சொல் புதிது - 6
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.'' ஆயிரத்தில் "ரிஸ்க்'கும் இருக்கும். தனி மனித வாழ்க்கையிலும் நிறுவனங்களின் செயற்பாடுகளிலும் "ரிஸ்க்' நீக்கமற நிறைந்திருக்கிறது.


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.'' ஆயிரத்தில் "ரிஸ்க்'கும் இருக்கும். தனி மனித வாழ்க்கையிலும் நிறுவனங்களின் செயற்பாடுகளிலும் "ரிஸ்க்' நீக்கமற நிறைந்திருக்கிறது. ரிஸ்க், மனித வாழ்க்கையை -சமுதாய வளர்ச்சியை - நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பாதித்திருக்கிறது; பாதிக்கிறது. அதே நேரம் அதை நேர்கொண்ட வகையில், ரிஸ்க் தனிமனித வாழ்க்கையை வசதியாக்கி இருக்கிறது; சமுதாயத்தை மாற்றி இருக்கிறது; நிறுவனங்களை வளர்த்திருக்கிறது.
எதையெல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பழங்கால மனிதர்கள் எப்படியெல்லாம் அறிய முயற்சி செய்திருப்பார்கள்! ஒத்துக் கொள்ளாத உணவுகளைக் கண்டறிய எவ்வளவு காலம் போராடி இருப்பார்கள் காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள மரத்திலும் குகையிலும் தங்கியிருந்து பட்ட இடர்ப்பாடுகள், வீடுகளை உருவாக்கி இருக்கின்றன. நோய்கள், மருந்துகளைக் கண்டுபிடித்துத் தந்திருக்கின்றன. இப்படி நடந்தவற்றை நேர்கொண்டு போராடிப் பெற்ற வெற்றியே மனித வாழ்க்கையின் பரிமாணம் ஆகியிருக்கிறது. நேர்கொள்ளப் பயந்த உயிரினங்கள் இடம் பெயர்ந்திருக்கின்றன; முடியாதவை மறைந்து போயிருக்கின்றன. மனிதர்கள் வாழ்கிறார்கள்; தாம் வாழும் இடங்களையே வசதியாக மாற்றிக்கொள்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் நேர்கொண்ட இடர்ப்பாடுகள், பாதித்திருப்பதைப் போல பயனும் தந்திருக்கின்றன. பெரும்பாலும் பாதிப்பையே தரும் சூதாட்ட ரிஸ்க் தனி வகை. எப்போதாவது மட்டுமே வெற்றி தரக்கூடியது. அதனால் வெற்றி கிடைத்தாலும் சூதாட்டம் வேண்டாம் என்றார் வள்ளுவர்.
எனவே ரிஸ்க் இருவகை - எதிர்கொண்டு வெற்றி பெற்றால் பயன் தருவது; வெற்றி பெற்றாலும் வெறுக்கத் தக்கது. ரிஸ்க் என்றால் என்ன என்பதைக் கண்டறிவதிலும் குழப்பம் இருந்திருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் அனுபவங்களிலிருந்து விளக்கம் அளித்து வந்துள்ளனர். முப்பது நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.எஸ்.ஓ. (International Organization for Standardaization) அமைப்பின் வழிகாட்டிக் குறிப்புகளில் 2009-ஆம் ஆண்டில் Risk is the effect of uncertainity on objectivies என்று வரையறை தந்துள்ளனர்.
அதன்படி, நிச்சயமற்ற தன்மை ரிஸ்க் என்பதன் தனிக் குணமாக இருக்கிறது. அது எப்போது வரும்? எப்படி வரும்? நடக்கலாம்; நடக்காமலும் போகலாம். நடந்ததிலிருந்து பெற்ற பாடம், இனி வரப்போகிற ரிஸ்க் குறித்து மக்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
ஆகவே, இப்போது ரிஸ்க் என்பது எதிர்காலம் பற்றிய திட்டமிடலில் தவிர்க்க முடியாத கூறாக இருக்கிறது. மழை, வெள்ளம், புயல், சுனாமி என்று இயற்கைப் பேரிடர்களை எப்படி நேர்கொள்வது என்பதை முன்கூட்டியே திட்டமிடுவதைப் போல அரசும் நிறுவனங்களும் தமது திட்டங்களின் செயற்பாடுகளில் நேர்படக் கூடும் என்று கருதுகிற இடர்ப்பாடுகளை முன்னதாகவே கண்டறிகின்றன. தனி மனித வாழ்க்கையிலும் இது தேவைப்படுகிறது.
கருவிலிருந்து கடைசி மூச்சு வரையிலும் ரிஸ்க் இருக்கிறது. வீட்டில், வெளியில், பயணத்தில், பணியிடத்தில், பணியில் என்று அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் ரிஸ்க் இருக்கிறது. தவிர்க்க முடியாத ரிஸ்க் இருக்கிறது. நேர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், வலிந்து ஏற்கிற ரிஸ்க் தனிமனித வாழ்க்கையையும் சமுதாயத்தையும் மாற்றிப் போட்டிருக்கிறது.
நவீன வாழ்க்கையில் புதுப்புது வகையான ரிஸ்க் வரத்தொடங்கியுள்ளது. நேர்கொள்ள முன் வருவோர் மட்டுமே சாதனை படைக்கிறார்கள்; மற்றவர்கள் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். இப்படி, பொதுமக்களிடமும் அரசின் செயற்பாடுகளிலும், நிறுவனங்களின் திட்டங்களிலும் நாள்தோறும் புழக்கத்தில் இருக்கிறது ரிஸ்க். இதற்கான தமிழ்ச் சொல் என்னவாக இருக்கலாம்?
வாசகர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்-
கெடு வாய்ப்பு - மனநல மருத்துவர் டி.ஆர். சுரேஷ்
அபாய நேர்வு / இடர்காப்பின்மை - கா. அருண், எம்.சிவரஞ்சனி
துணிந்து இறங்கு அல்லது செய் - எஸ். சுரேஷ், செ. நாராயணசாமி, கீதா முருகானந்தம்
பெருமுயற்சி / இடர்/ இடர்ப்பாடு - ஜ. சிவகுரு, துரை ஏ.இரமணன், கோ. மன்றவாணன்
எதிர்பாரா இன்னல் / இடையூறு - மு. தருமராசன்
அபாயகரமானதை எதிர்கொள்ளல் - டி.வி.கிருஷ்ணசாமி
கடும் பணையம் / மிகைப்பணையம் / மிகைப்பொறுப்பு - சி.இராமச்சந்திரன்
வேட்கை / நம்பிக்கைத்திறன் - அ.கற்பூரபூபதி
இடர் வரவு / வரு தீங்கு - ப.கோபி பச்சமுத்து
இடுக்கண் - வெ.ஆனந்த கிருஷ்ணன்
இடர் எதிர்கொள் - முனைவர் பா.ஜம்புலிங்கம்
முட்டு - கா.மு. சிதம்பரம்
எனவே ரிஸ்க் என்பது எதிர்பார்க்கப்படும் இடர்ப்பாடு; செயற்படுகிறபோது நேர்கொள்ள இருக்கும் இடர்ப்பாடு; நேரிடும் என்று கருதப்படும் இடர்ப்பாடு; நேர்கொள்ள வேண்டியிருக்கும் இடர்ப்பாடு. எனவே, ரிஸ்க் என்பதை நேரிடர் என்று சொல்லலாம்.
Risk - நேரிடர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...