சாலையில் நின்று பார்க்கும் சாமானியன்!
முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.


முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பணக்காரனையோ, கோடிஸ்வரனையோ, பலம் பொருந்திய தாதாவையை எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள், இல்லையெனில் நமக்கே எதிராக திரும்புவார்கள். அப்படி ஒரு சூழல்தான் கதை. வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். அன்பு கரம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ.வி.எஸ். சேதுபதி. "இருளில் ராவணன்' படத்தின் இயக்குநர். குறும்பட உலகில் இருந்து வருகிறார்.
அதென்ன "இருளில் ராவணன்'?
முழுக்க முழுக்க ராவணனை எல்லோரும் தோல்வியின் முகமாகத்தான் பார்க்கிறோம். இங்கேயும் ப்ளஸ், மைனஸ் எல்லாம் கலந்த ஒருவனின் வாழ்க்கைக்குத்தான் இருளில் ராவணன் என்று பெயர். வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. இந்த திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு விஷயம் என் கண்களுக்கு வந்தது. அது ஓர் உண்மை சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையை காட்டிலும் விநோதமானது. அதிசயதக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது. இது மாதிரி நடக்குமா என்று கூட தோன்றியது. அதை பின் தொடர்ந்து போய் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்த பிரச்னை நடந்துக் கொண்டே இருப்பதாக தெரிந்தது. கொஞ்சம் நிதானித்து பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்ப புள்ளி. பிளாக் காமெடியாக எழுத வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான். இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இந்த தலைப்பு என்பது எத்தனை பொருத்தமான தலைப்பு என்பது படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரிய வரும்.
கதையின் உள்ளடக்கம் பற்றி?
ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒவ்வொரு கணமும் ஓர் அனுபவம். அனுபவமே கடவுள் என்று உணருகிற போதுதான் எல்லாமே தெரிகிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் உணர்ந்தது சிறு விநாடிதான். ஆனால், அவர் கடந்து வந்த தூரம் ஒரு வனத்தை கடந்த மாதிரி. இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் மனித மோதல்கள் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு மோதல் உண்டு. ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
கதைக்கான தொடக்க புள்ளி எது?
அதிகாரம் என்பது சகல மட்டங்களிலும் நம்மை படுத்தி எடுக்கிறது. கோயில்களில், மருத்துவமனைகளில், பள்ளிகளில், சாமானியர்கள் அத்தனை பேரும் காத்திருக்க செல்வாக்கு படைத்தவர்கள முதல் ஆளாக உள்ளே போய் வருகிறார்கள். அவர்களின் தூரத்து சொந்தங்களுக்கு கூட பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. ஒரு நடிகைக்காக அடித்துக் கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸூம் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரி கடலை விற்கும் கிழவனை கொண்டு போய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்து துன்புறுத்தும். நேற்று வரை ஒன்ரையணாவுக்கு பெறாதவர்கள், கார், அடியாள்கள், செல்வாக்கு என பறக்கிறார்கள்...
எல்லாவற்றையும் சாமனியான் சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் இந்தக் கதையின் உள்ளே போனேன். புதுமுகம் துஷாந்த்... முதல் படத்திலே மூன்று வேடங்கள்.தமிழ் சினிமாவுக்கே இந்தக் களம் புதுமையாக இருக்கும். ஒரு மனிதனின் மன நிலை எப்படியெல்லாம் மாறும் என்பதை வரையறுத்து சொல்லியிருக்கிறேன். அது இல்லாமல் ஒரு கதையில் எல்லோருமே தீயவர்களாக இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் இது. "ரங்கூன்' படத்தில் நடித்த ஸ்ரீது கிருஷ்ணன் ஹீரோயின். அஜித் கோஷி, "பாய்ஸ்' ராஜன், சந்திரமெளலி, "போராளி' திலீபன், விஜய் டிவி முல்லை, என இன்னப் பிற இடங்களில் நம்பிக்கையான நடிகர்கள். "மெமரீஸ்', "க்' போன்ற படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஸ் இந்த படத்திற்கு இசை. ஆற்றல், சிக்லேட்ஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் த.கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு. "அப்பா', "போராளி', "நாடோடிகள்', "ஈசன்' போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த அ.க.ரமேஷ் எடிட்டிங். பிரபல நடன இயக்குநர் தினேஷ் நடனம். நல்ல கூட்டணி. ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...