நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சொல் புதிது - 50

பழனி முருகன், போட்டியில் வென்றிருக்கலாம்; ஆனால் பரிசு பெறவில்லை. சில நேரங்களில் பரிசு பெறுவதற்குத் தந்திரமும் வேண்டி இருக்கும்போல.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:54 am

முனைவர் ம. இராசேந்திரன்

பழனி முருகன், போட்டியில் வென்றிருக்கலாம்; ஆனால் பரிசு பெறவில்லை. சில நேரங்களில் பரிசு பெறுவதற்குத் தந்திரமும் வேண்டி இருக்கும்போல. ஆனாலும் பரிசு மறுக்கப்பட்ட முருகனைக் கும்பிட நாள்தோறும் மக்கள் மலைஏறிப் போகிறார்கள். பரிசு பெற்ற விநாயகர், ஆண்டுக்கு ஒரு முறை விநாயக சதுர்த்தியில் மட்டுமே தனியாகக் கொண்டாடப்படுகிறார். வீதி உலா வந்து நீரில் கரைந்து போகிறார். ஏசு நாதரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் வீடு தேடிவந்து குழந்தைகளுக்குக் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கிறார். தூங்கி எழும் குழந்தைகள் தலையணைக்கு அடியில் பரிசுப் பொருளைத் தேடுகின்றனர்.

போட்டியில் வென்றால் பரிசு தருகிறார்கள், சரி. பிறந்த நாளுக்குப் பரிசு தருகிறார்களே ஏன்? திருமணத்தில் பரிசு தருகிறார்களே ஏன்? பிறந்த நாளிலும் திருமணத்திலும் என்ன போட்டி நடக்கிறது? போட்டி நடக்கவில்லை என்றால் பரிசு எப்படி?

போட்டியில்லாமல் கொடுப்பது பரிசு ஆகாது. பாராட்டத்தக்க சாதனைகளுக்குப் பரிசு கொடுப்பது சரி. அதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ போட்டி இருக்கும். பரிசுச் சீட்டில்கூடப் போட்டி இருக்கிறது. தன்னைப் போலவே சீட்டு வாங்கி வைத்திருப்பவர்களோடு போட்டி நடக்கிறது. தான் வாங்கிய சீட்டு, குலுக்கலில் வெற்றி பெறுவதாக நினைக்கலாம்.

பொங்கலுக்கும் பரிசு தருகிறார்கள்; கிறிஸ்துமஸ், ரம்ஜான், தீபாவளி என்று எல்லா மதப் பண்டிகைகளுக்கும் பரிசு தருகிறார்கள். என்ன போட்டி? நடத்துபவர் யார்?

போட்டியில் வென்றவர்களுக்குக் கொடுப்பது பரிசு. ஓட்டப்பந்தயத்தில் வென்றாலும் முதல் மதிப்பெண் பெற்றாலும் பரிசு கொடுக்கிறார்கள். போட்டி இல்லாமல் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது விருது. பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுக்குப் போட்டி நடப்பதாகத் தெரியவில்லை. அன்பினை வெளிப்படுத்தக் கொடுப்பது அன்பளிப்பு. காதல், நட்பு என்று அதன் வட்டம் விரியும்.

திரும்ப வரும் என்று எதிர்பார்த்துச் செய்வது மொய். எந்த நிகழ்ச்சியும் இல்லாமலே மொய்யை எதிர்பார்த்துத் தமிழகத்தின் சில இடங்களில் மொய்விழா இப்போதும் நடக்கிறது.திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத்தில் பணம் வைத்துக் கைச்சுருள் கொடுக்கிறார்கள்.

இப்படி வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் பெயர் வேறாக இருந்தாலும் உலகம் முழுதும் சீர் செய்தல் நடக்கிறது. பெறுகிறவர்கள் Return gift  கொடுக்கிறார்கள்.

திருமண நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திவிட்டுப் போகிறவர்களுக்கு வாசலில் தாம்பூலப்பை கொடுத்து நன்றி தெரிவிப்பதைப் போல எல்லா நிகழ்ச்சிகளிலும் வந்துவிட்டுப் போகிறவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கிறார்கள். Return gift  என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?

வாசகர்களின் பரிந்துரைகள் வருமாறு:

  • செ.சத்தியசீலன் - திரும்பக் கிடைத்த பரிசுகள்/ பதில்பரிசுகள்
  • எஸ்.சுரேஷ் - மறுத்தளிப்புப் பரிசுகள்
  • ராஜசிம்மன் - மீள்வெகுமதி
  • இராம. வேதநாயகம் - மீள்பெறுபரிசு/ மீள்பெறு அன்பளிப்பு
  • மீனா.கண்ணன் - நன்கொடைமறுதளி/ பரிசினைத் திருப்பியளி
  • கோ.மன்றவாணன் - தாம்பூலப்பரிசு/ செல்விருந்துப் பரிசுகள்/ திரும்புகைப்பரிசுகள்/ ஈட்டுப்பரிசுகள்
  • ப.இரா.இராசஅம்சன் - மறுஅளிப்பு/ எதிர்பலன் அன்பளிப்பு
  • ஜனநேசன் - மீண்டசெல்வம்/ மீண்டபரிசு
  • "வானவில் மூர்த்தி' - பதில் வெகுமதி/ மறு அன்பளிப்பு
  • சோ.முத்துமாணிக்கம், வெ.ஆனந்தகிருஷ்ணன் - எதிர் பரிசு

பரிசு, அன்பளிப்பு, மொய், விருது, சீர்ஆகிய சொற்கள் பொருளில் வேறுபடுகின்றன. எண்ச்ற் என்பது போட்டியில் வென்றவருக்குக் கொடுக்கப்படும் பரிசு என்று சொல்ல முடியவில்லை. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில், "திருமணத்தின் போது அல்லது விசேஷ நாட்களில் மகள், சகோதரி போன்றோருக்குக் கொடுக்கும் சீர், (Gifts)' என்று உள்ளது.

நெருங்கிய உறவினர்கள் செய்யும் சீருக்கு, சீரைப்பெற்றுக் கொண்டவர்கள் எதிர்சீர் செய்வார்கள்.

அப்போதே அந்த இடத்திலேயே செய்யப்படுவது எதிர்சீர் என்பதால், நிகழ்ச்சிக்கு வந்துவிட்டுப் போகிறவர்களுக்கு அப்போதே அங்கேயே தந்து அனுப்பும் ரிட்டர்ன் கிஃப்ட்டையும் "எதிர்சீர்' என்று சொல்லலாமே! வரவேற்க முன்னெழுந்து செல்வதை ""இருக்கை எழலும் எதிர்செலவும்'' என்று நாலடியார் கூறுகிறது.

Return Gift  - எதிர்சீர்

கடந்த 50 வாரங்களாகப் புதிய சொற்களைத் தமிழுக்கு சீர்செய்யும் முயற்சியில் உடன்பயணித்து உதவிய வாசக நண்பர்களுக்கும் தினமணியின் தமிழ்மணிக்கும் எதிர்சீராக என்ன தரலாம்? நன்றி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.