/

தலையாய தர்மம்!

இஸ்லாமியர்களுக்கு இவ்வுலக வாழ்வு மறுமையை நோக்கிய பயணம்தான். அவ்வாறு வாழ்வோருக்கு இவ்வுலகம் மறு உலகின் விவசாய பூமி. மறுமையில் நற்பலன் பெற இவ்வுலக விவசாய பூமியில் நற்கிரியைகளான விதைகளை நட்டு, நீர் ஊற்றி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:09 pm

மு. அ. அபுல் அமீன்

இஸ்லாமியர்களுக்கு இவ்வுலக வாழ்வு மறுமையை நோக்கிய பயணம்தான். அவ்வாறு வாழ்வோருக்கு இவ்வுலகம் மறு உலகின் விவசாய பூமி. மறுமையில் நற்பலன் பெற இவ்வுலக விவசாய பூமியில் நற்கிரியைகளான விதைகளை நட்டு, நீர் ஊற்றி வளர்ப்பது போல அந்நற்செயல்களைத் தொடர்ந்து செய்து மறுமையின் அறுவடையில் அதிக விளைச்சலைப் பெறலாம்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இருவருக்கிடையே நீதி வழங்குதல், வாகனத்தில் ஏற, சுமையை ஏற்ற, இறக்க உதவுதல், இனியன இயம்பல், இடர் தரும் முட்கள் போன்றவற்றை பாதையிலிருந்து அகற்றல் ஆகியவற்றை நற்செயல்கள் என்று நவின்றார்கள்.

 அவற்றில் அகத்தில் இறையச்சத்தோடு இறைவனின் பொருத்தமான இன்னருளை நாடி செய்யும் தர்மமே தலையாயது. அத்தலையாய தர்மம் இம்மையிலும் நம் தலையைக் காத்து மறுமையிலும் நரகத்திலிருந்து நம்மைக் காக்கும் என்பதை எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் ""பேரிச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்''(புகாரி) என்று கூறினார்கள்.

 இதையே இறைமறையின் 2-265வது வசனம் ""தங்களின் பொருட்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடி இறையச்சத்தோடு செலவு செய்கிறவர் உயரமான தோட்டத்தைப் போன்றவர். அத்தோட்டத்தில் பெரு மழை பெய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். மழை இல்லாத பொழுதும் பனித் துளியால் பலன் கிடைக்கும். உங்களின் செயல்களை உற்றறிபவன் அல்லாஹ்'' என்று கூறுகிறது.

 தர்மம் எந்த நோக்கத்திற்காக செய்யப்படுகிறது என்பதை நன்கறிபவன் அல்லாஹ். நல்ல நோக்கத்திற்காக அல்லாஹ் அறிவுறுத்தியபடி செய்யும் தர்மம் மலைமேல் உள்ள தோட்டத்திற்கு ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது. மலைமேல் விளைந்த காய் கனிகளை மக்கள் மிகவும் விரும்பி உண்பர். மலைமேல் உள்ள தோட்டங்கள் மழை பெய்தால் பெரும் விளைச்சலைத் தரும். மழை பெய்யாவிடினும் பொழியும் பனியால் பழுத்து குலுங்கி பலன் தருவதைப் போல உள்ளபடியே செய்யும் நல்ல தர்மம் இம்மை மறுமை இரண்டிலும் இணையற்ற பலனைத் தரும்.

 அவ்வாறே நாமும் நல்ல நோக்கத்தோடு தர்மம் செய்து நிலையற்ற இவ்வுலகில் நிம்மதியையும் நிலையான மறுமையில் மலர்ச்சியையும் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.