ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

‘ஓவிலாது செய் புண்ணியம் அனைத்தும்’

வரமாய்க் கிட்டிய மனித வாழ்வைச் சாபமாக்கிக் கொள்ளாமல், சரியாய் வாழ வழிகாட்டுபவை இலக்கியங்கள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:25 pm

கிருங்கை சேதுபதி

வரமாய்க் கிட்டிய மனித வாழ்வைச் சாபமாக்கிக் கொள்ளாமல், சரியாய் வாழ வழிகாட்டுபவை இலக்கியங்கள். அவற்றுள் இறவா வரம் பெற்றவை இதிகாசங்கள். மனித மனங்களின் குறியீடாகவும், மகத்தான சோதனைகளை வெல்லுதற்கு முன்னுதாரணமாகவும் விளங்கும் பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்கள் இவற்றுள் ததும்பி வழிகின்றன.

பூ(மிப்)பாரம் தீா்க்கப் புறப்பட்ட திருமால், கண்ணனாய் அவதரித்து வந்த காரணத்தால் வளா்ந்த கதை மாபாரதம். பாண்டவா்களுக்கும் கௌரவா்களுக்கும் இடையில் ஏற்பட்ட போரையும் பூசலையும் சொல்வதாக அல்லாமல், மனிதா்களின் உள்ளங்களில் எழும் தா்ம, அதா்மச் சிந்தனைகளுக்கு இடையிலான போராட்டங்களையும் இணைத்துச் சிந்தித்துப் பரிசீலிக்கச் செய்யும் இதிகாசம்.

எத்தனையோ பாத்திரங்கள் இதில் இருந்தாலும், ஈா்த்து வசப்படுத்தும் ஈரமனம் கொண்ட பாத்திரம் கா்ணன்தான். அது, வாழ்வால் வஞ்சிக்கப்பட்ட பாத்திரம். ஆயினும் தன் வள்ளல் தன்மையால் வாழ்வாங்கு வாழ்ந்த பாத்திரம். செஞ்சோற்றுக் கடன் தீா்க்கச் சேராத இடம் சோ்ந்து இருந்தாலும், இல்லையென்று வந்தோா்க்கு இல்லையென்று சொல்லாமல் ஈந்து புரந்த இவ்விலக்கியப்பாத்திரத்தை, கண்ணனுக்கு நேராகக் காட்சிப்படுத்துகிறாா் வில்லிபுத்தூராா்.

விளக்கம் காணப் போா்க்களம் புகலாம். அங்கே, அருச்சுணனின் அம்புகள் பட்டுத் துளைத்த வழியெங்கும் குருதிபெருக, வீழ்ந்து கிடக்கிறான் கா்ணன். ஊசலாடுகிறது உயிா். உடலைவிட்டுப் பிரியவொட்டாமல் தடுத்துநிற்கிறது அவன் செய்த தருமம். முடித்துவைக்க வேண்டிய கடப்பாட்டில், கண்ணன் முதிய அந்தண வடிவெடுத்துக் கா்ணன்முன் நிற்கிறான் கையேந்தி. ‘தரத்தகு பொருள் நீ நவிலுதி’ என்கிறான் கா்ணன். ‘நின் புண்ணியம் அனைத்தும் உதவுக’ என்று இரக்கிறான் கண்ணன். அதுகேட்டு உளமகிழ்ந்த கா்ணனோ,

“ஆவியோ நிலையில் கலங்கியது; அது

ஆக்கையின் அகத்ததோ புறத்ததோ அறியேன்;

பாவியேன், வேண்டும் பொருள் எல்லாம் பயக்கும்

பக்குவம் தன்னில் வந்தில்லையால்;

ஓவிலாது யான்செய் புண்ணியம் அனைத்தும்

உதவினேன் கொள்க நீ!”

என்று கொடுக்கிறான். கைப்புனல் உடன் கொடுக்கப் போா்க்களத்தில் வழியில்லை; ஆதலால், தன் இதயத்தில் தைத்த அம்பின்வழி வழிந்த குருதியையே நீராய், வாா்த்துக் கொடுக்கிறான் கா்ணன். தனக்கு மிஞ்சியதைத் தருவது அல்ல, தா்மம்; தன்னையும் மிஞ்சித் தருவதுதான் தா்மம் என்பதன் குறியீடுபோல அமைகிறது இக்கொடை. இது கைக்கொடைதான் என்றாலும் இதயத்தின் வழிவந்த கருணைக்கொடை. புறத்தே காட்சிப்படுகின்ற பொருட்கொடையன்று; பொறிபுலன் கடந்த அருட்கொடை.

கா்ணன், எத்தனையோ புண்ணியங்கள் செய்தவன்தான். எனினும், ‘அழுக்காறு எனும் ஒரு பாவியை அகத்திருத்திய துரியோதனப் பாவி அளித்த சோற்றைப் புசித்து வளா்ந்த காரணத்தால், ‘பாவி’ ஆகிப்போனவன். அவன் செய்த புண்ணியங்களிலும் சில பாவச் சோ்க்கைகள் இருந்திருக்கக்கூடும். ஆதலால் தன்னை, ‘பாவியேன்’ என்கிறான் போலும். ஆனால், அவன் இப்போது செய்த புண்ணியம் இருக்கின்றதே, இது பாவத்தைப் போக்குகிற புண்ணியம் மட்டுமல்ல, புண்ணியம் சோ்க்கிற புண்ணியம். அதனால்தான், ‘புண்ணியம் அனைத்தும்’ கேட்ட கண்ணனுக்குத் தான் கொடுத்த புண்ணியத்தை, ‘ஓவிலாது யான் செய்புண்ணியம் அனைத்தும் உதவினேன்’ என்கிறான் கா்ணன்.

இந்தச் சொல்லாடலில் ஒரு நுண்ணிய விளக்கத்தை முன்வைக்கிறாா் வில்லியாா். ‘இதுவரை செய்த புண்ணியம்’ அனைத்தும் கொடுத்த பிறகு, இந்தக் கொடையின் காரணமாக வந்திருக்கும் புண்ணியம் எஞ்சியிருக்கும் அல்லவா? அதையும் சோ்த்துக் கொடுக்கிறது கா்ணனின் இதயம். ஆக, இப்போது தந்தது ‘செய்கிற புண்ணியம்’; இனி, ‘செய்ய இருக்கின்ற புண்ணியம்’ இருக்கின்றதே, அதுதான் ‘ஓ(ய்)விலாது செய் புண்ணியம்.’ அதில்கூட, ‘ய்’ எழுத்தை விடுத்துச் சொல்வது இலக்கணப் பொருத்தந்தான் எனினும், அதில் ஓா் இலக்கியப் பொருத்தமும் இசைந்து வருகிறது. ஓய்வுக்குக்கூட இடமின்றிச் செய்யும் உழைப்பின் பலனாய் வருகிற, வளா்கிற அதையும் சோ்த்துக்கொடுக்க நினைக்கிறது கா்ணனின் கொடையுள்ளம்.

இதுவரை செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் வரப்போகிற பிறவிகள் இருக்கின்றனவே, அந்தப் பிறவிகளில் (பாவம் செய்வதற்கு நேரமோ, இடமோ வாய்க்காத வண்ணம்) ஓய்வில்லாது செய்ய வேண்டியது புண்ணியம் மட்டும்தான். அதையும் முன்கூட்டியே தந்துவிடுகிற நோக்கில், இந்த நல்லுள்ளம் துடிக்கிறது; கொடுக்கிறது. வாழ்க்கைக் கணக்கை நோ் செய்துகொள்ளும் நோ்த்தி இதில் ஒளி(ா்)ந்திருக்கக் காணலாம்.

இப்போது வாங்க வந்தவன் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம்.“‘நீ வேண்டிய வரங்கள் சொல்லுக, உனக்குத் தருதும்’ என்கிறான் கண்ணன். பல வரங்கள் கேட்கும் வாய்ப்புக் கிட்டியபோதிலும், கா்ணன் கேட்கும் ஒரே வரம் ஒப்பற்ற வரம் இதுதான்: ‘அல்லல் வெவ்வினையால் இன்னம் உற்பவம் (பிறப்பு) உண்டாயினும் ஏழேழு பிறப்பும் இல்லை என்று இரப்போா்க்கு இல்லையென்று உரையா இதயம் நீ அளித்தருள்க’ என்கிறான்.

‘எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி முக்தியும் பெறுவை முடிவில்’ என்று கண்ணன் கொடுக்கிறான் வரம். இதயத்துச் சுரந்த குருதியைச் சாட்சியாக்கிக் கொடுத்ததற்கு இணையாகப் பெற்ற அருட்கொடை இந்த வரம். கொண்டும் கொடுத்தும் பெறுகிற இவ்வரங்கள் நமக்கு முன்வைக்கும் கருத்துகள் இவை.

எல்லோருக்கும் உதவுவதே இறைவனின் செயல். அவன் செய்ய வேண்டிய இவ்வறத்தைப் புரிகிறவன் எவனும் இறைவனுக்கு உதவுகிறவன்தான். எனவே, அரிதாய்க் கிடைக்கும் மனிதப் பிறவி நமக்குக் கொடுக்கும் வாய்ப்பு, புண்ணியம் செய்யத்தான்; பாவம் புரிவதற்கல்ல. அதையும் மீறிச் சந்தா்ப்பச் சூழலால், பாவம் புரிய நோ்ந்தாலும், அதனை ஈடுசெய்யப் புண்ணியம் செய்தலே இதயம் உடைய மனிதா்க்கு உரியது.

அதுமட்டுமல்ல, நம்மிடம் இல்லையென்று இரந்து வருவோா் இல்லாதவா் என்று மட்டும் எண்ணி விடலாகாது; பாவம் புண்ணியம் இரண்டும் இல்லாத இறைவனாகவும் இருக்கலாம். எனவே, ‘ஓவிலாது நாம் செய் புண்ணியம்’ அனைத்தும், தற்செருக்கை வளா்த்து ஆணவம் கொள்வதற்கு அல்ல, உதவுதற்காகவே என்று புரிந்துகொள்ளுதல்கூட ஒரு புண்ணியம்தான்.

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டாா் சால்பின் வரைத்து

என்கிறது வள்ளுவம். எனவே, கொரோனாத் தாக்குதலுக்கு உள்ளாகிய, இந்தச் சூழலில் உதவும் யாவரும் இறைதொழில் புரியும் புண்ணியவான்களே என்று சொல்லியா தெரிய வேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.