நிலவில் சோறூட்டும் காலம்!
நிலவில் ஆக்ஸிஜனை உள்ளடக்கிய தனிமங்கள் இருப்பதாகவே கருத முடிகிறது.


"நிலவில் ஆக்ஸிஜனை உள்ளடக்கிய தனிமங்கள் இருப்பதாகவே கருத முடிகிறது. அப்படி இருந்தால் நிச்சயம் நிலவில் குழந்தைக்கு சோறூட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை'' என்கிறார் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியை கே.வி.பி.லதா.
சந்திரனின் தரைப் பகுதி தனிமங்களின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் அவரிடம் பேசியபோது:
"எனது பூர்விகம் தஞ்சாவூர். அப்பா கலால் துறை அலுவலராக இருந்ததால் சிறுவயதில் ஹைதராபாத் சென்றோம். அங்கு படிப்பை முடித்து "உலகம் உருவான அடிப்படைத் தனிமம்' குறித்த ஆய்வில் ஈடுபட்டேன்.
கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நிலவில் உள்ள தனிமங்களை அடையாளம் காணும் வகையிலான ஆய்வை மேற்கொண்டு வருகிறேன். எனது ஆய்வுக்கான 30 புகைப்படங்களை சந்திராயன் 1, சந்திராயன் 2 ஆகியவற்றின் மூலம் பெற்றுள்ளேன். தற்போது சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் தரவுகளையும் பெற முயற்சித்துவருகிறேன்.
எனது ஆய்வின்படி நிலவில் உள்ள தனிமங்களின் புகைப்பட படிம வடிவத்தையும், புவியிலுள்ள தனிமப் படிவங்களையும் ஆய்வகத்தில் வைத்து ஒப்பீடு செய்து அடையாளப்படுத்தும் வகையிலே அமைந்துள்ளது.
சந்திரன் பரப்பில் சுமார் 300 கி. மீ. பரப்பு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படங்கள் சந்திரனின் வடக்குப் பகுதியில் உள்ள வெளிச்சம் உள்ள பரப்பில் எடுக்கப்பட்டவையாகும். சந்திரனில் சோடியம், அலுமினியம், சிலிகான், ஆக்ஸிஜன், கால்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய "பிளாஜியோ கிலாசி' என்ற தனிமமும், மெக்னீசியம், இரும்பு, சிலிகான், ஆக்ஸிஜன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆலிவின் என்ற தனிமமும் உள்ளதாக அனுமானித்திருக்கிறேன். இதை சந்திராயன் 3 விக்ரம் லேண்டரின் பரிசோதனை முடிவுகள் நிரூபிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. எனது ஆய்வில் புவியியல் துறை பேராசிரியை என்.குசுமாவும் இணைந்துள்ளார்.
நிலவில் உள்ள தனிமங்கள் புவியில் இல்லாதவையாகும். எங்களது ஆய்வு நிலவில் குறிப்பிட்ட பள்ளத்தை மையமாக வைத்தே அமைந்துள்ளது. "கோபர்நிகஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள,அந்தப் பள்ளமானது சிறு கோள்கள் நிலவில் மோதியதால் கூட ஏற்பட்டிருக்கலாம். அப்படி மோதிய சிறுகோள்களின் தனிமங்கள் கூட நிலவின் பள்ளத்தில் படிந்திருக்கலாம்.
நிலவை நோக்கிய அனைத்து ஆராய்ச்சிகளும் எதிர்காலத்தில் அங்கு உயிர்கள் குடியேற வாய்ப்பு உள்ளதா? என்பதை ஆராயும் வகையிலேயே அமைந்துள்ளன. அதன்படி பார்த்தால், ஆக்ஸிஜனை உள்ளடக்கிய தனிமங்கள் அங்கு இருப்பதாகவே கருத முடிகிறது. அப்படி இருந்தால் நிச்சயம் நிலவில் குழந்தைக்கு சோறூட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.
நிலவின் ஆய்வில் இந்தியாவின் சந்திராயன் 3 விக்ரம் லேண்டரின் பங்களிப்பு மிக, மிக முக்கியமாகும். நிலவின் தென் பகுதியில் தடம் பதித்தது மட்டுமல்ல; அங்கு பனிப்பாறைகள் இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் முடிவானது இந்தப் புவியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகவும் இருக்கப் போகிறது.

சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் 14 நாள்களே ஆய்வில் ஈடுபட்டாலும், 5 பிரிவுகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. அதன்படி நிலவின் தோற்றம் குறித்தெல்லாம் அந்த ஆய்வு தீர்மானிக்கும்.
புவியைத் தாண்டி இன்னொரு கிரகத்தில் இந்தியர்கள் முதலில் குடியேறும் நிலையும் ஏற்படப்போகிறது. அதற்கான ஆய்வுகள் இன்னும் விரைவுப்படுத்தப்பட வேண்டியது அவசியம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...