சொல் புதிது - 46
பாரதிதாசன் சொன்ன மூலிகைகள் இவை. சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பன், தன் காதலி வஞ்சிக்குக் கொடுத்த மூலிகைகள். மூலிகையைச் சாப்பிட்டதும்,


''ஒன்றைத் தின்றால் இவ்வுலக மக்கள் பேசுவது
நன்றாகக் கேட்கும் மற்றொன்றை வாயில் போட்டால்
மண்ணுலகக் காட்சி எலாம் மற்றிங்கு இருந்தபடி
கண்ணுக்கு எதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்''
பாரதிதாசன் சொன்ன மூலிகைகள் இவை. சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பன், தன் காதலி வஞ்சிக்குக் கொடுத்த மூலிகைகள். மூலிகையைச் சாப்பிட்டதும், இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டினர் பேசிக்கொண்டிருப்பவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இவர்கள் காதுகளில் ஒலிக்கின்றனவாம்.
அப்போது இடையில் ஒரு பேச்சுக்குரல். குப்பனும் வஞ்சியும் கவனிக்கிறார்கள்! இவர்கள் நின்றுகொண்டிருக்கும் சஞ்சீவி மலையை வேரோடு பெயர்க்க அனுமனுக்குக் கட்டளையிடும் குரல் கேட்கிறது. குப்பன் அச்சத்தில் நடுங்குகிறான். வஞ்சி இன்னொரு மூலிகை இலையை வாயில் போட்டுக்கொள்ளச் சொல்கிறாள். காதால் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்கான காட்சி கண்ணில் விரிகிறது. ஒருவர் இராமாயணத்தின் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இப்படி, பாரதிதாசன் கேட்கவும் பார்க்கவும் கற்பனை செய்த மூலிகைகள் சஞ்சீவி பர்வதத்தில் இருக்கின்றன. கம்பர் மருந்துமலை என்று சொல்கிறார். பாரதிதாசன் சஞ்சீவி பர்வதம் என்று சொல்கிறார்.
""பச்சிலையால் நல்ல பயன்விளையும் என்று சொன்னாள்!
பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள்.
"இந்த இலையால் இனிநன்மை கொள்க'
என்று குப்பனும் வஞ்சியும் கூறி மகிழ்கிறார்கள்''.
பாரதிதாசனின் "சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' 1930-இல் வெளிவந்தது. ஆனால்,அவர் கற்பனையில் கண்டு மகிழ்ந்தவற்றை இன்றைய உலகம் Wi-Fi ஆக நடைமுறையில் பயன்படுத்தி வருகிறது. "கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்' என்பது பழைய மொழி; Wi-Fi இல்லாத இடத்தில் ஒருபோதும் இருக்காதே என்பது புதுமொழி.
Wi-Fi என்பது கம்பித் தொடர்பு இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளும் வசதி. Xerox போல இதுவும் ஒரு நிறுவனத்தின் பெயர்தான். நிறுவனத்தின் பெயரே "செராக்ஸ் காப்பி' என்று அதன் செயற்பாட்டின் விளைபொருளுக்கும் ஆனது போல ஒய்ஃபை என்பதும் ஆகிவிட்டது. நம்பகத்தன்மையுடன் கூடிய கம்பியில்லாத் தொடர்பாக இருப்பது ஒய்ஃபை என்பதற்கான பெயர்க் காரணமாக இருக்கிறதென்று சிலரும் HiFi போல ஒரு சொல் விளையாட்டின் வெளிப்பாடுதான் ஒய்ஃபை என்று பலரும் காரணம் சொல்கிறார்கள்.
ஒய்ஃபை, 1999 முதல் பெரும் அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வீடு, அலுவலகம், ஓடும் வண்டிகள், நாடு என்று அங்கிங்கெனாதபடி ஒய்ஃபை பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் முதன் முதலில் மைசூர் மாநகர் முழுவதற்கும் ஒய்ஃபை வசதி 2004-இல் செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற்றுள்ளன. உலகில் முன்னேறிய நாடுகளின் அடையாளங்களில் ஒன்று நாடு முழுதும் ஒய்ஃபை வசதி பெற்றிருப்பதாகும்.
ஒய்ஃபை என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரைகள் வருமாறு:
சோலை.கருப்பையா - மின்காந்த அலைகளின் ஒருங்கிணைப்பு அல்லது கம்பியில்லா கணினிசார் இணையம்
இராம.வேதநாயகம் - பரவல் இணையதளம்
சோ.முத்துமாணிக்கம் - கம்பியில்லாக் கணினி இணைப்பி
கு.இரவிச்சந்திரன் - கம்பியில்லா அலைவரிசை/ கம்பியில்லா தொடர்வழி
செ.நாராயணசாமி - மின்னலை வலைத்தள இணைப்பு
ப.இரா.இராசஅம்சன் - அகத்தகவல் தொடர்பலை/ கம்பியிலா ஊடகத் தொடர் நுட்பம்/ தொலைநிலைக் கணினித் தொடர்பு
என்.ஆர்.ஸத்யமூர்த்தி - வான்வழி அலை/ அலைவழி அலை
வெ.ஆனந்தகிருஷ்ணன் - அதிநவீன கம்பியில்லாத் தொலைத்தொடர்பு / அதிநவீன கம்பியில்லா இணையதளம்
கோ.மன்றவாணன் - இழைதவிர் வலைத்தளம் / இழைதவிர் இணைப்பிணையம்/ இழைதவிர் வலைத்தொடர்பு
நா.கிருஷ்ணவேலு - அதிநவீன கம்பியில்லா இணையதளம்
ஜனநேசன் - கம்பியில்லாக் காணொலி உறவி/ கம்பியில்லாக் காணொலி உறவூடகம் ஒய்ஃபை, போகிற இடங்களுக்குக் கூடவே தகவலும் தொடர்ந்து வரும் வாய்ப்பினை வழங்குகிறது. மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனாலும், ஒய்ஃபை என்பதில் கம்பியில்லாத் தகவலும் நம்பகத் தன்மையும் அடித்தளமாக இருக்கின்றன. எனவே, ஒய்ஃபை என்பதைக் "கைமெய்' என்று சொல்லலாம். ஒய்ஃபை இணைப்பைக் "கைமெய் இணைப்பு' என்று சொல்லலாம். கைமெய் இணைப்பில் இருந்தால், எங்கு சென்றாலும் உங்கள் கையில் மெய்யாலுமே உலகம் இணைப்பில் இருக்கும்.
Wi-Fi - கைமெய்
15-2-15 தேடலுக்கான சொல் - vertical
22-2-15 தேடலுக்கான சொல் - Hang (கணினிப் பயன்பாட்டில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...