/

மனுவுக்குப் போட்டியாக ரிதம்...

நீரஜ் சோப்ரா 2024 பிரஸ்ஸல்ஸ் டயமண்ட் லீக்கில் எதிராளி வீசியதைவிட ஒரு செ.மீ. குறைவாக ஈட்டி எறிந்ததால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

News image
நீரஜ் சோப்ரா- Picasa
Updated On :22 செப்டம்பர் 2024, 12:05 pm

சுதந்திரன்

நீரஜ் சோப்ரா 2024 பிரஸ்ஸல்ஸ் டயமண்ட் லீக்கில் எதிராளி வீசியதைவிட ஒரு செ.மீ. குறைவாக ஈட்டி எறிந்ததால் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2020 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ், செப். 14- இல் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற போட்டியில் 87 .86 மீ. தூரம் ஈட்டி எறிந்திருந்தார்.

நீரஜ் எறிந்த தூரத்தைவிட ஒரு செ.மீ. கூடுதலாக வீசியவர் முதல் இடத்தைப் பிடித்தார். நீரஜ் பிரஸ்ஸல்ஸில் களம் கண்டபோது, இடது கை உடைந்திருந்தது. அந்த நிலையிலும் போட்டியிட்டு போராடி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

'பிரஸ்ஸல்ஸில் அபாரமாக ஈட்டியை வீசியுள்ளீர்கள். நீங்கள் விரைவில் குணமடையவும், வரும் ஆண்டுகளில் மேலும் பிரமாதமான வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்' என்று மனு பாக்கர் சிறப்புச் செய்தியை நீரஜ்ஜிக்கு அனுப்பியுள்ளார்.

ஏற்கெனவே மனு - நீரஜ் பாரிசில் சந்தித்துப் பேசியதை வைத்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேச்சு எழுந்த நிலையில், இந்த வாழ்த்து முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

'நான் பரதநாட்டியம் கற்று வருகிறேன். எனக்கு நடனங்கள் பிடிக்கும். நான் ஒலிம்பிக்ஸிக்காக, பாரிஸ் சென்றிருந்தபோது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பயிற்சி எடுத்திருக்கிறேன். இப்போது துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு மூன்று மாத இடைவெளி விட்டிருப்பதால், பரதநாட்டிய பயிற்சியை வீட்டில் தொடருகிறேன்'' என்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பரத நாட்டிய பயிற்சி படத்தையும், காணொளியையும் வெளியிட்டுள்ளார் மனு பாக்கர்.

ஒலிம்பிக்ஸில் இரட்டைப் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான மனு பாக்கருக்கு "டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் தனது புதிய தயாரிப்பான சாம்பல் நிற எலெக்ட்ரிக் காரான "கர்வ்'வை மனு பாக்கருக்கு அன்பளிப்பு செய்திருக்கிறது. இருக்கையில் தலை சாய்க்கும் இடத்திலும், சீட் பெல்ட்டிலும் "மனு பாக்கர்' என்று பெயரைப் பொறித்துள்ளது.

பயிற்சியிலிருந்து இருந்து மூன்று மாத ஓய்வில் இருக்கும் மனுவால் சில பெண் வீராங்கனைகளுக்கு தில்லியில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா தில்லியில் நடத்தும் இந்த ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை இறுதி போட்டிகளில் இடம் பெறும் 12 போட்டிகளிலும் துப்பாக்கி சுடும் வீரர்களைக் களமிறக்குகிறது. இதன்படி, பெண்கள் பிரிவில் ஏர் பிஸ்டல், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் ஆகிய இரண்டுக்கும் ரிதம் சங்வானுடன் 23 இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் களமிறங்குகிறார்கள்.

பாரீஸ் விளையாட்டுப் போட்டியில் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்ற ரிதம் சங்வான் தவிர, அர்ஜுன் பாபுதா, அர்ஜுன் சிங் சீமா, அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, ஆனந்த்ஜீத் சிங் நருகா, மகேஸ்வரி சவுகான், ராஜேஸ்வரி குமாரி மற்றும் ஷ்ரேயா சிங் ஆகியோர் துப்பாக்கி சுடும் வீரர்களாக உள்ளனர்.

இதில் ரிதம் சங்வான் எந்த வேளையிலும் மனு பாக்கருக்கு போட்டியாளராக மாறலாம் என்று சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.