4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பழமையும், பாரம்பரியப் பெருமையும்..!

'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது முன்னோர்களின் வாக்கு.

News image
பிரசன்னா
Updated On :10 நவம்பர் 2024, 10:56 am

வ. ஜெயபாண்டி

'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால், கோயில்கள் சூழ அமைந்த ஊர்களைப் பட்டியலிட்டு அவற்றின் பெருமைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த முப்பத்து நான்கு வயதான பிரசன்னா.

பாரம்பரியத்தையும், பழமைத் தன்மையையும் காக்கும் வகையில் செயல்பட்டுவரும் அவர், பொறியியல் தொழில்நுட்பப் பட்டதாரி என்பதோடு, ஆரோவில் அறக்கட்டளையின் ஊழியரும் கூட!

'புதுவை, தமிழ்நாட்டு பெருமாள் கோயில்களின் பாரம்பரியம், பழம்பெருமை மாறி விடக் கூடாது' என்பதற்காக தனிமனிதராகச் சட்டப் போராட்டங்களையும் நடத்திவருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'எனது பூர்வீகம் தமிழ்நாட்டின் மாயவரத்தை அடுத்துள்ள தேரெழுந்தூராகும். எனது அப்பா டி.எஸ்.ஆர்.வாசன், புதுச்சேரியில் காவல் துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளர். ஆன்மிகவாதியான அவரது பங்களிப்பு, புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பெருமாள் கோயில் திருப்பணிகளில் இருக்கிறது.

எனக்கும் பெருமாள் மீது அதீத பக்தி. சிறு வயது முதலே கோயிலுக்குச் சென்றால், அதன் பாரம்பரியம், பக்தி, பழம்பெருமைகளை மறக்காமல் கவனத்தில் கொள்வேன். அதில் உறுதியாக இருக்கின்றேன். அதனாலேயே தொழில்நுட்பக் கல்வி பயின்றும், தொழில் செய்து, பக்தி காரியங்களில் கவனம் செலுத்திவருகிறேன்.

புதுவை, தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில்கள் பண்பாட்டு பொக்கிஷங்களாகத் திகழ்பவையாகும்.

புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோயில்களின் சிறப்பம்சங்கள் குறித்த ஆவணங்களைச் சேகரித்துள்ளேன். அவை பிரெஞ்சு காலத்தில் மாற்றத்துக்குள்ளான நிலை, தற்காலத்தில் அவை எதிர்கொண்ட மாற்றங்கள் தொடர்பாக ஆவணத் தரவுகளைத் தொகுத்துள்ளேன். தேர்களில் பிரெஞ்சு காலத்தில் திசை திருப்பும் கருவியை பொருத்தியிருக்கிறார்கள் என்பதும் ஆயிரம் ஆண்டு கடந்த ராமாயண ஓவியத்தைப் பாதுகாத்தார்கள் என்பதும் பிரமிக்க வைக்கிறது.

ஆனால், தற்போது அந்தப் பாரம்பரியத்தைக் கூட நம்மால் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டதை அறிந்தே சட்ட ரீதியாக அவற்றை காப்பாற்ற போராடிவருகிறேன்.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், சீர்காழி, சிதம்பரம், மாயவரம் உள்ளிட்ட ஊர்கள் கோயில்களின் பூமியாகவே உள்ளன. அவற்றில் சீர்காழியில் பல்லவர், சோழர் காலக் கோயில்கள் அதிகமாக உள்ளன. வைணவத்தில் 108 திவ்ய தேசக் கோயில்களில் பெரும்பாலானவை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில்தான் அமைந்துள்ளன.

எந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்தப் பகுதிகளில் மட்டும் அதிக அளவில் பெருமாள் கோயில்கள் அமைந்திருக்கின்றன. ராமானுஜர் காலம்தொட்டே இந்தப் பகுதியில் அர்ச்சகர்களால் கோயில்கள் பாதுகாக்கப்படுகின்றன. தங்களது வாழ்வோடு இணைந்த கோயில்களை அவர்கள் உயிருக்கும் மேலாகப் போற்றி பாதுகாத்துவருகின்றனர்.

கோயில்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்போதுதான், அவை பாழடைந்து சிதைகின்றன. அத்தகைய நிலையிலிருந்து மாறுபட்டதாலேயே சீர்காழியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பும் அரசர்கள், அந்நியர்கள் என்று பலரால் கோயில்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

சீர்காழியில் உள்ள திருவெல்லக்குளம், தேரெழுந்தூர், திருநாங்கூர் ஆகியவை அருகருகே அமைந்துள்ள ஊர்களாகும். இந்தப் பகுதிகளில் மட்டும் 11 பெருமாள் கோயில்களும், 11 சிவன் கோயில்களும், 5 நரசிங்கப் பெருமாள் கோயில்களும் உள்ளன. சிறிய பகுதிக்குள் பெரிய பெருமாள் கோயில்கள் இருப்பதும் சிறப்பாகும்.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரின் சொந்த ஊர் திருக்குறையலூராகும். அதனால், இங்குள்ள அனைத்துப் பெருமாள் கோயில்களையும், திருமங்கையாழ்வாரே மங்களாசாசனம் செய்துள்ளார். அதில் திருநாங்கூரில் மட்டும் புருஷோத்தமன் கோயில், ராமர் பூஜை செய்த செம்பொன்செய்கோயில், திருத்தெற்றி ஏம்பலம் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், குடமாடும் கூத்த பெருமாள் கோயில், நாராயணப் பெருமாள் கோயில் என ஆறு கோயில்களும் 108 திவ்ய தேசப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனிச் சிறப்பும், பரிகார அருள்பாளிப்பும் இருக்கின்றன. அதிலும் பெருமாள் கோயில்கள் புடை சூழ திருநாங்கூர் ஊர் அமைந்திருக்கிறது. இங்கு நரசிம்மர் கோயில், சிவன் கோயில்களும் உள்ளன. தை அமாவாசையில் இந்த ஊரில் உள்ளூர், சுற்றுப்புறப் பகுதியில் உள்ள கோயில்களின் 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது சிறப்பானதாகும். அந்த விழாவில் திருமங்கையாழ்வாரது ஒவ்வொரு மங்களாசாசனமும் திருக்கோஷ்டியினரால் பாடப்பெற்று, அதற்கான பூஜையும், மாலை மரியாதையும் அளிக்கப்படுவது தமிழ் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இதுபோல தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களும், ஊர்களும் கூட கோயில்கள் நிறைந்தே காணப்படுகின்றன.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாசாரப் பண்பாட்டையும் கோயில்களே அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை காப்பாற்றியும், பாதுகாத்தும் வருகின்றன. பக்தி இலக்கியங்கள் வாயிலாக அதை அனைவரும் அறியலாம். ஆனால், கோயில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டால்தான் தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் வருங்காலத் தலைமுறைக்கும் நாம் எடுத்துச் செல்ல முடியும் என்பதால், அத்தகைய பணியில்தான் ஈடுபட்டுவருகிறேன். அதற்காக கோயில்களை புகைப்படம், விடியோவாக ஆவணப்படுத்திவருகிறேன்.

கோயிலுக்குள் உள்ள பழமை அம்சங்கள், அவை அமைக்கப்பட்டதற்கான காரணங்களை முழுமையான ஆய்வுக்கு உள்படுத்திவருகிறேன். இறையருள் இருப்பதால், தேடிப் போகும் ஆவணங்கள் கிடைக்கின்றன. அதனடிப்படையில் கோயிலில் ஏதாவது மாற்றம் செய்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்டோருக்கு தெரிவிப்பேன்.

இதனால் பழமையும், பாரம்பரியப் பெருமையும் பாதுகாக்கப்படுகிறது. என்கிறார் பிரசன்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.