கல்கியின் நூல்களைப் படித்து, அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால், 1941-இல் எழுதத் தொடங்கினார். பணியிலிருந்த காலத்திலேயே கலைமகள், பிரசண்ட விகடன், சந்திரோதயம், ராஷ்டிரவாணி, மணிவிளக்கு, முஸ்லீம் முரசு முதலிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். "சாபு' என்ற புனைபெயரில் வள்ளி, வளையல்கள், இரு சித்திரங்கள்; "ஜமீல்' என்ற பெயரில், என் ஹலீமா, படிப்பும் பரம்பரையும்; "ஹசன்' என்ற பெயரில், வீரத்தின் பரிசு முதலிய சிறுகதைகளை எழுதினார். 1942-இல் சென்னை அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்ட "பிரபலங்களின் சிறுகதைத் தொகுப்பில்' இவரது சிறுகதையும் இடம்பெற்றது.