ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும்!

தங்கர்பச்சான்... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கிறத் துடிக்கிற படைப்பாளி. காலத்தை புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உ

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

ஜி. அசோக்


தங்கர்பச்சான்... தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக, சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கிறத் துடிக்கிற படைப்பாளி. காலத்தை புகைப்படமாக்கி, அதில் கண்ணீரையும் புன்னகையையும் உறைய வைக்கும் கலைஞன். "அழகி' தொடங்கி "சொல்ல மறந்த கதை', "ஒன்பது ரூபாய் நோட்டு', "பள்ளிக்கூடம்' வரை அத்தனை படங்களிலும் நிரம்பியிருந்தது வாழ்வின் எதார்த்த துளிகள். இந்த முறை தங்கரின் அடுத்தப் படைப்பு "கருமேகங்கள் கலை
கின்றன'.

"மூடிக் கிடக்கும் மனங்களின் உள்ளே விரக்தியின் இருட்டும்; திறந்து கிடக்கும் மனங்களின் வெளியே நம்பிக்கையின் விடியலும் எப்போதும் இருக்கும்...'' தன் அழுத்தமான குரலில் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர்பச்சான்.

"அழகி' தொடங்கி உங்களது வரிசையாக வந்த எல்லாப் படங்களுமே இங்கே பேசுப் பொருளாகி இருக்கிறது..... இந்தப் படம் எப்படியிருக்கும்...

அது உங்கள் பார்வையை பொறுத்ததே. சதா இரை தேடி அலையும் மானுடம், காகம் போல் கரையும் மனம். ஜனத்திரட்சி, நெரிசல் காடு, எப்போதும் பரபரப்பு, தாளாது விம்மும் எண்ணங்கள், தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சி விவாதங்கள்... இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே. இவற்றுக்கு நடுவே நானும் ஒரு சாராசரி மனிதன். இந்த உலகம்... ஒரு மாயமான். கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்த சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள். நான் கதைக்காக வேற்று கிரகம் போகவில்லை. இதோ இப்போது பேசும் போது கூட உங்களிடம் ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. அது என் கதை வழியாக உங்களின் பார்வைக்கே வரலாம். அது இல்லாமல், ஒரு படம் அந்த மொழி சார்ந்த சமூகத்தில் விவாதத்தை முன் வைக்கிறது என்றால், அது வெற்றியே. அந்த விதமாக அது எனக்கு மகிழ்ச்சி. ஒரு படம் என்பது ஒரு விளக்கு போல. மழை, புயல், வெள்ளம் என எது வந்தாலும், அதை அப்படியே பொத்தி பாதுகாத்து ரசிகனிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படித்தான் நான் கருமேகங்கள் கலைகின்றன படத்தைப் பார்க்கிறேன். வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. இதுதான் இந்தப் படம்.

கதை எதன் பொருட்டாக நகர்ந்து வரும்...

அன்பும், மனிதமும்தான் எல்லா நொடிகளையும் மலர்த்தும். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மன பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களை பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. அன்பு, நேசம், பாசம் எல்லாமே ஒரு குறுஞ்செய்தியில் முடிந்து விடுகிறது. ஒரு கேக் வெட்டி எல்லாவற்றையும் முடித்துக் கொள்கிறோம். அந்த விதத்தில் இந்த தலைமுறைக்கு முக்கியமான கதை. தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது கதை நகருவதற்கான ஒரு வழிதான். அதைத்தாண்டி இந்த வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிக்கல்கள்.... ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்பதே இங்கில்லை. போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானூடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்..

ஓர் இயக்குநராக பாரதிராஜாவையும், கௌதம்வாசுதேவ்மேனனையும் இயக்கியது புது அனுபவமாக இருந்திருக்கும்....

பாரதிராஜாவை என்னை விட சொந்தம் கொண்டாடுபவன் இருக்க முடியாது. அவரின் படங்களும், கிரா.வின் எழுத்தும்தான் என்னை மண்ணையும் மக்களையும் நோக்கி இழுத்து வந்தது. அவர் ஒரு விதத்தில் நடிக்க வந்தவர்தான். இதில் அவரை முழுமையாக பயன்படுத்தியிருக்கிறேன். இந்த மூப்பு காலத்திலும் அவர் அவ்வளவு சுறுசுறுப்பு. இந்தக் கதைக்கு பொறுப்பு மிகுந்த நடிகர் தேவை என்பது முதல் விதி. நடிப்பை முழுத் தகுதியாக கொண்டவர் ஒருவர் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்த போதுதான், பாரதிராஜா இதன் உள்ளே வந்தார். கௌதம்வாசுதேவ்மேனன் வந்தததும் படம் இன்னும் அழகானது. அவர் என் "பள்ளிக்கூடம்' படத்திலேயே நடித்திருக்க வேண்டியது. அவர் வந்ததும் எனக்கான வேலை வாங்கும் சிரத்தை குறைந்தது. வடிவாக்கத்தை மட்டுமே நான் பார்த்துக் கொண்டேன். மற்றவற்றை அவர்களாகவே பார்த்துக் கொண்டார்கள். இரண்டு பேரும் அற்புதம். அதே போல் சிறுமி சாரல், அருவி அதிதிபாலன். இன்னொருவர் யோகி பாபு. அவர் காமெடியன் என்ற பிம்பத்தை உடைத்து, துளியும் காமெடி இல்லாமல் முழுக்க முழுக்க கதையைத் தாங்கி நிற்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி எல்லோருமே பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள்.

Story image

வைரமுத்து ஜி.வி. பிரகாஷ் ஏற்கெனவே ஹிட் கூட்டணி....

"தங்கருக்கு கஞ்சா விற்க தெரியாது. மூலிகைதான் விற்க தெரியும்...' என்று என்னை பற்றி பேசினார். அது அவரின் பெருந்தன்மை. அவர் என்னை ஒரு இலக்கியவாதியாக பார்க்கிறார். அதனால்தான் இருவரும் சேர முடிந்தது. மக்களிடம் இன்னும் சென்று சேராத அவரது கவிகள் அப்படியே இருக்கின்றன. அன்பை விதைத்து இருக்க கூடிய சொற்கள்... பிரிவை தடுத்திருக்கக் கூடிய சில சொற்கள்... ஈகோவை உடைத்திருக்கக் கூடிய சில சொற்கள்... உண்மையை உணர்த்தியிருக்கக்கூடிய சில சொற்கள்... அவரிடம் இன்னும் இருக்கின்றன. அது இங்கே சாத்தியமாகி இருக்கிறது.

இங்கே அரிதாக நடக்கிற நல்ல முயற்சிகளை பார்க்கும் போது, என்ன தோன்றும்...

அது மாதிரி நானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தோன்றும். அயோத்தி மந்திரமூர்த்தி, கடைசி விவசாயி மணிகண்டன், மேற்கு தொடர்ச்சி மலை லெனின், டூலெட் செழியன் இவர்களைப் பாராட்டுகிறேன். ஆச்சரியம் தந்தார்கள். ஆனால் நடிகர்களின் முகத்துக்கு மட்டுமே இங்கே கூட்டம் கூடுவதுதான் பிரச்னை. சமுதாயம் மாதிரி... அரசியல் மாதிரி... இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ, அப்படியே அரசனும் என்பார்கள். அது போல்தான் சினிமாவும். ஒரு தலைவனைப் போல் கலைஞனுக்கும் பங்கு இருப்பதாக நினைக்கிறேன். சினிமாவில் லாஜிக் எதற்கு என்று தப்பிப்பவர்கள், தன்னை காப்பாற்றிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான். ஒரு கதையை அதன் எதார்த்த தன்மையோடு சொல்லுகிற நிலை முதலில் வர வேண்டும். அந்த கட்டுப்பாடு இயக்குநர்களுக்கு முக்கியம். மக்களின் வாழ்க்கையை, போராட்டங்களை காட்டுகிற படங்கள் இங்கே தோற்காது என்கிற நிலை வர வேண்டும். இதுதான் தற்போதைய முதல் தேவை என்பதாக உணர்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.