வண்ணச் சரபத்தின் வண்ணப் பாடல்கள்!
விகாரி ஆண்டு கார்த்திகை மாதம் 16-ஆம் நாள் 1839-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் நாள் ஹஸ்த நட்சத்திரத்தில் சைவ வேளாளர் மரபில் செந்தில்நாயகம் பிள்ளை பேச்சி முத்தம்மைக்கு மகனாகத் தோன்றியவர் சங்கரலிங்கம்.


விகாரி ஆண்டு கார்த்திகை மாதம் 16- ஆம் நாள் 1839-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22- ஆம் நாள் ஹஸ்த நட்சத்திரத்தில் சைவ வேளாளர் மரபில்
செந்தில்நாயகம் பிள்ளை பேச்சிமுத்தம்மைக்கு மகனாகத் தோன்றியவர் சங்கரலிங்கம். இவரே "வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்' எனப் போற்றப்படுகின்றார்.
சங்கரலிங்கம் தமது ஐந்தாவது வயதிலேயே பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதக் கற்றுக்கொண்டார். இவரின் ஏழாவது வயதில் தந்தையார் இயற்கை எய்தினார். இதனால் சங்கரலிங்கத்தின் கல்வி தடைபட்டது.
சங்கரலிங்கத்து தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவர், சுவாமிகளின் குருவாக விளங்கியவர். சுவாமிகள் எந்த நேரமும் முருகப்பெருமானின் சிந்தனையிலேயே இருப்பது வழக்கம். ஒரு சமயம் தன் கனவில் முருகன் வந்த விவரத்தை, தமது வரலாறு கூறும் குமரகுருபர தத்துவத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வண்ணச்சரபம் சுவாமிகள் மயிலம் முருகன் மீதும், பழம்பெரும் வீர சைவ ஆதீனமான மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். மயிலம் முருகப்பெருமானின் அருளாணைப்படி, புதுச்சேரி வாழ் வேலாயுதம் பிள்ளை- திருமலையம்மை தம்பதியின் மகளான, சுந்தரத்தம்மையை மயிலம் முருகன் சந்நிதியில் மனைவியாக ஏற்றுக்கொண்டார். இத் திருமணத்தில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், மனைவிக்கு மங்கல நாணாக ருத்திராட்சத்தையே அணிவித்தது. இந்த நிகழ்வு சுவாமிகளின் சைவப்பற்றை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
இவரின் பெருமைகளால் மக்களால் போற்றப்பட்ட நிலையில், சங்கரலிங்கம், முருகதாசர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்நிலையில், இல்லறம் துறந்து, துறவறம் மேற்கொள்வதில் அவருக்கு விருப்பம் ஏற்பட்டது. இதனால் வள்ளியூர் மலைக்கு சென்ற முருகதாசர் அங்கு குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கினார். தன் வழக்கமானஆடைகளைத் துறந்தார். கல்லாடை, கௌபீனம் அணிந்தார்.
மேலும், உயிர்ப்பலி இடும் செயல்களை தன் அறிவுரைகள் வாயிலாக தடுத்து நிறுத்தினார். பழனி மலையில் இடும்பனுக்கு உயிர்ப்பலி தந்ததை கண்ணுற்ற சுவாமிகள், வெண்பா பாடி அக்கொடிய செயலைத் தடுத்து நிறுத்தினார். பழனி மலையடிவாரத்தில் தங்கியிருந்து "பழனித் திருவாயிரம்' என்ற நூலை இயற்றினார்.
சுவாமிகளின் தோற்றம் புது வடிவம் பெற்றது. அறுவகை சமயத்தைப் போற்றிய சுவாமிகள், நெற்றியில் திருநீறு, குங்குமம், தலையில் சடைமுடி, கழுத்தில் ருத்திராட்ச மாலை, கையில் வேலாயுதம், காலில் பாதக்குறடு, இடுப்பிலே கௌபீனம், இடக்கையில் வடகலை திருநாமம், வலக்கையில் தென்கலை திருநாமம் என அறுவகை சமயத்தின் நல்லிணக்கத்தை தம் திருமேனியில் வெளிப்படுத்தினார்.
முருக வழிபாட்டினை பரப்பி வந்ததால், முருகதாச சுவாமிகள் என்றும், தண்டாயுதம் தாங்கியதால் தண்டாயுதபாணி என்றும், திருப்புகழ் பாடல்கள் பாடியதால், திருப்புகழ் சுவாமிகள் என்றும், வண்ணப் பாடல்கள் இயற்றியதால் வண்ணச்சரபம் என்றும் பலவாறு அழைக்கப்பட்டார்.
பழனியிலிருந்து கூடலூர் சென்ற சுவாமிகள், வடலூர் வள்ளலார் அங்கு வந்திருப்பதை அறிந்து அங்கு சென்று அவரை சந்தித்தார். வள்ளலாரின் வடிவம், தமக்குத் தாயுமானவராகவே தோன்றியதை தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இதழ் ஒட்டாமல் பாடப்படும் விதமாக பாடல் எழுதுவது இறையருள் பெற்றவர்களுக்கு மட்டுமே சித்தியாகும் கலையாகும். கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் போன்ற ஒரு சிலர் மட்டுமே இதில் சிறந்து விளங்கினர். அந்த வரிசையிலே வண்ணச்சரபம் சுவாமிகளும் 120 பாடல்கள் கொண்ட "நிரோட்டகத் தனிச்செய்யுள் அந்தாதி' இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சுவாமிகளுக்கு நெல்லையில் ஒரு தவச்சாலை அமைக்க விரும்பினார். அதற்கு பொருள் வேண்டுமே என்று நினைத்த உடனே, முருகப்பெருமான் அவர் கனவில் தோன்றினார், "கப்பலேறி கொழும்பு செல்க, அங்கே செட்டிமார்கள் உமக்கு உதவி செய்வார்கள்' என்று கூற கனவு கலைந்தது.
அதன்படி கொழும்பு சென்று, பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். குப்பன் செட்டியார் உள்ளிட்ட அன்பர்கள் 1,050 ரூபாய் திரட்டித் தந்தனர். அதைக்கொண்டு நெல்லையில் தவச்சாலை அமைத்தார்.
பழனி மலையடிவாரத்தில் உள்ள ஆவினன்குடியில் திருமடம் அமைத்தார். பழனிக்கு தலப்பயணம் வருவதை அறிந்த இராமானந்தர் வண்ணச்சரபம் சுவாமிகளை நேரில் சந்தித்தார். பக்குவம் அடைந்த இராமானந்தர் தம் சீடராவதற்கான தகுதிகள் நிரம்பியுள்ளதை அறிந்து கொண்டார்.
வண்ணச்சரபம் சுவாமிகள் இராமானந்தரின் வலது செவியில் ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்து, கௌமாரத்தின் ஆறு பேதங்கள், சமய சமரசம் உள்ளிட்டவற்றை விளக்கி வாழையடி வாழை என கௌமார நெறியைப் பரவச் செய்யும்படி அருளினார்.
திருவாமாத்தூரில் வசித்து வந்த அரிகர புத்திர முதலியார் மற்றும் ஒரத்தூரில் வசித்த சின்னு ரெட்டியார் கனவிலும் தோன்றிய முருகப்பெருமான், சுவாமிகளை வரவேற்று சிறப்பு செய்யுமாறு பணித்தார்.
சண்முகம் பிள்ளை திருவாமாத்தூரில் இருந்த வெற்றிட நிலத்தை இனாமாகத் தர ஏற்பாடு செய்தார். அன்பர்களின் விருப்பப்படி அங்கே திருமடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு வீரகேரளம் புதூர் ஜமீன்தார் இருதயலாய மருதப்பத் தேவர் பொருளுதவி செய்தார். இதன்பிறகு பல அடியார்களின் ஆதரவால் திருப்பணி நிறைவேறியது. திருவாமாத்தூரில் கௌமார மடமும் தோன்றியது.
எட்டரை வயதில் வெண்பா இயற்றத் தொடங்கி, 59 ஆண்டுகள் வாழ்ந்த சுவாமிகள் தமது ஆயுளில் ஒரு லட்சத்திற்கும் மேலான பாடல்களை இயற்றி சாதனை படைத்துள்ளார். சுவாமிகள் ஹிந்தி மொழியிலும் புலமை பெற்றிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தியாகும். முருகப்பெருமான் மீது இரண்டு பாடல்களை ஹிந்தியில் இயற்றியுள்ளது இவரின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றது.
சமயத்துறவியான சுவாமிகள், விடுதலைப் போராளியாகவும் விளங்கினார். இதற்கு இவர் இயற்றிய "ஆங்கிலியர் அந்தாதி' நூல் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.
சுவாமிகளோடு நட்பு பாராட்டியவர்களாக, வடலூர் வள்ளலார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், ஞானசித்த சுவாமிகள் விளங்கினர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, நாடக ஆசான் சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்ட பலர் நட்பு பாராட்டினர். சுவாமிகளிடம் ஞான உபதேசம் பெற்றவர் சிரவை ஆதீன குரு முதல்வர் தவத்திரு இராமானந்த சுவாமிகள்.
1898-ஆம் ஆண்டு தமது 59-ஆவது வயதில் விளம்பி வருடம் ஆனி மாதம் 23-ஆம் நாள் துவிதியைத் திதி, திருவோண நட்சத்திரம் கூடிய நன்னாளில் இப்பூவுலகிலிருந்து விடுபட்டு வீடுபேறு பெற்றார்.
வண்ணச்சரபம் சுவாமிகள் மீது பேரன்பு கொண்டிருந்த சிரவணபுரம் கௌமாரமட தலைவர் இராமானந்தர், சுவாமிகள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தண்டபாணி தெய்வத்தின் திருவுருவச்சிலையை நிறுவி, நாள்தோறும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...