/

சதுர ஆவுடையார்! சாட்டையடி!

காமதேனுவும் அதன் மகள்களான நந்தினி, சபளி, விமலை, பட்டி என ஐவகைப் பசுக்களும் பால் பொழிந்து வணங்கும் சக்கரமாக விளங்குவது ஆசுர நேமச் சக்கரமாகும். "நேமம்' என்ற பெயரில் விளங்கும் தலங்கள் யாவும் இப்பசுக்கள்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:33 pm

பனையபுரம் அதியமான்

காமதேனுவும் அதன் மகள்களான நந்தினி, சபளி, விமலை, பட்டி என ஐவகைப் பசுக்களும் பால் பொழிந்து வணங்கும் சக்கரமாக விளங்குவது ஆசுர நேமச் சக்கரமாகும். "நேமம்' என்ற பெயரில் விளங்கும் தலங்கள் யாவும் இப்பசுக்கள் பால் பொழிந்து வழிபடும் தலங்களாகும். (இதன் பூர்வீகப் பெயர் "நியமம்' ஆகும்.) இவ்வகையில் தலையாய தலமாக விளங்குவது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நேமம், அமிர்தாம்பிகை உடனுறை ஆவுண்டீஸ்வரர் திருக்கோயிலாகும்.

   முன்னொரு காலத்தில் செடிகளின் நடுவே தோன்றிய லிங்கத்தின் மீது காராம் பசு ஒன்று தானாகவே பால் பொழிய, அதன் சிறப்பை அறியாத மாடு மேய்ப்பவன் பால் வீணாகிறதே என்று பசுவை சாட்டையால் அடித்தான். ஆனால், அந்த அடியை அங்கிருந்த லிங்கம் தாங்கிக் கொண்டது. அதன்பின் வெளி உலகிற்குத் தெரிய வந்த இறைவன், இன்று வரை தன்னை நாடி வரும் அடியவர்க்கு அருள் வழங்கி வருகிறார். இந்தத் தலபுராணத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சாட்டை வடுக்கள், லிங்கத்தின் மீது இன்றும் காணப்படுகின்றன.

பெண்களுக்கு ஏற்ற தலம்

  ஜீவன்களை உருவாக்கும் ஜீவநதியாகத் திகழ்வது பெண்ணினமே! அந்தப் பெண்களின் பிறப்பிற்கு ஆதார சக்தியாகத் திகழும் தலம் நேமமாகும். தெய்வப் பசுக்கள் எப்படி ஆசுர நேமச் சக்கரத்திற்கு பால் பொழிகின்றனவோ அதேபோல தன்னிடம் உருவான ஜீவனுக்கு (குழந்தை) தினந்தோறும் பால் பொழியும் வடிவாகத் தாய்க்குலங்கள் திகழ்கின்றனரே! உலக ஜீவன்களின் உன்னத வாழ்விற்குத் தேவையான மூலாதார அமிர்த சக்திகளைத் தரும் அம்பிகையாக நேமத்தில் தேவி குடி கொண்டிருக்கிறாள். இந்த அமிர்தாம்பிகை, உலக சிருஷ்டிக்கு முன்னரே மாதர் குலம் உய்வு பெற வேண்டி ஆவுண்டீஸ்வரரின் திருவருளை நாடி தவம் புரிந்து, சிவனை மணந்த தலம் நேமமாகும். ஆக பெண்களின் நல்வாழ்விற்காக அன்னை தவமிருந்து அருள் பெற்றுத் தந்த தலமாக இவ்வூர் விளங்குகிறது. இதனால் பெண்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் வந்து வழிபட்டு நன்றி கூற வேண்டிய தலமாக இவ்வூர் அமைகிறது. அதேபோல குழந்தைப் பேறு வேண்டுவோர்க்கு இத்தலம் கண்கண்ட தலமாகத் திகழ்வதால், பெண்கள் இங்கு பெருமளவில் வந்து சக்தியையும், சிவத்தையும் பூஜித்துப் பயன் பெறுகின்றனர். நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வளையல்கள் படைத்து இங்கு வழிபடுவது சிறப்பு.

மகம்-பூரம்

  சிவ ஆலயங்கள் சில நட்சத்திரக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குவது போல, மகம் மற்றும் பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இத்தலம் சிறந்தது எனப் பெரியோர்கள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபடுவதன் மூலம் அவர்களின் குறைகள் அனைத்தும் நீங்குகின்றன.

பித்ரு தோஷம்

  நம்முடைய வாழ்வில் நன்மை-தீமைகள் நமது முன்னோர்களின் ஆசியைப் பொறுத்தும் அமைகிறது என ஜோதிட சாத்திரம் சொல்கிறது. அந்த வகையில் முன்னோர்களின் சாபத்தினால் ஏற்படும் குறைகளைக் களையவும், அவர்களை அமைதியுடன் வாழச் செய்யவும், இவ்வாலயம் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. இதற்காக அமாவாசை தினங்களில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பைத் தரும்.

கல்வெட்டுகள்

  நேமம் என்பது நியமம் என்ற பழஞ்சொல்லின் மறுவடிவமே ஆகும். நெடுங்குடி நுடங்கும் நியம முதூர் (நற்றிணை) நெடுநீர் கழனிசூழ் நியமம் (சீவக சிந்தாமணி), திருவீற்றிருக்கும் தீதுதீர் நியமம் (திருமுருகாற்றுப்படை), விழுப்பெரு நியமம் (மலைபடுகடாம்), பொன்னுடை நியமம் (பதிற்றுப்பத்து) என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். இந்த வகையில் நியமம் என்றழைக்கப்படும் ஊர்கள் அனைத்தும் பழமையானவை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். நேமத்தைச் சுற்றிலும் பழைய கற்காலக் கருவிகளும், புதிய கற்காலப் பொருட்களும் தொல்லியல் ஆய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன. என்றாலும் அதிக அளவில் கல்வெட்டுகள் கண்டறியப்படவில்லை. முதல் வரலாற்றுச் சான்றாக இவ்வாலயத்தில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு திகழ்கிறது. "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் கோட்டத்து திருவேற்காட்டு நாட்டு நியமம்' என இவ்வூர் அதில் குறிப்பிடப்படுகிறது. இவ்வாலயத்தில் கிடைத்த மற்றொரு கல்வெட்டின் மூலம் இக்கோயில் இரண்டாம் ராஜராஜ சோழன் 24ஆவது ஆட்சியாண்டான கி.பி. 1170க்கு முன் கட்டப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மண் தளியாக இருந்த ஆலயம் செங்கற்தளியாக மாறி, இன்று கற்றளியாக வளர்ச்சி பெற்றுள்ளது. இக்கல்வெட்டுகளில் இறைவன் பெயர், "திரு அகஸ்தீஸ்வரமுடைய நாயனார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே காலப்போக்கில் "ஆவுண்டீஸ்வரர்' என மருவியிருக்கலாம் அல்லது ஆநிரை பொழிந்த பாலை ஏற்றதாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

இறைவன்-இறைவி

  எளிய கருங்கல் கட்டிட அமைப்பில் தெற்கு நோக்கிய வாசல் வழியே நுழைந்ததும், தென்திசை நோக்கி அன்னை அமிர்தாம்பிகை அழகுடன் காட்சி தருகின்றாள். அன்னையின் கழுத்து வலதுபுறம் சற்றுச் சாய்ந்து, நம் கோரிக்கையை செவிமடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல, அன்னை நம் குறையைத் தீர்க்க முன்வருவதற்குச் சான்றாக வலது கால் சற்று முன் வைத்த நிலையில் அமைந்துள்ளது. அன்னையை தரிசித்து மேற்கு முகமாய்த் திரும்பினால், கிழக்கு நோக்கிய இறைவன் ஆவுண்டீஸ்வரர் காட்சி தருகிறார். சதுர வடிவ ஆவுடையாரின் மேல் விளங்கும் இவர் திருமேனியில்தான் சாட்டை அடியின் அடையாளங்கள் காணப்படுகின்றன.

பிற தெய்வங்கள்

  பால விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், சிவ-விஷ்ணு துர்கை, வள்ளி தெய்வயானை உடனுறை முருகர், வரசித்தி விநாயகர், வைரவர், காசி விசுவநாதர், விசாலாட்சி, நந்தீஸ்வரர், பலிபீடம் என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ள இத்தலம், பைரவர் சந்நிதியை முதன்மையாகக் கொண்டு அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

தீர்த்தம்

  ஆலயத்தின் எதிர்புறம் "பித்ரு முக்தி தீர்த்தம்' அமைந்துள்ளது. எட்டு பெரிய பித்து பரிபாலன குளத்துறைகளுடன் இது விளங்கியது. இப்போது புனரமைக்க வேண்டிக் காத்து நிற்கின்றது.

அமைவிடம்

 திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் "நேமம்' அமைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டிற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர், பூந்தமல்லிக்கு வடமேற்கே 10 கிலோமீட்டர், திருமழிசையிலிருந்து மேற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது. பசுமையான வயல்வெளிகளின் நடுவே ஊரும், ஆலயமும் அமைந்துள்ளன. இவ்வூரில் பழைமை வாய்ந்த நித்திய கல்யாண வீரராகவப் பெருமாள் கோயிலும் இருக்கின்றது.

திருப்பணி

  இப்பழம்பெருமை வாய்ந்த சிவாலயம், தன் பொலிவினைத் திரும்பப் பெற பொருளுதவி வேண்டிக் காத்து நிற்கின்றது. இச்சிறப்பு வாய்ந்த தலத்தைப் புதுப்பிக்க வேண்டியது ஒவ்வொரு அடியாரின் தலையாய கடமையாகும். திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி- நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை டிரஸ்ட், 73 வெள்ளாளர் தெரு, நேமம் அஞ்சல், சென்னை-602107. தொடர்புக்கு: குமார் 98407 70248, 9940136217.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.