/

பெண்ணா? பொன்னா?

இல்லறம் நல்லறமாக அமைய பொருள் மிகவும் இன்றியமையாதது. தலைவன் ஒருவன்,  தலைவியை மணம் முடித்து இல்வாழ்க்கையைத் தொடங்குகிறான். நல்வாழ்க்கைக்கு மிகுதியான பொருள் வேண்டுமென அவன் மனம்

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:59 am

முனைவா் கி. இராம்கணேஷ்

இல்லறம் நல்லறமாக அமைய பொருள் மிகவும் இன்றியமையாதது. தலைவன் ஒருவன்,  தலைவியை மணம் முடித்து இல்வாழ்க்கையைத் தொடங்குகிறான். நல்வாழ்க்கைக்கு மிகுதியான பொருள் வேண்டுமென அவன் மனம் நினைத்தது. தலைவியைப் பிரியவும் மனமில்லை. பொன்னும் பொருளும் தேடிவர வேண்டுமா? பெண்ணுடன் தங்கியிருக்க வேண்டுமா? இருதலைக் கொள்ளி எறும்புபோல தலைவனின் மனம் துடிக்கிறது. அச்சூழலில் தலைவன் தன் நெஞ்சுக்கு உரைப்பதாக அமைந்த பாடலொன்று நற்றிணையில் உள்ளது.

"நெஞ்சமே! இல்லத்தில் இருக்கும் தலைவியுடன் தங்கிவிட்டால், பொருள் தானே வந்து சேர்ந்துவிடாது. பொருளை நினைத்துப் பிரிந்தால் தலைவியோடு சேர்ந்திருக்க முடியாது. அவ்விரண்டினும் கருத்தைச் செலுத்தி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பொருளுக்காக நீ செல்வாயாயினும் செல்க;  அல்லது தலைவியுடனே தங்குவாயாயினும் தங்குக; நல்லதற்கு உரியை ஆவாய். 

மலர்கள் நிறைந்த குளத்தில் ஓடுகின்ற மீனின் வழியைப்போல, தாம் இருந்த இடம் தெரியாமல் கெடும் இயல்புடையது பொருள். நானோ பெரிய கடல்சூழ்ந்த அகன்ற நிலத்தையே மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் அளவு பெரிய செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், அதனைப் பெற விரும்ப மாட்டேன். 

ஏனெனில், தலைவியின் குளிர்ச்சி பொருந்திய கண்களின் பார்வை என்னைச் செயல்படவிடாமல் தடுத்துவிட்டது. அதனால் நெஞ்சமே! நான் உன்னுடன் வரமாட்டேன். அப்பொருள் எத்தன்மை உடையதாயினும் ஆகுக. அப்பொருள் அதனை விரும்புகிறவர் இடத்தே போய்ப் பொருந்தட்டும்' என்கிறான் தலைவன்.

மேற்கண்ட பாடலில் தலைவன், தன் நெஞ்சோடு பேசுவது போல் பேசுகிறான். தலைவனின் மனம் தராசு போன்று செயல்படுகிறது. தராசுத் தட்டின் ஒரு புறம் தலைவியையும், மறுபுறம் பொருளையும் வைத்துப் பார்க்கிறது மனது. பொருள் மூலமாகப் பெறுவது தற்காலிக இன்பம். அதனினும் மேம்பட்ட நிரந்தர இன்பம் தலைவியிடம் கிடைக்கும் எனத் தீர்மானித்து, தலைவன், தலைவியிடமிருந்து பிரிந்து செல்வதைத் தடுத்துவிட்டது. 

பொருள் மனித வாழ்க்கைக்குத் தேவை எனினும், மேம்
பட்டது தலைவியின் அன்பு என்பதை இப்பாடல்  எடுத்துரைக்கிறது. 
புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும் செல்லா யாயினும் நல்லதற்கு
உரியைவாழி! என்நெஞ்சே!  பொருளே,
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடுமீன் வழியின் கெடுவ யானே,
விழுநீர் வியலகம் தூணி யாக
எழுமாண் அளக்கும் விழுநெதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக்கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்
எனைய ஆகுக! வாழிய பொருளே!     (நற்-16)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.