"மிளகுக்கொடி வளர்ந்து படருகின்ற மலைப் பக்கத்தில் களவுப் புணர்ச்சியில் கடுவனோடு (ஆண்குரங்கு) சிவந்த முகத்தினை உடைய மந்தி (பெண்குரங்கு) ஈடுப்பட்டது. அப்புணர்ச்சியினால் வேறுபட்ட தன்தோற்றத்தினை தளிர்களைத் தின்னும் தன்னுடையச் சுற்றத்தார்கள் அறிந்துவிடுவார்களோ என்று அஞ்சி கரிய நிறமுடைய அடி மரத்தினையும், பொன் போன்ற பூங்கொத்தினையும் உடைய வேங்கை மரத்தின் கிளை மீது சென்று, அதற்குக் கீழே ஓடிய சுனை நீரை நோக்கி புணர்ச்சியில் குலைந்திருந்த தன் உச்சி மயிரை திருத்தும்' என்று பதிவாகியிருக்கும் இச்செய்தி வெறும் காட்சிக்கும், கற்பனைக்கும் உருவம் கொடுத்துப் பாடிய பாடல் என்றால், மலைப்பகுதியில் எத்தனையோ விலங்கினங்களையும், பறவையினங்களையும் கண்டிருப்பார் அவற்றின்மேல் ஏற்றிக் கூறாமல் குரங்கின்மேல் ஏற்றிக்கூறக்காரணம், குரங்கின் அறிவுத்திறனை அறிந்திருந்த சங்கப் புலவரின் அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடே இப்பாடல் எனலாம்.