களால் கண்டதினும் விண்ணகமும் மண்ணகமும் வியந்து போற்றும் இறைவன் மீது ஆணையிட்டு, அம்மனிதன் சொன்னதை நம்பினார்கள் நல்லிறைத் தூதர் ஈசா நபி(அலை) அவர்கள்.
ஒருவன் பாதுகாப்பிற்காக ஒளித்து வைத்து எடுத்த பொருளைத் திருடுவதாக நினைத்த ஈசா நபி(அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து திருடவில்லை என்று சொன்னதும் கருத்தை மாற்றிக்கொண்டார்கள். கண்ணால் பார்ப்பதினும் காதால் கேட்பதினும் தீர விசாரித்து தீர்மானிக்க வேண்டும் என்பதை விளக்கும் இந்நிகழ்ச்சி பத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ என்ற நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.
இறைத் தூதர்களான நபிமார்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் நல்லுலகில் வாழும் மக்களுக்கு நற்போதனைகளாக அமைந்து வழி காட்டுகின்றன. அவ்வழி நடந்து வாழ்வில் வாகை சூட வேண்டும். எந்நிகழ்ச்சியைப் பார்த்தாலும் எந்தச் செய்தியைக் கேட்டாலும் எவர் சொன்னாலும் சொன்னவரின் தன்மை, சொல்லப்பட்ட விதம், அந்தச் செய்தியில் அடங்கியுள்ள உண்மைகளை அறிந்து, தெளிந்து, தேர்ந்து தேவைக்கேற்ப செயல்பட்டால் செம்மை பெறலாம். நன்மை விளையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...