நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சொல் புதிது - 10

போட்டிகள் சூழ்ந்த உலகம் இது. அரசியல், வணிகம், கல்வி, வாழ்க்கை என்று எல்லா இடங்களிலும் போட்டி. போட்டி

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:28 am

முனைவர் ம. இராசேந்திரன்

போட்டிகள் சூழ்ந்த உலகம் இது. அரசியல், வணிகம், கல்வி, வாழ்க்கை என்று எல்லா இடங்களிலும் போட்டி. போட்டி இருக்கலாம்: பொறாமை இருக்கக் கூடாது என்கிறார்களே ஏன்? உணவுக்கும் உறைவிடத்துக்கும் நடைபெற்றது போட்டி;  அடுத்தவர் வசதியை - வளர்ச்சியைப் பார்த்து ஆசைப்படும் இயலாமை பொறாமை.

அடிப்படை வசதிக்காகப் போராடும் போட்டியில் தேவை இருந்தது. அடுத்தவரைப் பார்த்து ஆசைப்பட்டதில் பொறாமை எழுகிறது. பொறாமை ஆசையைத் தூண்டுகிறது; இயலாமையில் வெகுளி பிறக்கிறது; வெகுளியின் வெளிப்பாடாக இன்னாச் சொல் வருகிறது என்று முறை தவறும் இடங்களின் ஆதார வாயில்களைத் திருவள்ளுவர், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்று வரிசைப்படுத்துகிறார்.

போட்டி மானுடத்தை வளர்த்திருக்கிறது. உணவுக்காகவும் உறைவிடத்துக்காகவுமான போராட்டம் தனிமனிதரையும் சமுதாயத்தையும் வளர்த்திருக்கிறது. மாறுகிற தட்பவெப்ப நிலைக்கேற்ப உணவுக்கும் உறைவிடத்துக்கும் போராட உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். உணவுக்கும் உறைவிடத்துக்கும் பாதுகாப்பான இடங்கள் பறிபோகாமல் காப்பற்றப்பட வேண்டியிருந்தன.

இப்படி அடிப்படைத் தேவைக்கான போட்டிகளில் விலங்குகளும் பறவைகளும்கூட போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அடிப்படைத் தேவைக்கான போட்டிகளைவிட ஆதாயத்திற்காக அடுத்தவர்களை வீழ்த்தும் போட்டிகள் நிறைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகளாவியப் பன்னாட்டுப் போட்டிகளில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே, போட்டிகளில் முறை இருக்க வேண்டும்;  முறையற்ற போட்டிகள் வன்முறையை விதைக்கும்;  மன அழுத்ததை ஏற்படுத்தும்; ஒற்றுமைக்கு உலைவைக்கும். மனித வாழ்க்கையைச் சீர்குலைக்கும். ஆகவே, அரசுகள் போட்டிகளில் ஓர் ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யச் சட்டங்கள் இயற்றுகின்றன. அப்படி இந்தியாவில் 2009 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

2010-இல் வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விலை ஏறியதற்கு வியாபாரிகளின் கூட்டுச் சதி காரணமா? என்று C‌o‌m‌p‌e‌t‌i‌t‌i‌o‌n​ C‌o‌m‌m‌i‌s‌s‌i‌o‌n​ ‌o‌f​ I‌n‌d‌ia ஆய்வு செய்தது.

2012-இல் முறையற்ற வகையில் ஆதாயம் பெற,  சிமெண்ட் விலையை உயர்த்தியதாக 11 சிமெண்ட் நிறுவனங்களுக்கு 6307 கோடி ரூபாய் அபராதம் விதித்து 90 நாள்களுக்குள் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டது. வீடுகட்டி விற்பவர்கள், வாங்குவோரிடம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தையும் முறை செய்தது இந்த ஆணையம்.

2013-இல் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளில் முறைகேடு இருப்பதாகக்கூறி 52.24 கோடி ரூபாய் தண்டம் விதித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரமறுத்த வியாபார முறைகேட்டிற்காக கூகுள் நிறுவனத்திற்கு ஒருகோடி ரூபாய் தண்டம் விதித்ததும் C‌o‌m‌p‌e‌t‌i‌t‌i‌o‌n​ C‌o‌m‌m‌i‌s‌s‌i‌o‌n​ ‌o‌f​ I‌n‌d‌ia தான்.

இந்த ஆணையத்தின் பெயரைத் தமிழில் இவ்வாறு சொல்லலாம் என்று வாசகர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்:

 சி.இராமச்சந்திரன் - இந்தியத் திறனறி ஆணையம் / இந்தியத் தொழில் திறனறி ஆணையம்

 டி.வி.கிருஷ்ணசாமி - போட்டியில் இந்தியாவின் பங்கு

 முனைவர் பா. ஜம்புலிங்கம் - இந்திய வணிக ஆணையம் / இந்திய வர்த்தக ஆணையம் / இந்திய வணிகப் பொருளாதார ஆணையம்

 கோ மன்றவாணன் - இந்திய வணிகப் போட்டி ஆணையம் /

இந்திய வணிகப் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் /இந்திய

வணிகநெறி  ஆணையம் / இந்திய முந்தாளுமை ஆணையம்

 செ.நாராயணசாமி - இந்தியத் தொழில் வணிகப் போட்டிக் கட்டுப்பாட்டு ஆணையம்

 என். ஆர். ஸத்யமூர்த்தி - சீர்போட்டி ஆணையம் /   வளர்போட்டிஆணையம் / நல்போட்டி ஆணையம் / போட்டி ஒழுங்காணையம்

 கா.மு.சிதம்பரம் - இந்தியப் போட்டி நெறிமுறை ஆணையம்

 முனைவர் கா. அன்பழகன் - இந்திய வணிகப் போட்டிக்குழு / இந்திய நலமுறு வணிகப் போட்டிக்குழு / இந்தியத் தர வணிகப் போட்டிக்குழு / பாதிப்பிலா வணிகப் போட்டிக்குழு.

போட்டிகளில் ஒரு முறை இருக்க வேண்டும்; ஆட்சிமுறை தவறிய பாண்டியனை, "இறைமுறை பிழைத்தோன்' என்று கோவலன் குறிபிட்டிருக்கிறான். கேள்விமுறை, மரபுமுறை, நட்புமுறை, உறவுமுறை, தலைமுறை, ஆண்டுமுறை, பழையமுறை, புதியமுறை, விதிமுறை, திருமுறை எல்லாம் நடைமுறையில் உள்ளன. எனவே, C‌o‌m‌p‌e‌t‌i‌t‌i‌o‌n​ C‌o‌m‌m‌i‌s‌s‌i‌o‌n​ ‌o‌f​ I‌n‌d‌ia​ என்பதற்குப் போட்டிகளை முறைப்படுத்தும் ஆணையம் எனும் பொருளில் இந்தியப் போட்டிமுறை ஆணையம் என்று  சொல்லலாம்.

C‌o‌m‌p‌e‌t‌i‌t‌i‌o‌n​ C‌o‌m‌m‌i‌s‌s‌i‌o‌n​ ‌o‌f​ I‌n‌d‌ia​ - இந்தியப் போட்டிமுறை ஆணையம்

அடுத்த வாரத் தேடல் -  twitter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.