நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சொல் புதிது - 40

களிமண் பலகையில் எழுதப்பட்ட உலகின் தொன்மை இலக்கியமான "கில்கமேஷ்' காவியம் (4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது) இப்போது மின் நூலாகக் கிடைக்கிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:46 am

முனைவர் ம. இராசேந்திரன்

களிமண் பலகையில் எழுதப்பட்ட உலகின் தொன்மை இலக்கியமான "கில்கமேஷ்' காவியம் (4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது) இப்போது மின் நூலாகக் கிடைக்கிறது.

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் முதல் இயல் நூன்மரபு. ""நூல் எனப்படுவது'' என்றெல்லாம் நூற்பாக்கள் வந்துள்ளன. ஆனால், ஓலைச் சுவடிகள் களிமண் பலகை போல ஆயுட்காலம் உடையவை அல்ல. ஆகவே, திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் மூலச்சுவடி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், ஓலைச் சுவடியின் மிக அதிக ஆயுட் காலமே 300 ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அதனால், அடிக்கடி படி எடுத்து வந்திருக்கிறார்கள். படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.

படிக்கவேண்டும்; எல்லோரும் படிக்க வேண்டும்; படிக்கவில்லையாயினும் கேட்க வேண்டும்; பிச்சை எடுத்தாவது படிக்க வேண்டும்; சாகும்வரை படிக்க வேண்டும்; சாதி, மதத் தடை இல்லாமல் படிக்க வேண்டும். படிப்பதால் கிடைக்கும் அறிவே உயர்வு தாழ்வுக்கு அடிப்படை என்றெல்லாம் தமிழ் மொழியில் படிப்பின் தேவையும் இன்றியமையாமையும் வலியுறுத்தப்பட்டுள்ளன. பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வீட்டிலிருந்து படித்திருக்கிறார். அதனால், தங்களிடம் இருந்த நூல்களை வரும் தலைமுறைகளும் படிக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது படியெடுத்து வந்துள்ளார்கள்.

அச்சுக்கூடம் வந்தபின் சுவடிகள் அச்சுநூல்கள் ஆகியிருக்கின்றன. மறுபதிப்புகள் வரத்தொடங்கின. இப்போது யாரும் ஓலையில் எழுதுவதில்லை. நேரடியாகத் தாளில் எழுதி வருகிறோம். சிலர் மின்னணுத் தாளில் (Electronic paper) எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். வண்ணத் தாள்களில் வண்ண எழுத்துகளில் கணினித் திரையில் எழுத முடிகிறது. செய்தித் தாள்களையும் இதழ்களையும் நூல்களையும் மின்னணுத் தாள்களில் படிக்க முடிகிறது; பாதுகாக்க முடிகிறது.

உலகம், காகிதமற்ற வாழ்க்கையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. படிப்பதற்கும் எழுதுவதற்கும் கூட நமக்கு இப்போது தாள் தேவைப்படுவதில்லை. அதற்குப் பயன்படுகிறது e-book reader. இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:

எஸ்.இரணியநாதன் - தொடுதிரை படிப்பகம்/ கணினிநூல் ஆய்வகம்

ராஜசிம்மன் - மின்னணுப் புத்தக வாசிப்பாளர்

இராம. வேதநாயகம் - மின்நுட்ப நூல் பயில்வோர்/ மின்நுண்மைப் பொருள் பயில்வோர்

சோ.முத்துமாணிக்கம் - மின்நூல் படிப்போன்

நா. கிருஷ்ணவேலு - மின்னணு நூல் வாசிப்பவர்

நா.முத்தையா - மின்நூல் படிப்பாளி

செ.நாராயணசாமி - நூல் மின்னோக்கி

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி - மின்னணு நூற்பேழை

கோ.மன்றவாணன் - மின்னூல் படிப்பகம்/ மின்னூல் படிக்கருவி/ கைமின்னூலகம்

கணினித் திரையில் படிக்கும் வசதி இருந்தாலும் செய்தித் தாள்களையும் இதழ்களையும் நூல்களையும் படிப்பதற்கு வசதியானது இ புக் ரீடர். சூரிய வெளிச்சத்திலும் படிக்கலாம்; பயணத்தில் படிக்கலாம்; போகிற இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். விலை கொடுத்து வாங்கியோ, கடனாகப் பெற்றோ நூலகங்களில் எடுத்தோ படிக்கலாம்.

இவ்வளவு வசதிகளோடு ஆயிரக் கணக்கான நூல்களைத் தம்மிடம் வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் படிக்கக் கொடுக்கிறது இ-புக் ரீடர். அச்சு நூலைப் படிக்கும் போது ஓரத்தில் குறிப்பெழுதுவது போல இதிலும் எழுதிக் கொள்ளலாம். மிகவும் பிடித்த பகுதியைத் தேர்வுசெய்து குறிப்புகள் தயாரித்துக் கொள்ளலாம்.

e-book reader என்பது நூல்களைப் படித்தும் சொல்கிறது. நாமே படிக்கவும் உதவுகிறது. reader என்பதற்கு "மொழிப் பாட புத்தகம்' என்று சென்னைப் பல்கலைக்கழக அகராதி பொருள் தருகிறது.

முன்பெல்லாம் சுவடிகளைப் படிக்கவும் பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும் சுவடித் தூக்கு பயன்பட்டு வந்தது. வீட்டிலிருந்து படிக்கும் இடத்துக்கு சுவடிகளை மாணவர்கள் எடுத்துச் செல்வதற்குப் பயன்பட்டது சுவடித் தூக்கு. வசதியானவர்களுக்கு சுவடித் தூக்கைத் தூக்கிச் செல்பவர்கள் "தூக்குத் தூக்கி' என்றும் அழைக்கப்பட்டனர். அச்சுநூல் வந்த பின்பும் புத்தகங்களை

அதில் வைத்துப் படிக்கும் பழக்கம் இருந்தது. எனவே, e-book reader என்பதை "மின்-நூல் தூக்கி' என்று சொல்லலாம். படிக்கவும் எழுதவும் பயணத்தில் எடுத்துச் செல்லவும் மின் - நூல் தூக்கி உடன் இருப்பது நல்லது.

e-book reader - மின் - நூல் தூக்கி

அடுத்த வாரத் தேடல் - Copy Editor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.