ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மிகை இருந்துக் கொண்டே இருக்கும்!

சமீபத்திய சினிமாக்களில் ஆச்சரிய வரவு "போர் தொழில்' முதல் படத்திலேயே நிறைவான சினிமாவை  செய்து முடித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:12 pm

ஜி. அசோக்


சமீபத்திய சினிமாக்களில் ஆச்சரிய வரவு "போர் தொழில்' முதல் படத்திலேயே நிறைவான சினிமாவை  செய்து முடித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா.

"தீவிரத் தன்மையோடும், உண்மையோடும் எளிய மக்களுக்கு நான் போய்ச் சேர்ந்திருக்கிறேன். வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயமாக இருப்பதுதான் இங்கே சிறப்பு.  இந்த சந்தோஷமே என்னை ஒவ்வொரு நல்ல சினிமாவுக்கும் கடத்திச் சேர்க்கும்.''உள்ளங்கை ரேகை தேய்த்தபடி பேசத் தொடங்குகிறார்.

"சினிமாவுக்கு முன் பின் தொடர்பில்லாத குடும்பம். மதுரைப் பக்கம் என் பூர்வீகம். எல்லோரைப் போலவும், நானும் சினிமாவின் ரசிகன். அதுவும் நல்ல சினிமாக்களின் ரசிகன். பார்த்த படங்களை மறுநாள் பள்ளி வளாகங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதோடு சரி. மற்றபடி சினிமா உள்ளுக்குள் ஏறாது. படிப்புக்காக சென்னைக்கு பயணம். என்ஜினீயரிங் படிப்பு. அந்த நேரங்களில் நான் பார்த்த தேவர் மகன், ஹேராம் போன்ற படங்கள் உள்ளுக்குள் சினிமா ஓட்டத்தை கொண்டு வந்து போட்டன. கதையாகவும், காட்சியாகவும் அந்த கதைகள் உள்ளுக்குள் விரிந்துக் கொண்டே இருந்தன. படிப்பு முடித்து யாருமே எதிர்பார்க்காத விதமாக புதிய தலைமுறையில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வேலை. அப்போதுதான் குறும்படங்களுக்கான கதவுகள் தமிழ் சினிமாவில் திறந்தன. கார்த்திக் சுப்புராஜ் மாதிரியான இயக்குநர்களின் பாய்ச்சல் உத்வேகம் தந்தது.  நண்பர்கள் ஸ்ரீகார்த்தி, அஷ்வந்த், தேவ் ஆகியோருடன் சேர்ந்து குறும்பட உலகத்தில் பயணித்தேன்.  இப்போது நீங்கள் வந்து பேசுகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.'' 

"யாரிடமும் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நானும் தேடிப் போகவில்லை. சினிமாவை நானாகவே கற்றுக் கொண்டேன். எல்லாமே கேள்வி ஞானம் என்பார்களே... அதுதான். 

ஒவ்வொரு படத்திலும் ஒளியின் வித்தியாசமான அடுக்குகளை நேரில் இருந்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது.  அதிலிருந்து எளிமையாக எப்படி படம் செய்வது என்பதை நோக்கியே நகர்ந்து வந்திருக்கிறேன். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும், ஒரு படத்தை எளிமையாக எடுப்பதும் கஷ்டம். உணரக்கூடிய, புரியக்கூடிய, எல்லோருக்கும் புத்துயிர்ப்பை தரக்கூடியதுதான் சினிமா.'' 

"திரைக்கதைதான் கதை சொல்லும் விதத்தைத் தீர்மானிக்கிறது. பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியிலிருக்கிற புரிதல். உண்மையில் யதார்த்த சினிமா எடுப்பதைப்போல சுலபமான விஷயம் எதுவும் கிடையாது. அது அப்படியே தொடரும் என்றும் சொல்ல முடியாது.''

"எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றித் தரிசித்து அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. டெக்னாலஜி, ஒளிப்பதிவுக்கு நிறைய சுதந்திரங்களையும், வசதியையும் கொடுத்திருக்கிறது. கமல் சார் படங்களில் இருக்கும் லைட்டிங் இப்போதும் ஆச்சரியம். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கலர், ஒரு வெளிச்சம். அது அவரிடம் நான் பார்த்து வியக்கும் விஷயம். தேவர் மகன்  ஒரு லைட்டிங். ஹேராம் படத்துக்கு ஒரு லைட்டிங், நாயகன் வேறு மாதிரி, தேவர் மகன் களம் வேறு. அதற்குள் ஊடுருவிப் பார்த்தால், முழு சினிமாவையே கற்றுக் கொள்ளலாம்.  இதுவெல்லாம் அவரிடம் நான் பார்க்கும் ஆச்சரிய விஷயங்கள்.''

"இதில் எல்லாம் இருந்த திரைக்கதைதான் முதல் சுவராஸ்யம். அதை காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். இத்தனை வருட பயணம், பார்த்த படங்கள் என பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேர சேர்ந்தால் விதை துளிர்க்கும். அது போல்தான் அது. இருள் என்பது குறைந்த ஒளி என்றார் பாரதி.  ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியை எடுப்பதற்கு, நிறைய வழிகள் இருக்கலாம். 

ஆனால் அது ஒவ்வொன்றையும் முயற்சித்துக் கொண்டிருக்க முடியாது. சரியானதைத் தேர்ந்தெடுப்பதில்  சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் காட்சிக்கு சிறந்த வழி எது என்பதை பார்த்தவுடன் கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. அது கைக்கு சிக்காது. கிடைத்தால் ஒளியின் சூட்சம் புரியும்.''

"கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்கும். கனவுகள் நிறைவேறுகிற நிமிஷங்கள் நம்மையே அழகாக்கும். இந்த என் முதல் முயற்சிக்கு நல்ல வசீகர வார்த்தைகள் கேட்டு இருக்கின்றன. எல்லோருக்கும் நன்றி.''

"ஒவ்வொரு  இயக்குநருக்கும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. அதுதான் சினிமாவின் அழகு. மக்களோடு  ஒன்றி போய் கதை செய்வது மட்டும்தான்.  அதைப் புரிந்துக் கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும்.''

"மிகை என்பது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றுதான். அது கமர்ஷியல் சினிமாவின் அடிப்படை. கதையில் மிகை, நடிப்பில் மிகை, ஒப்பனையில் மிகை, வண்ணத்தில் மிகை, ஒலியில் மிகை... இதனால்தான் சில சினிமாக்க்களும் மிகையாக இருக்கிறது. சில இடங்களில் அது அழகு. சில இடங்களில் அதுவே துறுத்தல். 

இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். எது திரைக்கதையோ,  அதற்கு பணியாற்ற வேண்டும். இந்தக் கட்டாயம் இருக்கும் வரை சினிமாவில் மிகை என்பது இருந்துக் கொண்டே இருக்கும்.  மிகையில்லாத சினிமாவை இங்கே எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்....''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.