நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருந்தோம்பும் விழுமிய பண்பு

விருந்தோம்பும் விழுமிய பண்பு தழுவிடும் சுற்றம், நட்பு நழுவிடாமல் வழுவிடாமல் காக்கும் வலுவான அரண்,ஊரையே உறவாக்கும்; உறவை ஊர் கடந்தும் விரிவாக்கும்; நாடு கடந்த நட்பையும் நல்கிடும்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:07 pm

மு. அ. அபுல் அமீன்

விருந்தோம்பும் விழுமிய பண்பு தழுவிடும் சுற்றம், நட்பு நழுவிடாமல் வழுவிடாமல் காக்கும் வலுவான அரண்,ஊரையே உறவாக்கும்; உறவை ஊர் கடந்தும் விரிவாக்கும்; நாடு கடந்த நட்பையும் நல்கிடும். எவ்விருந்தை ஏற்க வேண்டும். எவ்விருந்தைத் தவிர்க்க வேண்டும் என்று தாஹா நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததோடு வாழ்விலும் கடைபிடித்துத் காட்டினார்கள்.

ஒரு நாள் சத்தாது என்பவரின் சகோதரி சாந்த நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் அனுப்பினாள். ஏந்தல் நபி ( ஸல்) அவர்கள் அப்பால் எங்கிருந்து கிடைத்தது? என்ற வினா எழுப்பி திருப்பி  அனுப்பினார்கள்.

அப்பெண்ணோ அப்பால் அவளுடைய ஆட்டிலிருந்து கறந்தது என்று கூறி பால் பாத்திரத்தை மீண்டும் அனுப்பினாள். அந்த ஆடு அவளுக்கு எப்படி சொந்தமானது? என்று கேட்டு மீண்டும் திருப்பி  அனுப்பினார்கள். திருநபி ( ஸல்) அவர்கள்.

அப்பெண்ணும் அவளின் சொந்த பணத்திலிருந்து வாங்கிய ஆட்டின் பால் என்று பதிலுரைத்து பாலைப் பருகுமாறு அனுப்பினாள். பெருமான் நபி ( ஸல்) அவர்கள் பாலைப் பெற்றுக் கொண்டதும் அப்பெண்  அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் திரும்ப திரும்ப பாலைப் பெற்று கொள்ள மறுத்த காரணத்தைக் கேட்டாள்.

முஹம்மது நபி ( ஸல்) அவர்கள், " தூதர்களே! பரிசுத்தமானவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள்' என்ற எழில் மறை திருக்குர்ஆனின் 23-51வது வசனத்தை ஓதி ஹலாலைத் (ஆகுமானதை) தவிர  வேறெதுவும் உண்ணலாகாது என்பதால் வந்த பால், தந்த பால் ஹலாலா என்பதை உறுதிப்படுத்தவே திருப்பி அனுப்பியதாகக் கூறினார்கள்.

பனூ கினானா கோத்திரத்தைச் சேர்ந்த பனுலை திப்னி அமர் என்ற குலத்தினர் விருந்தினர் இல்லாமல் உணவு உண்ண மாட்டார்கள், அவர்களின் முன் வைக்கப்பட்ட உணவை உண்ணாது காலை முதல்  மாலை வரை விருந்தினரை எதிர்பார்த்து பசியோடு காத்திருப்பார். இதனால் " நீங்கள் தனித்தும் உண்ணலாம். சேர்ந்தும் சாப்பிடலாம்' என்ற திருக்குர்-ஆனின் 24-61 வது வசனம் இறக்கப்பட்டது.

விருந்தினரை எதிர்பார்த்து உண்ணாதிருக்க வேண்டாம்; தனித்தும் உண்ணலாம் என்பதே இந்த ஆயத்தின் கருத்து. விருந்தினர் காத்திருக்க அவர்களைப் புறக்கணித்து வீட்டினுள் சென்று தான் மட்டும்  தனித்துன்பது கூடாது. " இரு கண்களையுடைய ஒருவன் பார்த்து கொண்டிருக்க அவனுக்குத் தராது மற்றவன் " உண்டால் உண்டவரை மருந்தில்லா நோயால் வருந்த செய்வான் அல்லாஹ்" என்று  அண்ணல்நபி ( ஸல்) அறிவித்தார்கள்.

திருக்குர்ஆன் கூறும் முறையில் திரு நபி ( ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழியில் நல் விருந்து நல்கி, நல்விருந்து உண்டு உறவையும் நட்பையும் பேணி நல் வாழ்வு வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.