குறைவிலா செல்வம் தரும் குபேரன்!
திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழ்வேளூர். இங்குதான் அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்புரியும் இறைவன் அட்சயலிங்கசுவாமி எ


திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழ்வேளூர். இங்குதான் அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்புரியும் இறைவன் அட்சயலிங்கசுவாமி என்று அழைக்கப்படுகிறார். "அ+க்ஷயம்' என்றால் "கேடு இல்லை' என்பது பொருள். எனவே தமிழில் இறைவனை கேடிலியப்பர் என அழைத்துப் போற்றுகின்றனர்.
காவிரி ஆற்றின் பிரிவான ஓடம் போக்கி ஆற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. காவிரிக் கரையின் தென் கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களில் 84வது தலம் இது.
திருநாவுக்கரசர் பெருமான், இத்தலத்து இறைவனை தரிசிப்பவர்களுக்கும் வழிபடுவோர்க்கும் கேடில்லை-துன்பமில்லை என்பதை ""ஆளுங்கோவைக் கேடிலியை நாடும் அவர் கேடிலாரே'' என தமது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் போற்றுவதைக் காணலாம்.
பெருந்திருக்கோயில்: சம்பந்தர் பெருமான் இக்கோயிலை "பெருந்திருக்கோயில்' எனப் போற்றுகின்றார். சுந்தரர் பெருமான் "திருநாகைக் காரோணத் திருத்தாண்டகத்தில்' இத்தலத்தைப் போற்றிப் பாடுகின்றார்.
எனவே மூவராலும் பாடல் பெற்ற சிறப்புடைய தலம் இது. அந்தகக் கவி வீரராகவ முதலியார் இத்தலச் சிறப்பினை "கீழ்வேளூர் உலா'வில் எடுத்துக் கூறுகின்றார்.
இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதர், அட்சயலிங்க சுவாமியைப் போற்றி, ரூபக தாளத்தில், சங்கராபரண ராகத்தில் "அட்சயலிங்க விபோ-ஸ்வயம்போ' என்ற கீர்த்தனையை இயற்றியுள்ளது சிறப்பு.
மாடக்கோயில்: இக்கோயில் "மாடக்கோயில்' வகையைச் சேர்ந்தது. "சித்திரக்கூட பர்வம்' என்ற கட்டுமலை போன்ற, உயர்ந்த பீடம் போன்ற அமைப்பின் மீது சுவாமி கோயிலும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் அமைந்துள்ளன. சுவாமி சந்நிதி விமானம் முழுவதும் கல்லாலேயே கட்டப்பட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது.
கருவறையில் கேடிலியப்பர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய இறைவடிவங்களைக் காணலாம்.
தேவ கோட்டங்களுக்கு இடையே எண்திசைக் காவலர் (அஷ்டதிக்பாலர்) அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது வடிவங்களும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
கோயிலின் அடித்தளம் இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் மராத்திய மன்னர் துக்கோஜி, துலஜாஜி காலத்தில், கீழ்வேளூர் வெங்கடபதியா பிள்ளை மற்றும் வடமலைப்பிள்ளை ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டதையும் கல்வெட்டுகளால் அறிகிறோம்.
இலந்தை வனம்: இக்கோயிலின் தலமரமாக இலந்தை மரம் விளங்குகிறது. தட்சிண பத்ரிகாரணியம் என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்படுகிறது. இக்கோயிலின் திருச்சுற்றில் பத்ரி விநாயகர், மகாலட்சுமி, ஜம்புகேசுவரர், காளத்தீசுவரர், அண்ணாமலையார், விசுவநாதர், பிரகதீசுவரர், ஆளும் கோவேசுவரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் வலம் வந்தால் பல கோயில்களுக்குச் சென்று வந்த மன நிறைவு உண்டாகும்.
குபேரன் சந்நிதி: செல்வ வளம் வழங்கும் குபேரனுக்கு இங்குள்ள திருச்சுற்றில் தனி சந்நிதி அமைந்துள்ளது சிறப்பு. மக்கள் தமது இல்லங்களில் செல்வம் கொழிக்க, வெள்ளிக் கிழமைகளிலும் அட்சய திருதியை நன்னாளிலும் இச்சந்நிதியில் வழிபடுகின்றனர்.
முருகன் வழிபட்ட தலம்: முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த பின்னர் ஏற்பட்ட தோஷத்தை நீக்க இத்தலத்தில் தவமிருந்து இறைவனை வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது.
அஞ்சுவட்டத்தம்மன்: முதல் திருச்சுற்றில், வடகிழக்கு மூலையில், காளியம்மன் வடக்கு நோக்கி "அஞ்சுவட்டத்தம்மன்' என்ற பெயரில் அருள்புரிகின்றாள். முருகனின் தவத்திற்கு இடையூறு நேரா வண்ணம் காத்ததாக தல வரலாறு கூறுகிறது. நமக்கும் துன்பம் ஏற்படாமல் காப்பவள் அவள். அமர்ந்த கோலத்தில் பச்சை வண்ணத் திருமேனி உடையவளாய் சிவப்பு நிற ஆடை அணிந்து எட்டு திருக்கரங்கள் கொண்டு நம்மை காத்து வருகிறாள். சுதையால் ஆன திருமேனி என்பதால் சாம்பிராணி தைலம் சாத்தப்படுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.
வலது பாத நடராஜர்: இத்தலத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்ததால் இறைவன் "காட்சி கொடுத்த நாயகர்' என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அகத்தியர் இறைவனின் வலது பாத தரிசனத்தை காண விரும்பினர். அதன்படி இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் ஆடல்வல்லானை இங்கே காணலாம்.
வனமுலை நாயகி: முதல் திருச்சுற்றில் கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி உள்ளது. தனது மேலிரு கரங்களில் அட்ச மாலை, தாமரை மலர் ஆகியவற்றை தாங்கியும், கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கியும் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அம்பாள் காட்சி தருகிறாள்.
அட்சய திருதியை நன்னாளில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களை வழிபட்டு ஈடில்லா இன்பம் பெறுவோம். குபேரனை வழிபட்டு செல்வம் நிறையக் காண்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...