மாட்சி மிகு சாட்சி!
உரிமையியல் வழக்குகளுக்கு ஆவணங்களே அடிப்படை ஆதாரங்கள். ஆயினும் அருகில் உள்ளோர், அந்த ஆவணங்களில் அறிவதாக கையொப்பமிட்டோர்


உரிமையியல் வழக்குகளுக்கு ஆவணங்களே அடிப்படை ஆதாரங்கள். ஆயினும் அருகில் உள்ளோர், அந்த ஆவணங்களில் அறிவதாக கையொப்பமிட்டோர், அறிந்தோர் சாட்சியங்களும் ஆவணங்களுக்கு வலு சேர்ப்பது வரலாறு.
குற்றவியல் வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்க சாட்சிகளே சான்றுகள். காட்சிகளைக் கண்ணால் கண்ட, அறிந்த, தெரிந்த சாட்சிகள், ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட சாட்சிகள் அழைக்கப்படும்பொழுது அலைக்கழிக்காமல் விசாரணை மன்றங்களுக்கோ, நீதி மன்றங்களுக்கோ மறுக்காமல் சென்று சாட்சி சொல்ல வேண்டும். சுயநலம், சுய லாபம் கருதி பொய் சாட்சி கூறக் கூடாது.
பணக்காரர்களுக்கு பயந்தோ ஏழைகளுக்கு இரக்கம் காட்டியோ பொய் சாட்சி சொல்லக் கூடாது. தயவு, தாட்சண்யம் சாட்சியில் சம்பந்தப்படக் கூடாது.
சாட்சியத்தின் மாட்சியை விளக்க அல்லாஹ், மனிதர்களை ஏற்றத் தாழ்வற்ற நடுநிலையான வகுப்பினராக படைத்து, மற்ற மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடிய சாட்சியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் படைத்திருப்பதாக திருக்குர்ஆன் 2-143வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
மனிதன் எப்படி வாழ வேண்டும், எந்த சந்தர்ப்பங்களில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் முன் மாதிரியான சாட்சியே முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்வு.
முன் ஒன்று சொல்லி பின்னர் கையூட்டு பெற்றோ, மிரட்டல் உருட்டலுக்குப் பயந்தோ, பிறிதொன்று கூறும் பிறழ் சாட்சியமாக மாறக் கூடாது. சாட்சிகளின் தவறால் நிரபராதி தண்டனை பெறுவான்; குற்றவாளி தப்பித்து விடுவான். அதனால் மன சாட்சிக்கு விரோதமில்லாமல் இறைவனுக்குப் பயந்து பார்த்ததைப் பார்த்தபடி, கேட்டதைக் கேட்டபடி தடுமாறாது தக்கபடி சொல்வதே மிக்க பயனுடைய நீதியை நிலைநிறுத்தும் சாட்சி.
""ஒருவர் மரண வேளையில் மரண சாசனம் (வஸிய்யத்) கூறும் பொழுது இறை நம்பிக்கையுடைய நேர்மையான இருவர் சாட்சியாக இருக்க வேண்டும்'' என்று திருக்குர்ஆனின் 5-106வது வசனம் தெரிவிக்கிறது. உண்மையான இறையச்சமுடைய நம்பிக்கையைளர்களே சாட்சிக்குரிய மாட்சியாளர்கள்.
இஸ்லாமிய திருமணங்களில் இருவர் சாட்சியமாக இருப்பது வழக்கம். இவ்வழக்கம் குர்ஆனின் ""திருமணத்திற்கும் விவாக விலக்கிற்கும் இரு சாட்சிகள் இருக்க வேண்டும். அவ்விரு சாட்சிகளும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி அல்லாஹ்விற்காக சாட்சி கூற வேண்டும்'' என்ற 65-2வது வசனப்படி வந்த வழக்கம்.
சந்தர்ப்பம் ஏற்படும்பொழுது சொந்தம், பந்தம், பாசம், நேசம், விரோதம், குரோத குணங்கள் குறுக்கிடாது அருமறையாம் திருக்குர்ஆன் கூறும் வழியில் உண்மையாய் சாட்சி சொல்லி மாட்சி பெறுவோம். மகோன்னதமான அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...