மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாநாட்டில் அசத்திய இருளர் இன நடனக் குழு

இதுவரை வெளியுலகுக்குத்  தெரியாமல் இருந்த இருளர் பழங்குடியினத்தவரின் தில்லி நடனத்தை தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிமுகப்படுத்தியுள்ளது. செம்மொழி மாநாட்டின் 4-வது நாளான சனிக்கிழமை கொடிசியா வளாகத்தில் இருளர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:08 pm

இதுவரை வெளியுலகுக்குத்  தெரியாமல் இருந்த இருளர் பழங்குடியினத்தவரின் தில்லி நடனத்தை தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிமுகப்படுத்தியுள்ளது.

செம்மொழி மாநாட்டின் 4-வது நாளான சனிக்கிழமை கொடிசியா வளாகத்தில் இருளர் இன மக்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல வண்ண ஆடைகள் உடுத்தி கலந்து கொண்ட இருளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

தமிழக - கேரள எல்லையில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளான சாலைப்பதி, வடக்கலூர், ஜம்புகண்டி, தூமனூர், சேம்புக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இவர்களில் சிலர் பட்டதாரிகளாகவும், முதுகலை படிப்பு படிப்பவர்களாகவும் இருந்தனர்.

நடனக் குழுவில் பெண்கள் அணிக்கு தலைமை வகித்து ஆடிய வைதேகியிடம் (23) பேசியதிலிருந்து:

தில்லி நடனமா, பெயரே வித்தியாசமாக உள்ளதே?

இருளர் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனமான இதற்கு எவ்வாறு இந்தப் பெயர் வந்தது என்று தெரியாது. ஆனால் எங்களது தாத்தா, பாட்டிகளும் இந்த நடனத்தை ஆடியுள்ளனர்.

இதற்கு என்னென்ன இசைக் கருவிகள் பயன்படுத்துகிறீர்கள்?

பானையில் விலங்கின் தோலைக் கட்டி மேளம் போல் பயன்படுத்தி வருகிறோம். இதற்கு பொறை என்று பெயர். இதைத் தவிர தவில் என்னும் இசைக் கருவி, கொகல் என்னும் நாதஸ்வரம் போன்ற கருவி மற்றும் ஜால்ராவை பயன்படுத்துகிறோம்.

இந்த நடனத்தை எப்படிக் கற்றீர்கள்? ஒரு குழுவில் எத்தனை பேர் இருப்பார்கள்?

இந்த நடனத்தை யாரும் முறைப்படி கற்பதில்லை. எங்கள் மலைவாழ் கிராமங்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது உடலை மூன்று நாள்கள் கழித்துத்தான் புதைப்போம். அது எங்கள் வழக்கம். அந்த மூன்று நாள்களிலும் இந்த இசைக் கருவிகளை இசைத்து தில்லி நடனமாடுவது எங்களது சடங்குகளில் ஒன்று.

மேலும் திருவிழாக்கள் போன்ற விசேஷங்களிலும் இந்த நடனமாடுவோம். இதில் ஆண், பெண் வயது பாகுபாடு இல்லாமல் கலந்து கொள்வோம். இதனால் இருளர் இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் இது அத்துப்படி.

இந்த நடனமாட குறைந்தது 10 பேர், அதாவது 5 ஆண்கள், 5 பெண்கள் இருக்க வேண்டும். இங்கு நாங்கள் 40 பேர் வந்துள்ளோம்.

பாடிக் கொண்டே ஆடுகிறீர்களே, அவற்றை இயற்றியது யார்?

அதுவும் எங்களுக்குத் தெரியாது. எங்கள் ஊரில் பரம்பரை பரம்பரையாக ஏராளமான கிராமியப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. அவை எங்கள் மொழியைப் போலவே தமிழும் மலையாளமும் கலந்தே இருக்கும்.

இங்கு நான்கு பாடல்களைப் பாடி ஆடினோம். சிறு குழந்தைகளுக்கும் இந்தப் பாடல்கள் தெரியும். அதேபோல் இசைக் கலைஞர்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் வாசிப்பார்கள். கொகல் கருவியைத் தொடர்ந்து 3 மணி நேரம் என்றாலும் எங்களால் வாசிக்க முடியும்.

செம்மொழி மாநாட்டில் நடனமாடியது குறித்து?

மிகவும் இன்ப அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. எங்களை நடனமாட அழைத்தபோது நாங்கள் அதை நம்ப மறுத்துவிட்டோம். ஏனெனில் தில்லி நடனத்தை கிராமத்தைத் தவிர இதுவரை வெளியில் ஆடியது கிடையாது.

நாங்கள் கிராம மக்களே தவிர தொழில்முறை நடனக் கலைஞர்கள் இல்லை. இதனால் எப்படிச் செய்வது என்று முதலில் புரியவில்லை. பிறகு வாரக் கணக்கில் தனிப் பயிற்சி மேற்கொண்டு இன்று அரங்கேற்றமும் செய்துவிட்டோம். எங்கள் நடனத்தைப் பார்த்துவிட்டு கனிமொழி எம்.பி. பாராட்டியதை மறக்க முடியாது.

உங்கள் குடும்பம், கிராம வாழ்க்கை முறை குறித்து...?

எனது தந்தை காளிமுத்து. தாயார் மருதம்மாள். இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைவாழ் மக்கள் என்பதால் கடந்த தலைமுறை வரை எங்கள் சமுதாயத்தில் படிப்பு வாசனையே கிடையாது.

ஆனால் நான் பி.எஸ்சி. படித்துள்ளேன். எனது இரண்டாவது சகோதரி சித்ரா (22) பி.ஏ. படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். மூன்றாவது சகோதரி ராதா முதலாண்டு பி.எஸ்சி.யும், கடைசி சகோதரி சகுந்தலா பிளஸ் 2-வும் படிக்கின்றனர்.

இவர்களும் இந்த நடனக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் எங்கள் கிராமங்களில் இப்போது அனைத்துக் குழந்தைகளும் படித்து வருகின்றனர். இந்தக் குழுவில் கொகல் வாசிக்கும் நாகராஜ் (25) எம்.ஏ. பொது நிர்வாகவியல் படித்து வருகிறார்.

அரிசிச் சாதத்தையே பார்த்திராமல் வெறும் களியையே உண்டு வந்த நாங்கள் இப்போது மாறிவிட்டோம். அதேபோல் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு கிழங்கு தோண்டிக் கொண்டிருந்த நாங்கள் கல்லூரிக்குச் சென்று படிக்கத் தொடங்கிவிட்டோம்.

மேலாடை உடுத்தாமல் இருந்த நாங்கள் நாகரிக உலகுக்கு மாறிவிட்டோம். கோவை தமிழ் மாநாட்டின் மூலம் எங்களை மட்டுமே அறிந்திருந்த மக்களுக்கு எங்கள் கலையையும் விளக்கிவிட்டோம் என்றார் மகிழ்ச்சியாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.