/

தீந்தமிழும் தீன் தமிழும்!

இசுலாமிய இலக்கியங்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழினப் பண்பாட்டோடு ஒன்றி வளர்ந்து வருகின்றன. இசுலாமிய மார்க்கம் என்னும் இசுலாமிய நெறி உலகில் மானுட நேயத்தையும், அதன்பால் விளையும் வாழ்க்கை முறைகளையும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:28 pm

முனைவர் கோ. விசயராகவன்

இசுலாமிய இலக்கியங்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழினப் பண்பாட்டோடு ஒன்றி வளர்ந்து வருகின்றன. இசுலாமிய மார்க்கம் என்னும் இசுலாமிய நெறி உலகில் மானுட நேயத்தையும், அதன்பால் விளையும் வாழ்க்கை முறைகளையும் வகுத்துக் கொடுக்கும் வகையில்தான் அண்ணல் நபிகள்(ஸல்) பெருமானால் அருளப்பட்டது. நபிகள் (ஸல்) பெருமான் எழுதப் படிக்கத் தெரியாதவர். அவருக்கு இறையருளால் "படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக' (96:1) என்று அருளப்பட்டதன் விளைவு, உலக மானிடம் அறநெறியில் உய்வதற்கு நபிகள் (ஸல்) பெருமானின் திருவாய்மொழியால் திருக்குரான் அருளப்பட்டது.  

திருக்குரான் அருளப்பட்ட மொழி அரபு. அரபு என்று சொன்னால் தெளிவு, உண்மை, அறிவு, ஞானம் என்று சொல்கிறார்கள். அப்பேர்ப்பட்ட உலகச் செவ்வியல் மொழிகளில் ஒன்றான அரபு மொழியில் அருளப்பட்ட திருக்குரானின் அறநெறிச் சாரங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தின.

இசுலாமியத் தமிழிலக்கியத்தின் தோற்றம் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் எழுந்த "பல்சந்த மாலை'யிலிருந்து தொடங்குகிறது. கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் யாகோபு சித்தர் பாடல்கள் இசுலாமியத்தின் நெறிகளைப் பல்லாற்றானும் பரப்பி வந்தன. 16-ஆம் நூற்றண்டில் ஆயிரம் மசாலா, மிகுராஜ் மாலை என்னும் இலக்கியங்கள் இசுலாமியத்தின் கருத்துகளைப் பரப்பின. 17-ஆம் நூற்றாண்டில் திருநெறி, நீதம், கனகாபிஷேக மாலை,

சுக்கூன் படைப்போர் எனும் நூல்கள் முகிழ்த்தன. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதுமொழி மாலை, சீறாப்புராணம், மக்காப் பள்ளு என்னும் நூல்கள் எழுந்து இசுலாத்தின் அறவெளிச்சத்தைத் தமிழ் மண்ணில் பரப்பின.

பல்சந்தமாலை முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. இந்நூல் வருதாபுரியில் அரசு புரிந்த அஞ்சுவண்ணத்தார் மரபினரான ஒரு முகம்மதிய மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாக அறிய முடிகிறது. இசுலாமியக் காப்பியங்களில் மூன்று காப்பியங்களைத் தமிழுலகம் இன்றும் என்றும் பெருமையோடு குறிப்பிடுகிறது - குறிப்பிடும். அவை: கனகாபிஷேக மாலை, சீறாப்புராணம், முகைதீன் ஆண்டகைப் புராணம். இவற்றுள்,

கனகாபிஷேக மாலை முதுபெரும் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையால் "களவியல் காரிகை' எனப் பெயரிடப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. சீறாப்புராணம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் போன்று சிந்தையள்ளிச் செல்கிறது. ஐம்பெருங் காப்பியங்களுக்கு இணையாக இசுலாமியத் தமிழ் இலக்கியங்களில் சீறாப்புராணம் சிறந்த இடத்தைப் பெறுகிறது.

முகைதீன் ஆண்டகைப் புராணம் தமிழ்நாட்டில் பிறந்து யாழ்ப்பாணத்தில் குடியேறிய பதுருதீன் புலவரால் இயற்றப்பட்டது. இப்புராணம் ஈழத்தில் எழுந்த முதல் தமிழ்ப் பெருங்காப்பியமாக மிளிர்கிறது.

இசுலாமியத் தமிழிலக்கிய மெய்ஞ்ஞானப் பாடல்களில் பீர்முகம்மது அப்பா பாடல் திரட்டு, மெய்ஞ்ஞானப் பரிபூரணக் களஞ்சியம், மெய்ஞ்ஞானத் திறவுகோல், மெய்ஞ்ஞானத் தெளிவு இந்த வரிசையில் குணங்குடியார் பாடல்களும் இணைந்து இசுலாமிய நெறியை மேன்மைப்படுத்துகிறது. இசுலாமியப் புலவர்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைப் படைத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்து வருகிறார்கள்.

தமிழ் இலக்கிய உலகத்திற்கு கிஸ்ஸா, நாமா, மசாலா, முனாஜத்து போன்ற புதுவகை இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் இசுலாமியத் தமிழ் இலக்கியவாதிகள் ஆவர். இவை இசுலாத்துக்கே உரிய தனி இலக்கிய வடிவங்களாகும். இசுலாமியர் அல்லாத பிறரால் இப்புதிய வகை இலக்கியம் இதுவரை இயற்றப்படவில்லை என்பது குறிக்கத்தக்கது.

தமிழ் மொழிக்கென்று இசுலாமியப் புலவர்கள் நொண்டி நாடகம் என்னும் மேலும் ஒரு சிறந்த இலக்கிய வகையைச் செய்தளித்தனர். இந்த இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல் சீதக்காதி நொண்டி நாடகமாகும். மேலும், திருமண வாழ்த்து என்னும் புதிய இலக்கிய வகையைத் தமிழ் இலக்கிய உலகுக்கு அர்ப்பணித்தது இசுலாமிய இலக்கியம். திருமண வாழ்த்து என்னும் இலக்கிய வகையில், உமறுப்புலவரால் இயற்றப்பட்ட "செய்தக்காதி மரைக்காயர் திருமண வாழ்த்து' என்னும் நூல் முதலிடம் பெறுகிறது. இந்நூலில் தமிழ் இனப் பண்பாட்டு மரபுகள் முழுமையாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

வண்ணக் களஞ்சியப் புலவர் தமிழில் இயற்றிய தீன்விளக்கம், குத்பு நாயகம், ராஜ நாயகம்

இசுலாமியத் தமிழ் இலக்கிய உலகில் மின்னுகின்ற தீன் வைரங்களாகவும் நபிகள் (ஸல்) பெருமானின் பேரருளை உலகிற்கு எடுத்துச் சொல்கின்ற தீந்தமிழ்க் காப்பியங்களாகவும் திகழ்கின்றன.

அன்னைத் தமிழுக்கு அணிகலன்களாகத் திகழ்ந்து வரும் இசுலாமிய அற இலக்கியங்களைப் பெருமைப்படுத்தும் வகையிலும், இசுலாமிய இலக்கியத்துக்கு மூலமொழியான அரபு மொழியைச் சிறப்பிக்கும் வகையிலும் திருக்குறள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், ஒளவையின் ஆத்திசூடி ஆகியவற்றை அரபுமொழியில் மொழிபெயர்த்து உலகமெல்லாம் தீந்தமிழையும் தீன் தமிழையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் நடத்திக் கொடுத்து வருகிறது தமிழக அரசு.

-முனைவர் கோ.விசயராகவன்

இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.