தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இருப்பது அரண்மனை வளாகம். பிற்காலத்தில் தஞ்சாவூருக்கு வந்த நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனை முழுவதும் செங்கல், கருங்கல், சுண்ணாம்பு, மரம் போன்ற அடிப்படை பொருள்களைக் கொண்டுள்ளது. இதில், 190 அடி உயரத்தில் 8 அடுக்குகளுடன் வானுயர்ந்து நிற்கும் ஆயுத கோபுரம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
கோயில் கோபுர வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை நாயக்கர் காலத்தில், "இந்திரா மந்திரம்' என அழைக்கப்பட்டது. கீழே அகலமாகவும், மேலே செல்ல, செல்ல குறுகலாகவும் கோயில் கோபுரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது.
செங்கற்கள், சுண்ணாம்பு கலவையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் நாயக்கர் கால கட்டடக்கலையான வளைவுகள், அழகிய பூ வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இதேபோல, உச்சியைச் சென்றடைவதற்கு ஒவ்வொரு அடுக்கிலும் படிக்கட்டுகள் உள்ளன.
அரண்மனை வளாகத்திலுள்ள ஆயுத கோபுரம், மணிக் கோபுரம், தர்பார் கூடம், கலைக்கூடம் ஆகியவை அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆயுத கோபுரத்தின் முதல் அடுக்கில் வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய பழங்கால திமிங்கலத்தின் 92 அடி நீள எலும்புக்கூடு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்ட பழங்காலக் கற்சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
எல்லோரையும் கவரும் மிக உயரமான ஆயுத கோபுரம் புனரமைக்கப்படாமல் பறவைகளின் எச்சம் மற்றும் மழையால் பாசி படர்ந்தும், செடிகள் முளைத்தும் பொலிவிழந்து வந்தது. இதனால், இந்தக் கோபுரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த ஆயுத கோபுரம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியது:
'அந்தக் காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர்களிடம், அங்குள்ள கோயில்களைத் தாக்கும் பழக்கம் இல்லை. எனவே, எதிரிகளிடையே இது கோயில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவர்களைத் திசை திருப்புவதற்காக அரண்மனை வளாகத்தில் கோபுர வடிவில் இந்த "இந்திரா மந்திரம்' கட்டப்பட்டிருக்கலாம்.
தஞ்சாவூர் மீது எதிரிகள் படையெடுத்து வருகின்றனரா என்பதைக் கண்காணிப்பதற்கும் இந்தக் கோபுர கட்டடம் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கோபுரத்தின் கீழ் படை வீரர்களுக்கான போர்க்கருவிகள் குவிக்கப்பட்டிருந்தன.
எதிரிகள் படையெடுத்து வரும்போது ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஆயுத கோபுரத்துக்கும், மணிக் கோபுரத்துக்கும் இடையிலுள்ள தர்பார் கூடமும் உள்ளது.
பின்னாளில் மராட்டியர்கள் படையெடுப்பால் விஜயராகவ நாயக்கர் மரணமடைந்த பிறகு, இந்திரா மந்திரத்தில் ராணிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வந்த மராட்டியர்கள் அரண்மனையைப் புதுப்பித்து பராமரித்து வந்தனர். அப்போது, இந்த இந்திரா மந்திரமும் பராமரிக்கப்பட்டது. மராட்டியர் காலத்திலும் இந்திரா மந்திரத்தில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
மராட்டியர்களுக்கு பிறகு வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சியிலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயுதங்களும் இந்த இந்திரா மந்திரத்தில் இடம்பெற்றன. எனவே, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கட்டடத்துக்கு ஆர்செனல் டவர் (ஆயுத கோபுரம்) என பெயர் மாறியதாகக் கூறப்படுகிறது.
பிற்காலத்தில் இங்கிருந்த துப்பாக்கி குண்டுகள் திருச்சி ஆயுதப்படைக்குக் கொண்டு செல்லப்பட்டது'' என்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியத் துறையினர் கூறியது:
'ஆயுத கோபுரம் புதுப்பிக்கும் பணி ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. ஏற்கெனவே எப்படி இருந்ததோ, அந்தப் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில், கோபுரத்தின் வெளிப்புறம் பாசி, பறவைகளின் எச்சத்தை நீக்கிவிட்டு, பழைமை மாறாமல் வர்ணம் பூசப்பட்டது. இதேபோல, உள்புறமும் தூய்மைப்படுத்தப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்தப் பணி அக்டோபர் 3 ஆவது வாரம் நிறைவடைந்தது'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முருகன் கோயிலில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காளி கோபுரம் அகற்றம்

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதியுதவி

காலாவதியாகிறது அமெரிக்கா - ரஷியா அணு ஆயுத ஒப்பந்தம்!

சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்கம்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

