/

மலரும் நினைவுகள்...!

ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத பருவம் பள்ளிப் பருவம்; அது மலரும் நினைவுகளாய் என்றும் மனதில் நிலைத்து நிற்கும். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:25 am

எம்.மாரியப்பன்

ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத பருவம் பள்ளிப் பருவம்; அது மலரும் நினைவுகளாய் என்றும் மனதில் நிலைத்து நிற்கும்.

1975-ஆம் ஆண்டு நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு (ஓஎஸ்எஸ்எல்சி) படித்தமாணவிகள் பெரும்பாலானோர் 47ஆண்டுகளுக்குப் பின்னர் நாமக்கல்லில் 2023-ஆம் ஆண்டு ஜன. 29-இல்ஒன்றாகக் கூடினர்.

தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்வில் இவர்கள் பங்கேற்று, தங்களுடைய பள்ளிப் பருவக் காலம், காதல், கல்யாணம், குடும்ப வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யங்களையும் ஒருவருக்கொருவர் நினைத்து பார்த்தும், அனுபவங்களைப் பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாமக்கல், சேலம், கோவை, திருச்சி, சென்னை மட்டுமின்றி, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போரும் பள்ளித் தோழிகளை காண விமானத்தில் பறந்து வந்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தோழிகளைக் கண்ட மகிழ்ச்சியில் ஆரத்தழுவி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று சந்தித்து மகிழ வேண்டும் என அவர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். தங்கள் குடும்பத்தினருடன் கைப்பேசிகளில் சுயபடம்(செல்பி) எடுத்தும், பாட்டுப்பாடியும், நடனமாடியும் சந்தோஷத்தில் திளைத்தனர். மதியம் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி பாசத்தை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியாக அமைந்தது.

Story image

இந்தச் சந்திப்பை ஒருங்கிணைத்த பத்மா, சுமதி, மணிமேகலை, பிரேமலதா கூறியதாவது:

"" 47 ஆண்டு பந்தம்; இது நாளும் தொடரும் சொந்தம். கடந்த ஆண்டு இதே நாளில் 1975-76- ஆம் ஆண்டில், 11-ஆம் வகுப்பு படித்த தோழிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை நானும், தோழிகள் சிலரும் மேற்கொண்டோம். கைப்பேசி வாயிலாக அனைவருடைய தகவல் எண்களை அறிந்து அவர்களை தொடர்பு கொண்டு இவ்வாறான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்.

2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோழிகள் சந்திப்பு ஒன்றை நடத்தியபோதும், பலரால் அதில் பங்கேற்க முடியவில்லை. தற்போது 75-க்கும் மேற்பட்டோர், நம்முடைய 47 ஆண்டு பந்தம் என்ற இந்த விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.