/

புகழ்ந்தது போதும்... போ.. எழுந்து!

தலைவன் ஒருவன் தலைவியைக் கைவிட்டு, பரத்தையை நாடி இன்புற்றிருந்தான்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:23 am

முனைவா் கி. இராம்கணேஷ்


தலைவன் ஒருவன் தலைவியைக் கைவிட்டு, பரத்தையை நாடி இன்புற்றிருந்தான். அதனால், தலைவி அவன் மீது ஊடல் கொண்டு வருந்தினாள். நீண்ட காலம் பரத்தையின் வீட்டிலேயே காலம் கழித்த தலைவன், தலைவியை நாடிவர ஆயத்தமானான். தலைவி தன் மீது கொண்ட ஊடல் நீங்கிய பின்னரே இல்லம் செல்ல முடியும் என்பதை உணர்ந்து, பாணன் ஒருவனை தலைவியிடம் பேசி, சமாதானத்தை ஏற்படுத்த தூதனுப்பினான்.

தலைவியின் இல்லம் சென்ற பாணன், தலைவனைப் பலவாறு புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தான். தலைவியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அச்சூழலில் பின்வருமாறு பாணனைப் பார்த்துக் கூறுகிறாள்:

பொய்கைநல் லூரன் திறம்கிளத்தல் என்னுடைய
எவ்வம் எனினும் எழுத்தீக வைகல்
மறுவில் பொலந்தொடிவீசும் அலற்றுஞ்
சிறுவனுடையேன் துணை'  (ஐந். எழு. 55)

""பாணனே! நாள்தோறும் குற்றம் இல்லாத பொன்னால் செய்த வளையலணிந்த கைகளை வீசியும், விரித்தும் விளையாடும் என் புதல்வனாகிய சிறுவனைப் பாதுகாவலாகக் கொண்டுள்ளேன். நல்ல மருதநிலத் தலைவனாகிய தலைவனின் ஒழுக்கமுறைகளை என்னிடம் எடுத்துச் சொல்ல வேண்டாம். தலைவனைப் பிரிய நேர்ந்தது என்னுடைய தவறேயாயினும் ஆகட்டும். தலைவனைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டு இன்னும் இவ்விடத்தில் இருக்காதே, எழுந்து நடப்பாயாக'' என்கிறாள்.

கூடாவொழுக்கத்தில் சென்றதால் தலைவனை வேண்டாம் என்கிறாள் தலைவி. பாதுகாப்புக்கு "சாண் பிள்ளையானலும் ஆண் பிள்ளை' என்பதற்கிணங்க மகன் உள்ளான் என்ற துணிவும் தலைவியின் கூற்றில் வெளிப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.