முற்காலத்தே, தனக்குப் பாடங்கற்பித்த ஆசிரியர்கள் பாராட்டுவது, வாழ்த்துவது அல்லாமல் ஆர்வத்தாலும் அன்பின் மிகுதியாலும் போற்றித் துதிபாடிவிடக் கூடாதே என்பதில் மன்னர்கள்கூடக் கவனமாக இருந்தனர். அவர்களுள் ஒருவன் இரண்டாம் குலோத்துங்க சோழன்.
குலோத்துங்கனின் அவைக்களப் புலவராகவும் இளமையிலிருந்தே அவனுக்கு ஆசிரியராகவும் விளங்கியவர் ஒட்டக்கூத்தர். குலோத்துங்கன்பால் பேரன்பு கொண்டிருந்ததால் அவன்மீது "பிள்ளைத் தமிழ்' பாடினார். இதுவே முதல் பிள்ளைத்தமிழ் நூலாகப் போற்றப்படுகிறது.
இரண்டாம் குலோத்துங்கனின் முடிசூட்டுவிழா அரசவையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அது. சிற்றரசர்களும் பன்னாட்டுப் பிரதிநிதிகளும் அவையில் கூடியிருந்தனர். வேதவிற்பன்னர்கள் வேதநெறிகளை முழங்கிக் கொண்டிருந்தனர். சோழன் தந்தை, குலோத்துங்கனுக்கு நவரத்தின மகுடத்தைச் சூட்டி, முத்திரை மோதிரத்தை அணிவித்து, செங்கோலைக் கைகளில் கொடுத்தார். வந்திருந்தோர் அனைவரும் மாமன்னன் குலோத்துங்க சோழனுக்குப் பாதகாணிக்கை செலுத்திப் பாராட்டினர். பாவலர்கள் பாமாலை சூட்டினர். அவர்களுக்கு முன்னதாக அவையிலிருந்த ஒட்டக்கூத்தர் மன்னனுக்கு நலமுண்டாகக் கருதி,
""ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகில மெங்கும்
நீடும் குடையைத் தரித்த பிரான்''
என இரண்டடிகளைப் பாடி நின்றநிலையில், அரியணையில் இருந்த மன்னன் குலோத்துங்கன், இவர் நமக்கு ஆசிரியராயிற்றே, இவர் நம்மைத் துதி பாடுவது தகுமோ? என்றெண்ணியவராய்,
""இந்த நீணிலத்தில்
பாடும் புலவர் புகழ்ஒட்டக் கூத்தன் பாதாம்புயத்தைச்
சூடும்குலோத்துங்கச்சோழன் என்றென்னைச்
சொல்லுவாரே''
என்று பாடிமுடித்தார். ""வாயில்மணி நாவசைத்து ஒலிக்காமல் எக்குறையுமின்றி வெண்கொற்றக் குடையுடன் நல்லாட்சி செய்துவரும் மன்னர்பிரான்'' என்று ஒட்டக்கூத்தர் பாட, ""அத்தகைய மன்னர்பிரான் யாரெனில், பரந்த இவ்வுலகில் புலவோர் அனைவரும் போற்றும் ஒட்டக்கூத்தரின் திருவடிகளைத் தம்தலைமீது கொண்டு வணங்கும் குலோத்துங்க சோழன் என்று சொல்லப்படும் நானேயாவேன்'' என்ற மன்னன் பாடி அப்பாடலை நிறைவு செய்தான்.
கல்வி கற்றுக்கொடுத்த புலவர்பால் மன்னன் கொண்டிருந்த ஒப்பற்ற மதிப்பையும் மன்னனின் புலமையையும் அவையோர் வாயாரப் போற்றிப் புகழ்ந்தனர். தன்னுடைய இரண்டடிப் பாடலைத் தமதடிகளால் பொருத்தமுற நிறைவுசெய்த குலோத்துங்கனின் அன்பை எண்ணி ஒட்டக்கூத்தர் உளமுருகிப் போனார். ஒட்டக்கூத்தர், குலோத்துங்கனுக்குத் தாயாய் தந்தையாய், ஆசிரியராய், அவைக்களப் புலவராய், அரசியல் வழிகாட்டியாய்த் திகழ்ந்தார் என்பதில் ஓர் ஆசிரியருக்குக் கிடைத்த மாட்சிமை வெளிப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

