சொல் புதிது - 9
வீட்டைப் பெருக்குவதும் ஸ்வீப்; போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெறுவதும் ஸ்வீப். வீட்டைப் பெருக்குவதைத் "துப்புரவு' என்றும், பெருக்குபவரைத் "துப்புரவாளர்' என்றும் சொல்கிறோம்.


வீட்டைப் பெருக்குவதும் ஸ்வீப்; போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெறுவதும் ஸ்வீப். வீட்டைப் பெருக்குவதைத் "துப்புரவு' என்றும், பெருக்குபவரைத் "துப்புரவாளர்' என்றும் சொல்கிறோம். தேர்தலில், போட்டியிட்ட எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகிற "ஸ்வீப்' என்பதை எப்படிச் சொல்லலாம்?
"அள்ளிக் குவித்தது' என்று தினமணி குறிப்பிட்டது. சில ஏடுகள் ஸ்வீப் என்றே குறிப்பிட்டன. ஸ்வீப் என்பது பெயர்ச் சொல்லாகவும் வருகிறது; வினைச் சொல்லாகவும் வருகிறது. Security sweep, Circular
sweep, Horizontal sweep, Expanded sweep, Linear
sweep என்று பெயர்ச் சொல்லாக வருகிறது. Sweep something aside; Sweep something under the carpet;
She swept the kitchen floor என்று வினைச் சொல்லாக வருகிறது.
தடை செய்ய முடியாத வேகத்தில் வரும் வெள்ளப் பெருக்கையும் வெற்றி அலை, எதிர்க் கட்சிகளை அடித்துச் செல்வதையும் குறிப்பிடும் ஸ்வீப் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகராக வாசகர்கள் பரிந்துரைக்கும் சொற்கள் வருமாறு:
வெ.ஆனந்தகிருஷ்ணன் - பேரலை / அலைவீச்சின் தாக்கம் / மோதாற்றல்
கோ.மன்றவாணன் - துடைத்தகற்றல் / துடைத்தெறி
என்.ஆர். ஸத்தியமூர்த்தி - தூய்மையாக்கு / ஒரேயடியாக நீக்கு
முனைவர் பா.ஜம்புலிங்கம் - அடித்துச் செல் / அலைவீச்சு
கா.அருண் - வீச்சு / அகல்
எஸ். சுரேஷ் - வெல்லுதல் / அடித்துச் செல்லுதல்
கோ. முத்துமாணிக்கம் - துப்புரவு செய்
டி.வி. கிருஷ்ணசாமி - அடியோடு அகற்றப்பட்டது
துரை ஏ. இரமணன் - துப்புரவாக்கு
அ. கற்பூரபூபதி - பெருக்குதல் / அசுத்தங்களை அகற்றுதல்
கா.மு.சிதம்பரம் - வாருதல் / வாருவிசை
சென்னைப் பல்கலைக்கழக அகராதி, தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது என்று பொருள் தந்துள்ளது.
மேற்குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் ஒரு தமிழ்ச் சொல் கலைச் சொல்லாக உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மரபிலிருந்து கிடைத்தால் சொல்வதற்கு வாட்டமாகவும் இருக்கும். வீட்டைத் தூய்மை செய்ய, வீட்டைப் பெருக்கு என்கிறோம்: வெள்ளம் கரைபுரண்டு வருவதை வெள்ளப் பெருக்கு என்கிறோம்.
ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம்பெருக்கு, தமிழர்களின் கொண்டாட்டங்களில் ஒன்று. ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகளில் ஒன்று பதினெட்டாம்பெருக்கு.
தென்மேற்குப் பருவக் காலத்தில் பெய்கிற மழையில் புதுப் புனல் பெருக்கெடுத்து ஓடிவரும். ஆடி மாதம் 18 ஆம் நாள் புதுப்புனலை வரவேற்று ஆற்றுக் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். பெருக்கெடுத்து ஓடிவரும் ஆற்றை வீட்டிற்கு வருகிற, சமுதாய விளைச்சலுக்குப் பயன்தரப் போகிற, தங்களை வாழவைக்கப் போகிற பெண்ணாகக் கருதி, பூம்புகாரில் பட்டுச்சேலை, துணிமணிகளை ஆற்றில்விட்டு மலர் தூவி இப்போதும் வரவேற்கிறார்கள். கரையோரத்தில் வாழும் மக்கள் ஒரு முறத்தில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை, கருகமணி, தாலிச் சரடு ஆகியவற்றை வைத்து, மற்றொரு முறத்தால் மூடி எடுத்துச் செல்வர். ஆற்றங்கரையில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்குவர். தீபங்களை ஒரு வாழை மட்டையில் வைத்து, முறத்துடன் ஆற்றில் மிதக்க விடுவார்கள். தாலிச் சரட்டை மணமுடித்த பெண்கள் தாம் அணிந்து கொண்டு, மற்ற பொருள்களை முறத்தில் வைத்து மூடி வெள்ளப் பெருக்கில் விடுவார்கள். முறம் ஆற்றுப் பெருக்கில் அடித்துச் செல்வதைப் பார்த்து மகிழ்வார்கள். புதுமணமக்கள் திருமணத்தில் சூடிய பூமாலைகளை வெள்ளப் பெருக்கில் விட்டுவிட்டுத் திருமண நாளில் கட்டிய மஞ்சள் கயிறைப் பிரித்துத் தாலி பெருக்கிக் கட்டிக் கொள்வார்கள்.
திருச்சியில் சிறுவர், சிறுமிகள் இப்போதும் மாலையில் ஆற்றங்கரையில் கூடி மகிழ்ந்து, உணவுண்டு இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். தென் மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும் கொண்டாடப் படுகிறது. வறண்ட காலங்களில் ஆற்று மணலின் ஊற்று நீரில் வழிபடுவது வேறுகதை.
காவிரிப் பெருக்கில் நீச்சல் நடன விளையாட்டுகளும் நடந்திருக்கின்றன. ஆட்டனத்தியை ஆற்றுப் பெருக்கு அடித்துக் கொண்டுபோகக் காதலனைத் தேடி ஆதிமந்தி கதறிக்கொண்டே தேடிப் போயிருக்கிறாள். ஆற்றுப் பெருக்கு, செடி, கொடி, தூசு தும்பட்டைகளை மட்டுமில்லாமல்
மனிதர்களையும் கதறவைத்து அடித்துக்கொண்டு போயிருக்கிறது.
எனவே, ஸ்வீப் என்பதற்குத் தமிழில் ஆடிப்பெருக்கு என்பதைப்போல அலைப்பெருக்கு என்று சொல்லலாம்.
Sweep - அலைப்பெருக்கு
அடுத்த வாரத் தேடல்: Competition Commission of India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...