கொடிய வழியில் வரவேண்டாம்
தலைவனும் தலைவியும் நீண்ட காலமாய் களவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.


தலைவனும் தலைவியும் நீண்ட காலமாய் களவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஊரார் பழிப்பேச்சு பேசுவதற்குள் விரைவில் மணமாக வேண்டும் எனக் கருதுகிறாள் தலைவி. தலைவனுக்கு மணம் குறித்த சிந்தனையே இல்லை. பகலில் வந்து சென்ற தலைவன், சூழல் அமையாததால் இரவில் வந்து செல்கிறான். தலைவியின் மனதில் விரைவில் தலைவனோடு ஊரறிய வாழ வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. தலைவனுக்கு இதை எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் வழக்கம் போல் தலைவன், தலைவியை சந்திக்க வரும்போது, தோழி அருகில் இருந்தாள்.
தலைவன் வருவதையும் தலைவி கவனித்து விட்டாள். தலைவன் வரவினை, தான் அறியாதது போல் தன் மனதில் உள்ளதையெல்லாம் தலைவனுக்கு உணர்த்தும் வகையில் தோழியிடம் தெரிவிப்பதாகப் பாடல் அமைகின்றது.
ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெருங்கை ஏற்றை
தூங்குதோல் துதிய வன்உகிர் கதுவலின்
பாம்புமதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்லமன் இகுளை (அகம். 8)
"தோழியே! மலைப்பகுதியில் வலிமை கொண்ட பெரிய ஆண் புலியானது, தான் கொன்ற பன்றியைப் பலாமரங்கள் செறிந்திருக்கக் கூடிய பகுதியில் புலால் நாற்றம் உண்டாக இழுத்துச் செல்லும். மேலும் அந்தப் பகுதியில் மூங்கில் மரங்களும் சுரபுன்னை மரங்களும் வாழை மரங்களும் ஓங்கி வளர்ந்துள்ளன. வாழையை உண்ண வந்த ஆண் யானை, ஆழமான நீர் தேங்கியிருக்கக் கூடிய குழியில் அகப்பட்டுக் கொண்டது. அதன் துன்பத்தைப் போக்குவதற்காக, பெண் யானை ஆண்யானை ஏறுதற்குப் படிகள் அமைக்கப் பெரிய மரங்களை முறித்தது. அந்த ஓசை மலைக் குகைகளிலும் எதிரொலித்தது.
இப்படிப்பட்ட நிலையில், தலைவன் நாள்தோறும் இரவுக்குறியில் என்னைப் பார்க்க வருகிறான். விலங்குகள் செல்வதென்றாலும் மின்னல் ஒளியில் தான் செல்ல முடியும். அப்படிப்பட்ட இடத்தில் ஈசல் பொருந்திய புற்றாஞ்சோற்றைத் தன் உணவாகக் கொள்ளும் கரடியின் நகம் பட்டால் பாம்பு வலிமை இழந்து விடும். இத்தகைய கொடிய வழியில் தலைவனை வரவேண்டாம் என்று மயிர்த் தொகுதியைப் பிழிந்து விட்ட அளவில் கூந்தலைப் பிடரி மறையுமாறு பின்புறம் கோதி விட்டபடி யாரேனும் போய், இவ்வழியில் வரும் துன்பங்களை நீர் அறிய மாட்டீரோ, என்று கூறக் கூடாதா' என்று தலைவி கூறுகிறாள். இப்பாடலில் பாம்பின் வலிமையை நீக்கும் சக்தி கரடியின் நகத்திற்கு உண்டு என்ற அரிய செய்தியை அறிய முடிகிறது.
தலைவியின் இக்கூற்றில் நிறைய கருத்துகள் உள்ளடங்கியுள்ளன. பாம்புக்குத் துன்பம் செய்ய வேண்டும் என்று கரடி கருதவில்லை. இது எதிர்பாராதவிதமாக நடந்தது. அதேபோல் தலைவிக்குத் துன்பம் தரவேண்டும் எனத் தலைவன் கருதவில்லை. இருப்பினும் தலைவன் இரவில் வருவதால் தலைவிக்கும் அவள் குடும்பத்திற்கும் பழியுண்டாகும். இதைப் போன்ற கருத்துகளை உள்ளடக்கியதாக தலைவியின் உவமைகள் அமைந்திருக்கின்றன. இதனைக் கேட்டாவது தலைவன் மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்வான் என்ற எண்ணத்தில் தலைவியின் கூற்று அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...