நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தற்பெருமை வேண்டாம்

பண, இன, குலப் பெருமை பேசுவதால் பெரும் பிணக்குகளே ஏற்படும். இணக்கமான இயல்பு மாறி, சமத்துவம் சரிந்து, சமூக ஒற்றுமை குலையும். ஆக்க முயற்சிகள் அழியும்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:13 pm

மு. அ. அபுல் அமீன்

பண, இன, குலப் பெருமை பேசுவதால் பெரும் பிணக்குகளே ஏற்படும். இணக்கமான இயல்பு மாறி, சமத்துவம் சரிந்து, சமூக ஒற்றுமை குலையும். ஆக்க முயற்சிகள் அழியும்.

மக்களை அழகாகப் படைத்து, அம்மக்கள் அழகாக வாழ்வதை நேசிக்கும் இறைவன் அந்த அழகால் ஆணவம் கொள்வதைத் தூசிக்கிறான். மக்களுக்கு செல்வம் கொடுத்து, செழிப்பாய் வாழ வைக்கும் இறைவன் செல்வத்தால் செருக்குறுவதை வெறுக்கிறான். மக்களை நல்ல குலத்தில் பிறக்க வைத்து நல் வாழ்வு வாழ வைக்கும் அல்லாஹ் மூதாதையர் பெருமை பேசி மோதலுக்கு வித்திடுவதை மொத்தமாக சாடுகிறான்.

"மனிதன் அழகாய் தூய்மையாய் இருப்பதை அழகிய அல்லாஹ் நேசிக்கிறான். ஆனால் உண்மையை மறந்து மற்ற மனிதர்களை இழிவாக எண்ணி தன்னில் தானே செருக்கடையும் பெருமையை உள்ளத்தில் உடையவன் சுவனபதி செல்லமாட்டான்'' என்று ஏந்தல் நபி(ஸல்) எடுத்துரைத்ததை உரைக்கும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் அறிவிப்பை முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணலாம்.

இமாம் கஸ்ஸôலி (ரஹ்) அவர்கள் எழுதிய ""இஹ்யாவுல் உலூமித்தீன்'' என்ற நூலில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. ஒரு முறை மூஸô நபி வெளியே செல்கையில் இருவர் குலப் பெருமையைக் கூறி வாதிட்டனர்.

"என் குலச் சிறப்பு எழுத முடியாத அளவு பெரியது. வம்ச பெருமையை வர்ணிக்க வார்த்தைகள் போதாது'' என்று எட்டு தலைமுறையைத் தொட்டுக் காட்டினான் ஒருவன்.

மூசா நபி அவர்களுக்கு வஹி(இறையறிவிப்பு) உள்ளத்தில் உதித்தது. ""மூசாவே! பெருமை பேசும் அம்மனிதனிடம் கூறுங்கள். உன் மூதாதையர் எண்மரும் நரகத்தில் இருக்கிறார்கள். ஒன்பதாவதாக நரகத்திற்குப் போக வேண்டியவன் நீ''.

குலப் பெருமை நிலை குலைத்துவிடும் என்பதை அறிந்த இமாம் அஹ்மதிப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் புகழ்பெற்ற ஷைபான் என்ற அரபு வம்சத்தில் பிறந்தவர்கள் ஆயினும் குலச் சிறப்பை யாரிடமும் கூறியதில்லை. எப்படியோ இமாம் அவர்களின் வம்சா வழியை அறிந்த அபூநுஃமான் இமாம் அவர்களிடம் "நீங்கள் சிறப்புடைய அரபு கிளையான ஷைபான் குலத்தைச் சேர்ந்தவர் என்ற செய்தி கிடைத்தது. உண்மையா?'' என்று கேட்டார்.

இமாம் அஹ்மதிப்னு ஹன்பல் (ரஹ்) ""நாங்கள் மிஷ்கீன் மக்களைச் சார்ந்தவர்கள்'' என்று சாந்தமாக பதில் சொன்னார்கள். மிஷ்கீன் என்ற சொல் வறுமைக் கோட்டிற்குக் கீழே விழாத ஏழையைக் குறிக்கும்.

"பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். அவ்வாறு நடப்பதால் நிச்சயமாக பூமியைப் பிளந்து விட முடியாது. மலையின் உச்சியை அடைந்து விடவும் உங்களால் முடியாது'' என்று திருக்குர்ஆனின் 17-37வது வசனம்

கூறுகிறது.

கர்வத்தில் நிலம் அதிர நடப்பவரால் பூமியைப் பிளந்து விட முடியாது. கர்வத்தில் தலை நிமிர்ந்து நடப்பவரால் மலையின் உச்சியை எட்ட முடியாது என்று தற்பெருமையுடன் கர்வமாய் நடப்பவரைக் கண்டித்து அமைதியாகவும், அடக்கத்துடனும் பணிந்து நடக்க அறிவுறுத்துகிறது அல்குர்ஆனின் வசனம்.

பெருமை அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. மனிதன் தன்னைத் தானே எவ்வகையிலும் பெருமைப் படுத்திக்கொள்ளக் கூடாது. மனிதன் அற்பமான தற்பெருமையை விட்டு விலகி பணிவுடையவனாக அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அமரருள் உய்க்கும் அடக்கத்தைப் பேணி பாரில் சீராய் வாழ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.