பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை !
காதலுடன் கைகோக்காத மனிதர்கள் இல்லை. காதல்மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. எழுத்தா... ஓவியமா... புகைப்படமா...


காதலுடன் கைகோக்காத மனிதர்கள் இல்லை. காதல்மட்டும்தான் அனைத்துக்கும் கிரியா ஊக்கி. எழுத்தா... ஓவியமா... புகைப்படமா... கவிதையா..அறிவியல் கண்டுபிடிப்பா...அனைத்தும் ஈரமான காதலிலிருந்துதான் உயிர்ப்பித்தது.. உயிர்ப்பிக்கிறது. அதுவும் திருமணத்துக்கு பின்பான உறவு... எங்கேயோ தொடங்கி கதையின் கருப்பொருளை தேடி வந்து நிறுத்துகிறார் இயக்குநர் ஆர்.பி. பாலா. 'லவ்- படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
கதையின் உள்ளடக்கம் எப்படி இருக்கும்...
வாழ்க்கையை ரசனையாக, அதன் போக்கில் காமெடியாக, உற்சாகமாகவே வாழ்கிறவன் பரத். வசதி வாய்ப்பு, பெரும் தேடல்கள் என எதுவும் இல்லாத மனசுக்காரன். எந்த பிரமிப்பும் ஏக்கமும் அவனுக்கு இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. வாழ்க்கைப் பற்றிய குழப்பமோ, சிக்கலோ இல்லை. மிக எளிமையாக இந்த வாழ்க்கையை அணுகுகிறான். அவன் மீது கொண்ட அன்பு மட்டுமே இந்த வாழ்வின் நிரந்தம் என்ற மனப்பக்குவம் கொண்ட மனுஷி வாணி போஜன். இந்த இரண்டு பேருக்கும் அவர்களின் காதல்தான் உலகம். வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்களுக்கு ஒரு பிரச்னை. அதன் தீர்வும், அதற்கான நிகழ்வுகளும்தான் கதை. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஒரு எளிய வாழ்க்கைதான் படம். அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை அபத்தங்களையும் அடிச்சு நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற காதல். எதையும் அடைந்து விட வேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளி விடுகிற, கவிழ்த்து விடுகிற எத்தனிப்பு இல்லை. இப்படி ஒரு மனம் வாய்த்து விட்டால் அதை விடக் கொடுப்பினை ஏது...
இந்த அளவுக்கு மென்மையான ட்ரீட்மென்ட் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்குமா...?
நிச்சயமாக... எல்லோரின் வாழ்க்கையிலும் நடப்பதுதானே. திருமணத்துக்குப் பின்பான உறவுகளில் இங்கே கசப்பு இல்லாதவர்கள் யார்... இந்தக் கதையில் புதுமையும், ரசனையும் கண்டிப்பாக உண்டு. பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. அவர்களின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போ வாசிக்கிற உங்களை விட, என்னைவிட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகா, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிற போது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது. அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்து போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடியும். திருமணத்துக்குப் பின்பு ஒவ்வொருத்தரின் வாழ்க்கை மாறும். சிலருக்கு அதிர்ச்சி காத்திருக்கும். சிலருக்கு பூச்செண்டுகள் காத்திருக்கும். நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிடோம்...நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாட்டத்தை வெளித்தோற்றத்தில் முன்வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் உறவுச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இந்தப் படம்.
பரத்... ஏற்கெனவே 'காதல்- என்ற ஹிட் படத்தை கொடுத்தவர்.... இப்போது 'லவ்- ...
இந்தக் கதையைப் போலவே அவரும் எளிமையானவர். அதுதான் அவரை அணுகி கதைச் சொல்ல எல்லோருக்கும் ஆசை. இதுதான் பரத் என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் வந்தாலும், ஒரு கலைஞனாக அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அதே வேளையில் உதவி என்று வந்தால், அவரால் முடிந்தால் செய்து விட்டுத்தான் அடுத்த வேலைக்கு போகிறார். சில நேரங்களில் வாழ்க்கையை ஆச்சரியமும், அச்சமும் கலந்து பார்க்கிறார். என் வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் விட்டு விட்டு போக கூடாது என நினைக்கிறார். பணம், புகழ், வெளிச்சம் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. தரமான கதைகளை ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருக்கிறார். இந்த நிமிஷம் நம்முடையது வாழ்ந்துடலாமே என்று நினைக்கிறார். வாய்ப்பு கிடைத்தால், இன்னொரு படத்திலும் அவரை இயக்க காத்திருக்கிறேன். இன்னொரு விஷயம்....பரத்துக்கு இது 50- ஆவது படம். அன்பும் பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம் என்பதை காட்சிகளின் வழியாக நின்று பேசியிருக்கிறேன். காதல்தான் இங்கே எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஏமாற்றி பிழைக்காதவர்கள், சுய நலமாக சிந்திக்காதவர்கள், பொய் முகம் காட்டி புன்னகைக்காதவர்கள், இந்த உலகம் கொடுத்த காதலை அதன் வழியாக நின்று தரிசிக்கிற காதல் ஜோடி. அவர்களின் பயணத்தில் வருகிற காதல் அவர்களை உன்னதமாக்குகிறது. காதல் குறித்த ஓர் உரையாடலை நிகழ்த்துவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...