/

தமிழர்களின் அடையாளம்!

திருநெல்வேலியை மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடியுடன் இணைக்கும் நாற்கரச் சாலையின் ஓரத்தில் ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

News image
அருங்காட்சியகம்
Updated On :21 பிப்ரவரி 2026, 10:47 pm

தினமணி செய்திச் சேவை

பொ.ஜெயச்சந்திரன்

திருநெல்வேலியை மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடியுடன் இணைக்கும் நாற்கரச் சாலையின் ஓரத்தில் ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

'இந்தியர்களுக்குப் புகைக்கும் பழக்கத்தை 300 ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசியர்கள்தான் அறிமுகப்படுத்தினர்' என்பார்கள். ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்குப் புகைக்கும் பழக்கம் இருந்துள்ளதற்கான சான்றாகப் பழைமையான சுடுமண்ணால் செய்த புகைப்பான்கள் பொருநை ஆற்றோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Story image

இந்த அருங்காட்சியகம் குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் சி.சுதாகர் கூறியது:

'பண்டைய மக்கள் பயன்படுத்திய பித்தளை மணிகள் இங்குள்ளன. இந்த மணிகளை அந்தக் கால மக்கள் தங்கள் ஆடு, மாடுகளின் கழுத்தில் கட்டப் பயன்படுத்தியிருக்கலாம். இந்த மணிகள் எழுப்பும் ஒலி, மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகளைக் கண்காணிக்கப் பயன்பட்டிருக்கும். பனையூர், திருச்செந்தூர், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் பல உருவங்களில் தொல்லியல் எச்சப் பாறைகள், 'தமிழி' எழுத்துகள் மாதிரிகள், வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் எடுத்துவந்து இங்கே காட்சிப்படுத்தலாம்.

அருங்காட்சியக வளாகத்திலேயே பார்வையாளர்கள் மண் பானைகளைச் செய்து பழகவும், செய்த பானையை எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யலாம். இவையெல்லாம் என் கோரிக்கைகள். குளிரூட்டப்பட்ட அரங்குகளாக உள்ள அருங்காட்சியகத்தில் பாரம்பரிய உணவுகளும் விற்பனையாகின்றன.

திருகுச் சொம்பு:

திருகுச் சொம்பு என்பது சொம்பின் கழுத்திலும், மூடியிலும் மறையை ஏற்படுத்தி வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மூடியின் மேல் ஒரு கைப்பிடியும் இருக்கும். பாலை நிறைத்து, மறை உள்ள மூடியை சொம்பில் திருகி மாட்டிவிடலாம். பின்னர், மூடியின் மேல் உள்ள கைப்பிடியைப் பிடித்துப் பால் நிறைந்த இந்தச் சொம்பைத் தூக்கிச் செல்லாம். ஒரு சொட்டுப் பால்கூடச் சிந்தாது. 4,500 ஆண்டுகளுக்கு முன்பே, முன்னோர்கள் வடிவமைத்துள்ள இந்தச் சொம்பு ஆதிச்சநல்லூரில் காணப்பட்டுள்ளது.

கரகாட்டக் கும்பம்:

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கரகாட்டக் கும்பத்திலும், ஒரு கிளியைச் சுற்றி இரண்டு சேவல் பொம்மைகளைச் செய்துள்ளனர்.

மேசை அலங்காரப் பொருள்கள்:

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மேசையில் வைக்கும்படியான அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கலைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது ஒரு பெரிய எருமையைச் சுற்றி 10 தாமரை மொட்டுகள் உள்ள கலைப்பொருள். இது பித்தளையில் செய்யப்பட்டது.

ராட்டினம்:

குதிரை, மயில், பிற நவீன வாகனங்கள் சுற்றி வருவது போன்ற ராட்டின மாதிரியில் நான்கு ஆடுகள் சுற்றி வருவது போல் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆட்டின் முதுகிலும், ஒரு கம்பியைப் பிணைத்து மைய அச்சுடன் அழகாக இணைத்துள்ளனர். சிறுவர்கள் ஆட்டின் முதுகில் அமர்ந்தபடி அந்தக் கம்பியில் சாய்ந்துகொள்ளலாம். கீழே விழுந்துவிடாமல் இருக்க ஆட்டின் கொம்புகளைக் கைக்கு ஒன்றாகப் பிடித்துக் கொள்ளலாம்.

சங்கு வளையல் மோதிரங்கள்:

கொற்கையில் கண்டெடுக்கப்பட்ட சங்கு வளையல்களும், விதவிதமான மோதிரங்களும் அக்கால மக்களின் செழிப்பான வாழ்க்கையைப் பறைசாற்றுகின்றன.

சீட்டா ஓவியம்:

வாசுதேவநல்லூருக்கு அருகேயுள்ள திருமலாபுரம் எனும் கிராமத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பானையில் சிறு சிறு பொட்டு வைத்து வரைந்த ஓவியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிவிங்கப்புலி. இதை ஆங்கிலத்தில் 'சீட்டா' என அழைப்பார்கள். இந்தப் புலிதான் புவியில் மிக வேகமாக ஓடும் உயிரினம். ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் சீட்டாவின் ஓவியம் உள்ளது.

கருவிகளின் அணிவகுப்பு:

இன்றும் பயன்பாட்டில் உள்ள பாளை அருவாள், பன்னருவாளின் வடிவமைப்புகள் 5,345 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை உணர்த்தும் வகையில், பழங்காலக் கருவிகள் அருங்காட்சியகத்தில் உள்ளன'' என்கிறார் சுதாகர்.

Story image

இதுகுறித்து முதுகலை தொல்லியல் கள ஆய்வு மாணவியர் ரா.மீனா, ம.சுகிர்தா, பெ.தீபா, ரா.ராஜம் ஆகியோர் கூறியது:

'பொருநை ஆற்றோரத்தில் அகழாய்வில் எடுக்கப்பட்ட அழகிய வளையல்கள், தோடுகள், சங்கிலி, ஆபரணங்கள், இவற்றைச் செய்ய வெண்சங்கு, சூதுபவளம், படிகம், மரகதம், முத்துகளுடன் தங்கத்தையும் தாராளமாகப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். இவை யாவும் தமிழர்களின் செழுமையின் நீண்ட வரலாற்றையே பறைசாற்றுகின்றன.

பொருநை ஆற்றோரத்தில் கிடைத்த விளையாட்டுப் பொம்மைகள் இங்குள்ளன. சுமார் 4500 ஆண்டுகளுக்கு மேலான முகம் காட்டும் கண்ணாடியானது ஆதிச்சநல்லூரில் கிடைத்தது. இதே போன்றதொரு கண்ணாடி சிந்துவெளிப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொற்றவை ஓவியம்: வீரத்தின் அடையாளமான கொற்றவையை ஒரு பானை ஓட்டில் சிற்றிடையுடன் வரைந்துள்ளனர். இவளின் நிமிர்ந்த மார்பும், நேர்கொண்ட பார்வையும், ஒய்யாரமாக ஒரு மானுடன் நிற்கும் அழகும், அணிந்திருக்கும் மெல்லிய உடையும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இவளின் உடை

இன்றைய நாகரிக உடைகளுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல. இவள் அருகே ஒரு மான் நிற்கிறது. எந்த இக்கட்டான சூழலையும் சமாளிப்பவள். இளைய தலைமுறையினரும், பொதுமக்களும் அவசியம் காண வேண்டிய இடம் பொருநை அருங்காட்சியகம்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.