/

பாவ மன்னிப்பு!

வீட்டில், நாட்டில் நடக்கும் குறைகள், கோணல்கள், மாற்றங்கள், ஏமாற்றங்கள், அபாயங்கள், ஆபத்துகள், அகால நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் அவரவர் செய்யும் தவறுகள், அக்கிரமங்கள், அநியாயங்கள், அநீதிகள்தான் என்ப

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:05 pm

மு. அ. அபுல் அமீன்

வீட்டில், நாட்டில் நடக்கும் குறைகள், கோணல்கள், மாற்றங்கள், ஏமாற்றங்கள், அபாயங்கள், ஆபத்துகள், அகால நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் அவரவர் செய்யும் தவறுகள், அக்கிரமங்கள், அநியாயங்கள், அநீதிகள்தான் என்பதை நாம் கண்ணால் காண்கிறோம். எனவே நீதி நூல்கள், நேர்மையாக, முறையாக, நெறியோடு வாழ அறிவுறுத்துகின்றன. அவ்வாறு வாழ்வதே அறவாழ்வு. நிறை மனத்தோடு இறைவனிடம், செய்த தவறுகளுக்கு மன்னிப்பு தேடி மீண்டும் அந்தத் தவறுகளை செய்யாமல் உறுதியாக நடந்தால் குறையில்லா நிறை வாழ்வு வாழலாம்.

ஹஜ்ரத் ஹசன் பிஸ்ரீ என்ற பெரியவரிடம் ஒருநாள் ஒருவர், ""நாட்டில் பஞ்சம் நிலவுகிறதே! பஞ்சம் தீர பரிகாரம் என்ன?'' என்று கேட்டார். பெரியவர் ஹஜ்ரத் ஹஸன் பிஸ்ரீ பாவ மன்னிப்பு தேடுமாறு பதில் சொன்னார். அடுத்து வந்தவர் வறுமை நீங்க வழிகாட்ட வேண்டினார். பெரியவரோ, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி பாவ மன்னிப்பு கோர கூறினார். மூன்றாவதாக வந்தவர் குழந்தைப் பேறு இல்லை என்று குறைபட்டார். ""மக்கள் செல்வம் பெற தக்க பரிகாரம், மிக்க பணிந்து பாப மன்னிப்பு தேடுவதே'' என்றார் பெரியவர். நான்காவதாக வந்தவர், ""நாளும் நிலத்தில் விளைச்சல் குறைகிறதே'' என்று விசனப்பட்டார். ஹசன் பிஸ்ரியோ "'விளைச்சல் பெருக அல்லாஹ்விடம் அனைத்து பாபங்களையும் நினைத்து நெக்குருகி பாவ மன்னிப்பு கேளுங்கள்'' என்று

நவின்றார்.

அந்தப் பெரியவரின் அருகிலிருந்த ரபீவு பின் ஸýபைஹ் என்பவர், ""நால்வரும் ஆளுக்கொரு குறையைக் கூறி நிறைவு எய்திட இறையருள் பெறும் வழிகாட்ட வேண்டினர். அனைவருக்கும் பாப மன்னிப்பே பரிகாரம் என்ற ஒரு பதிலில் பொதிந்துள்ள பொருளைப் புரிய முடியவில்லையே'' என்றார்.

ஹஜ்ரத் ஹஸன் பிஸ்ரீ அவர்கள் அல்குர்ஆனின் அத்யாயம் 71ல் நூஹ் நபி போதித்த 10 முதல் 12 வரை உள்ள வசனங்களை ஓதினார்கள். ""உங்கள் ரட்சகனிடம் மன்னிப்பு தேடுங்கள். நிச்சயம் அல்லாஹ் மன்னிப்பான். அவனே வானிலிருந்து மழை பொழியச் செய்வான். ஆறுகளில் நீரோடச் செய்து தோட்டங்களை உண்டாக்குவான். பொருட் செல்வத்தையும், மக்கள் செல்வத்தையும் வழங்குவான்'' என்று நவின்றார்கள். நாமும் அறிந்தோ அறியாமலோ உண்மைக்கு மாறாய் நடந்திருந்தால் அதனால் பாதிக்கப்பட்டிருப்பவரிடமும், இறைவனிடமும் மன்னிப்பு கோருவோம். நன்னிலை எய்துவோம்.





 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.